KGS04

கெடுமுன் கிராமம் சேர் - 4(Edit)

கற்பதும் கசடும் (Edit)

விடுதலை வேட்கையானது, ப‌ல சமயம் யாரும் செல்லாத புதிய பாதைகளில் நம்மைச் செல்ல வைக்கிறது. மந்தையுடன் போவதில் ஒரு பாதுகாப்பான உணர்வு இருப்பதால், எல்லோரும் செய்வதை நாமும் செய்ய யத்தனிக்கிறோம். ஒரு புதிய முயற்சி என்பது அபாயம் கலந்த செயலாகவும், பாதகமான விளைவுகள் வந்து விடுமோ என்ற அச்சம் தன்னுள் கொண்டதாகவுமே நம்மில் எல்லோரும் எண்ணுகிறோம். அதனால் குழப்பமான நேரங்களில், ' எல்லோரும் செய்வதையே நாமும் செய்து விடுவோமே' என்று முடிவெடுத்து விடுகிறோம்.

கிராமம் செல்வது என்பது ஒரு விதத்தில் ஒரு விடுதலை வேட்கையின் வெளிப்பாடே. நல்ல கல்வி என்பது எது, கிராமத்தில் அதை எவ்வாறு பெறுவது என்று இக் கட்டுரையில் ஆராய்வோம்.மனித இனம் பெருகி விட்டதாலும், இயற்கை வளங்களை நாம் அளவின்றிச் சுரண்டுவதால் ஏற்படும் பற்றாக்குறையாலும், ஒவ்வொரு தலைமுறையும் வாழ்வதற்கு, தனக்கு முற்பட்ட தலைமுறையை விட அதிகம் பாடு பட வேண்டியிருக்கிறது. நம்மில் 99 சதம் மக்கள், உயிர் வாழ்வதை விட, மந்தையுடன் போவதற்குத்தான் அதிகம் பாடுபடுகிறோம் . எதற்கென்று தெரியாமலே, சதா போராடிக் கொண்டிருக்கும் ஒரு அர்த்தமற்ற உயிரினமாக மானுடம் மாறிவிட்டது. தற்காலத்தில், குழந்தைகள் கல்வி என்பது இப் போராட்டங்களில் தலையாய போராட்டமாகி விட்டது!

நல்ல வாழ்க்கைக்கு நல்ல நிரந்தர வருமானம் தேவை; நல்ல வருமானத்திற்கு நல்ல வேலை தேவை; நல்ல வேலைக்கு நல்ல கல்லூரிப் படிப்பு தேவை; நல்ல கல்லூரியில் சேர நிறைய மதிப்பெண் தேவை; நிறைய மதிப்பெண்ணிற்கு நிர்ணயித்த கேள்வி பதில்களும், மனப்பாடமும் தேவை - எனவே பள்ளிக் கல்வி என்பது வெறும் கேள்வி பதில்களும், மனப் பாடமும் ஆக இருக்க வேண்டும், என்று பெற்றோரும், அரசும், மற்ற திட்டமிடுவோரும் ஏகமனதாகத் தீர்மானித்து விட்டனர். அதியமானை 'வரப்புயர' என்று வாழ்த்திய அவ்வை இன்று ஒரு மாணவனை வாழ்த்துவதானால், 'மார்க் உயர' என்று வாழ்த்தியிருப்பாள்!

கொஞ்சம் மந்தையின் வெளி வந்து சிந்திக்க முயற்சித்தோமானால், நல்வாழ்விற்குப் பெரிய வருமானம் தேவை இல்லை, நல்ல வருமானத்திற்குப் பெரிய வேலை எதுவும் தேவையில்லை, நல்ல வேலை என்று சொல்லப்படும் கணினிமுன் கட்டப்படுதலுக்கும், கம்பெனிகளுக்கு வால் பிடிப்பதற்கும் பெரிய கல்வி எதுவும் தேவை இல்லை என்பது புலப்படும். எப்படி என்று ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

ஜான் ரஸ்கின் என்னும் ஆங்கில அறிஞர், செல்வம் - பணம் இரண்டிற்கும் உள்ள வேற்றுமையைப் பற்றி மிக அழகாகவும், ஆழமாகவும் பல சிந்தனைகளைத் தந்திருக்கிறார். இவரின் 'அன் டு திஸ் லாஸ்ட்' என்ற கட்டுரை காந்தியை மிகவும் தாக்கிய ஒன்றாகும். இவரின் எழுத்துக்களில் இருந்து செல்வம் வேறு, பணம் வேறு என்ற முக்கியமான வாழ்க்கைப் பாடத்தை நான் கற்றேன். நான் அடைந்துள்ள‌ ஓரளவு விடுதலைக்கு இக் கருத்து மிகவும் உதவியது.

செல்வம் என்பது அடிப்படையானது; இடம், காலங்களுக்கு அப்பாற்பட்டது. பணம் என்பது, தான் பயன்படுத்தப்படும் இடம், காலம் இவற்றைச் சார்ந்தது. உதாரணமாக ஒரு படி நெல் என்பது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும், இன்னும் பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் அதே மதிப்பு உள்ளதுதான். ஒரு காணி நிலம் என்பதும் அது போலத்தான் - இவை செல்வங்கள்; இயல்பான மதிப்பை உள்ளடக்கியவை. ஆனால் ஆயிரம் ரூபாய் என்பது நாளுக்கு நாள், நாட்டுக்கு நாடு மாறுபடுவ‌து. தான் செலுத்தப்படும் சந்தையின் உற்பத்தி-தேவை , பதுக்கல், சூது போன்ற பல வெளிப் பரிமாணங்களின் தாக்கத்துக்கு உட்பட்டது. சந்தை இல்லையேல் பணத்திற்கு ஒரு மதிப்பும் இல்லை. செல்லாக்காசு என்ற சொல்லாடலில் இருந்து இதை நாம் உணரலாம். செல்வம் உள்ளவனால் , பணம் எளிதில் ஈட்ட இயலும்; பணத்தால் செல்வத்தைக் கொள்வது அவ்வச் சந்தையின் இயல்பைப் பொறுத்தது.சில சமயம் முடியலாம், சில சமயம் முடியாமல் போகலாம்.

ஆனால், நல்வாழ்வு வாழவோ செல்வம் மட்டுமே போதும். நல்ல செல்வந்தன் என்றால் அவனுக்குச் சில லட்சணங்கள் உண்டு: எதிர்காலத்தைப் பற்றிய பயம் இன்மை; ஆரோக்கியம்; ஓய்வு நேரம்; தெளிந்த மனம்; யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத வாழ்முறை; பொய் சொல்லத் தேவையில்லாத தொழில் ('சூதும் பல பொய் பேசிய தொழிலும் பிறர்க்கிட்டாய்' - மாணிக்க வாசகர், 'செல்வரைப் பின் சென்று சங்கடம் பேசி நிதம் பல்லினைக் காட்டிப் பரிதவியாமல்' - பட்டினத்தார் ); நல்ல காற்று, நீர், இட வசதி, வெளிச்சம் என்று பஞ்ச பூதங்களுக்கும் பஞ்சமில்லாமை எனப் பல. தற்கால வாழ்முறையில் எத்தனை பணக்காரர்களுக்கு இச்செல்வங்கள் உள்ளன ? பெரும்பாலானோர் பெரும் ஏழைகள் அல்லவோ?

'இதெல்லாம் கவைக்கு உதவாதய்யா, எனக்குப் பணம்தான் கடவுள்' என்று நீங்கள் கூறுபவர் ஆனாலும், நம்மைச் சுற்றியுள்ள பல பணக்காரர்களில் எத்தனை பேர் தாம் கற்ற கல்வியினால் பணக்காரர்கள் ஆகியுள்ளார்கள் என்று பாருங்கள். சிலர் வேலையால் பொருள் ஈட்டியிருப்பர். பலர் சுய உழைப்பினால், வியாபாரத்தினால் பொருள் ஈட்டியிருப்பர். வெகு சிலரே பெற்ற பட்டம் சார்ந்த தொழிலும் அதனால் வருமானமும் பெற்றிருப்பர். எனவே வேலைக்கும் வருமானத்திற்கும் பெரிய தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியும் நாம் வேலைதான் முக்கியம் என்று நினைத்தாலும், அத‌ற்கும் படிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரிவதில்லை. இன்று வெகு விரைவாயும், வெகு அதிகமாகவும் பணம் சேர்க்கக் கூடிய தொழிலாக, சினிமா, கிரிக்கெட்டிற்கு அடுத்து, மென்பொறியாளர் வேலையைச் சொல்லலாம்.

எல்லாப் பெற்றோரும், தன் பெண்ணும், பிள்ளையும் பி.ஈ படித்து, ஏதாவது மென்பொருள் ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி வேலைக்குச் சேர்ந்து, மென்பொறியாளராகி விட வேண்டும் என்பதே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். இதற்காக ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு போன்ற ஊர்களில் தங்கிப் படிக்கும் மனப்பாடப் பள்ளிகளும், தாயும் சேயுமாய் நாள் முழுவதும் சோறு, தண்ணியின்றி நெட்டுருப் போட வசதியாய் வாடகை வீடுகளும்,வாரத்தில் 100 மணி நேரம் பள்ளி மற்றும் ட்யூஷனும், இன்னும் எண்ணற்ற மூடத்தனங்களும் கொஞ்சமும் கூச்சமோ, வெட்கமோ, குறைந்தபட்சப் புரிதலோ இன்றி உருவாக்கி வைத்துள்ளோமே, இதுவா கல்வி?

மென்பொருள் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளர் பணி புரிந்திருக்கும் அனுபவத்தினால் என்னால் சில உண்மைகளைக் கூற முடியும். மென்பொறியாளராக வேலைக்குத் தேர்ந்து எடுக்கப்படுவோரில் 95 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் வெள்ளைக்காரனுக்கு கூலி வேலை செய்யத்தான் உபயோகப்படுகிறார்கள். அதிலும் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுபவர்கள் பெரும்பாலோர். அமெரிக்க அரசு, வொர்க் விஸா எனப்படும் வேலை அனுமதியை வழங்குவதற்கு 16 வருட கல்வி அனுபவம் கேட்கிறது. இந்த ஒரு காரணத்திற்காகத்தான் பி.ஈ படிப்பை இந்நிறுவனங்கள் குறைந்த பட்சத் தேவை ஆக்கி உள்ளன. (அனுபவமுள்ள வேலை ஆட்களுக்கு 15 வருடக் கல்வி இருந்தால் கூட விஸா கிடைக்கும்). இந்த ஒரு முட்டாள் தனத்தின் விளைவுதான் நாடு முழுவதும் பரவியுள்ள பொறியியல் கல்லூரிகளும், அதன் பின் விளைவான நெட்டுருப் பள்ளிப் படிப்பும்.

( முதல் இதழில் கெடு முன் கிராமம் சேர் என்று நான் எழுதியதற்குப் பலரும் எல்லோரும் விவசாயம் செய்ய நம்மிடம் நிலம் உள்ளதா, கிராமம் அனைவரையும் தாங்குமா என்றெல்லாம் கேட்டார்கள். இப்போது நான் கேட்கிறேன், தமிழ் நாட்டில் வருடம் 1,40,000 பேர் பொறியாளர்களாக உருவாகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நம்மிடம் வேலை உள்ளதா? 1300 கோடி முதலீட்டில் தொடங்கப் பெறும் ஒரு பன்னாட்டுத் தொழிற்சாலை 1300 பேருக்குக் கூட வேலை தருவதில்லை. இவ்வளவு பொறியாளார்களை உருவாக்கினால் அவர்களை எப்படிப் பணியில் அமர்த்துவது? இன்றே ஏகப்பட்ட பொறியாளர்கள் வேலை இன்றி இருக்கிறார்கள், இன்னும் பத்தாண்டுகள் இப்படியே போனால் சுமார் 15 லட்சத்திற்கும் மேல் பி.ஈ படித்த இளைஞர்கள் தமிழ் நாட்டில் உருவாகி விடுவார்கள். இதுவோ மேம்படுத்துதல்?)

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னரே, சாதாரணப் படிப்பாகக் கருதப் பட்ட கணித முதுகலைப் பட்டத்தைத்தான் நான் படித்தேன்; மிகச் சாதாரணமான ஒரு கல்லூரியில்தான் படித்தேன். கணினியும், மென்பொருள் திறமையும் நானாய்க் கற்றுக் கொண்டதுதான். ஆங்கிலத்தில் நன்றாக வாயடிக்கத் தெரிந்ததால் என்னால் எளிதில் வேலை பெற முடிந்தது. அடிப்படையில் எனக்குக் கணிதம் நன்றாகத் தெரிந்ததால், என்னால் மென்பொருள் நுட்பங்களை மிக எளிதில் உட்கொள்ளவும், ஆட்கொள்ளவும் முடிந்தது. நல்ல திறமைசாலிக்குத் தான் நிறுவனங்கள் வேலை தரப் போட்டியிடுகின்றன. நிறையப் படித்தவனுக்கு அல்ல. இன்று பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்களில் கேட்கப்படும் சொல்லாடல் என்னவென்றால், புதுப்பட்டதாரிகள் வேலைக்குத் தயாரில்லை (fresh graduates are not employable)என்பதுதான். ஒரு நல்ல மென்பொறியாளனாகத் தேவையானவை மூன்று விஷயங்கள்தான்

1. சரளமான ஆங்கிலப் பேச்சு

2. புதிய புதிய பிரச்னைகளை வேகமாய்ப் புரிந்து கொண்டு தீர்வு காணும் மூளை

3. ஒரு அணியில் உறுப்பினராய்ப் பிறருட‌ன் இணைந்து வேலை செய்யும் பாங்கு

இவை தவிர நேரம் தவறாமை, வாக்குத் தவறாமை, சாக்குச் சொல்லாமை, ஒளிவு மறைவற்ற பேச்சு, தெரியாததைத் தெரியும் என்று சொல்லாமை போன்ற அடிப்படை வாய்மையும் தேவை. வேலைக்கு நம்மைத் தயார் செய்வதாய்ச் சொல்லப்படும் நல்ல கல்வியில் இவை எல்லாம் எங்கே இருக்கின்றன? தற்கால மனப்பாடக் கல்வியால் மூளை மழுங்குவதும், விளையாட அல்லது பிறரிடம் பிற விஷயங்களைப் பேச நேரம் இல்லாததால் பழகும் தன்மை அழிவதும், நெட்டுருப் போடுவதால் சுயமாகச் சிந்திக்கும் திறன் முற்றிலும் நசிப்பதும் அல்லவோ நிகழ்கிறது? இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், நாம் மேற்கூறிய எதிலும், நகரமோ கிராமமோ பற்றிப் பேசவில்லை. எல்லா இடத்திலும் நாம் கற்பது கசடே என்பதுதான் உண்மை!

என் குழந்தைகள் கற்கும் கசடு என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாலும், கல்வியைச் சீர்திருத்தம் செய்ய என் ஒருவனால் இயலாததாலும், என் மகனை ஏழாம் வகுப்புடன் பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டு, நானும் என் மனைவியுமே இரண்டு வருடம் அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தோம். இப்போது 15 வயதாகும் என் மகன் IGCSE என்னும் பத்தாம் வகுப்புக்கு இணையான பாடத் திட்டத்தில் தேர்வு எழுதி விட்டு முடிவுகளுக்குக் காத்திருக்கிறான். இதை நாங்கள் தேர்ந்தெடுத்ததன் காரணம் இக் கல்வி முறையில் மனப்பாடமே இல்லை என்பதுதான். என் 11 வயது மகளும் ஒரு வருடம் வீட்டில் படித்து விட்டு, விளையாடத் தோழிகள் தேவை என்று கூறி இப்போது CBSE பாடத் திட்டத்தில் ஆறாம் வகுப்புப் படித்து வருகிறாள். உனக்குப் பிடித்தால் பள்ளிக்குப் போ; கடினமாய்த் தோன்றினால் நின்று விடு என்றுதான் நான் எப்பொழுதும் கூறுகிறேன். குழந்தைகளின் படிப்பை அவர்கள் விருப்பத்திற்கே நாங்கள் விட்டு விடுவதால் கல்வி என்பது சுமையாகவே இல்லை.

வீட்டில் கற்றுக் கொடுப்பது எளிது என்று நான் கூற வரவில்லை; அதில் பல மன உளைச்சல்களும், அதிகப்படி உழைப்பும் உள்ளன‌. ஆனால், குழந்தைகள், பிஞ்சு வயதில் இவ்வளவு பொறுப்புக்களைச் சுமப்பதும், எதிர்காலத்தைப் பற்றிய பயம் வளர்த்துக் கொள்வதும், மதிப்பெண்தான் வாழ்க்கை என்று தங்களுக்குத் தாங்களே சங்கிலிகள் இட்டுக் கொள்வதும் பார்க்கும் பொழுது நாங்கள் எடுத்த முடிவு சரி என்றே தோன்றுகிறது. இந்த IGCSE படிப்பானது இந்தியா மட்டுமின்றி 132 நாடுகளில் அங்கீகாரம் பெற்றது. இதைச் சீர்காழியில் இருந்துதான் என் மகன் கற்றான். பெரும்பகுதி விடயங்களை நாங்கள் இணைய தளத்தின் மூலம் பெற்றுக் கற்றுக் கொண்டோம்.

ஆனால் தனியாக ஒரு குழந்தை வீட்டுக் கல்வி பெறுவது மிகக் கடினமானது; பிற குழந்தைகள் அதை ஒதுக்கி விடுவார்கள் - மிகவும் தனிமைப்பட்டு விடும். நம் கருத்துக்களை நம் பிள்ளைகள் மேல் செலுத்த நமக்கு அதிகாரம் இல்லை. விளையாட நண்பர்கள் வேண்டும் என்ற தேவையினால், ஒரு வருடம் என் மகன், கோவையிலுள்ள Monarch என்னும் IGCSE பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படித்தான் - அதன் பின் அவன் மீண்டும் வீட்டிலேயே ஆறு மாதம் கற்றுப் பத்தாவது தேர்வு எழுதியுள்ளான். ஒட்டு மொத்தப் பொதுத் தேர்விலும் அவன் ஒரு வார்த்தை கூட மனப்பாடம் செய்யாமல், நன்றாய்ப் புரிந்து படித்தான். இதனால் அவன் அறிவு வளர்ந்தது என்றே எனக்குத் தோன்றுகிறது.

தற்போது பி.எஸ்ஸி கணிதம் பயில்வதற்காக 12ம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம், கணினியியல் ஆகிய மூன்றும் படிப்பதற்காய்க் கோவை சென்று Monarch பள்ளியில் தங்கிப் படிப்பதாய் முடிவு செய்துள்ளான். அவன் ஆசையும் மென்பொறியாளன் ஆவதுதான் - ஆனால் அதை எளிதாய் அடைவதற்கு அவனுக்கு நான் உதவி செய்கிறேன்- அவன் கருத்துக்கள் எனக்கு ஏற்பாக இல்லையெனினும்!.

கிராமத்தில் தரமான கல்வி பெற ஒரு நல்ல வழி என்னவென்றால், ஒரு நான்கு-ஐந்து ஒத்த வயதுடைய குழந்தைகளை எட்டாம் வகுப்புடன் பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டு, நல்ல ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் மேற்பார்வையில், வீட்டுக் கல்விமுறையில் கற்பதுதான். இதனால் ஆசிரியருக்கு ஒரு வேலை வாய்ப்பு உருவாவதுடன், குறைந்த செலவில் பிள்ளைகளும் பயிலும். முதல் சுற்று மாணவர்கள் வெற்றிகரமாக வந்து விட்டால் இம்முறை ஏற்கப்பட்டு, அண்மைப் பள்ளிகள், திண்ணைப் பள்ளிகள் உருவாகலாம். இது நடைமுறையில் கடினம் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

குப்பைகள் அடைக்கப் பட்ட அறையில் காற்றும், வெளிச்சமும் உண்டாக்க ஒரே வழி அக்குப்பைகளைக் களைவதுதான். இப்போதுள்ள பள்ளிகளில் நாம் கற்பதெல்லாம் வெறும் கசடு மட்டுமே ஆனதால், பள்ளிக்குப் போகாததுதான் நல்ல கல்வியையும், அறிவு வளர்ச்சியையும் உருவாக்கும். கிராமமாயினும், நகரமாயினும் தற்கால மதிப்பெண்-மனப்பாடத் திட்டத்தில் எந்த அறிவு வளர்ச்சியும் இல்லை என்பது நிதர்சனம். விடை தெரியாத கேள்விகளில் குழந்தை வளர்ப்பும் ஒன்று. அடுத்து வரும் இதழ்களில் கிராமம் செல்வதன் பிற பரிமாணங்களை ஆராய்வோம்.

இப்போது கட்டுரையின் முதல் பத்தியை மீண்டும் படிக்கவும்!


Powered by LionWiki. Last changed: 2014/05/26 04:50 Erase cookies Edit History