KGS05

கெடுமுன் கிராமம் சேர் - 05 - உழவன் பாலா(Edit)

வந்தனைத் தொழில்கள் (Edit)

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் மகாகவி. இன்று உழவும் தொழிலும் மிகவும் சேய்மைப் பட்டு, கிராமத்தில் உள்ள ஒரே தொழில் விவசாயம் என்றும் அதுவும் அவ்வள‌வு லாபகரமாக இல்லை என்றும் மாறி விட்டது. நகரத் தொழில்களோ, சற்றும் வந்தனைக்குத் தகுதி அற்றவையாய், பெரும் முதலீடும், இயந்திரங்களும், ஆற்றல் பசியும் கொண்டவையாகவும், மிகக் குறைந்த ஆட்களுக்கே வேலை கொடுப்பவையாகவும் உள்ளன. லாபம் மட்டுமே தொழிலின் நோக்கமாகி விட்ட சூழலில், இன்று பாரதி இருந்தால், "வீணில் உண்டு கொழிக்கும் தொழிலை நிந்தனை செய்வோம்" என்று பாடியிருப்பார். நகரத் தொழில்கள் இயற்கை அழிவினால் மட்டுமே உற்பத்தி செய்வதோட‌ன்றி, மாணிக்க வாசகர் சொன்னது போல் "சூதும், பல பொய் பேசியதுமாக" உள்ளன. சூழ்ச்சியும், பொய்யும்,சூதும் அற்ற தொழில் என்பது மானிடர்களின் தேவை மட்டுமல்ல, அடிப்படை உரிமையும் கூட.

தொழில்கள் நகரம் சார்ந்து போவதன் மற்றொரு பரிமாணம் என்னவென்றால், விவசாயி எப்பொழுதும் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்களை (raw material ) மட்டுமே , அறிந்தோ அறியாமலோ, உற்பத்தி செய்கிறான். மூலப்பொருட்களின் விலையை முடிந்தவரை குறைவாக வைத்துக்கொள்வது எல்லாத் தொழில்களின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் அடிப்படைப் பொருளாதாரத் தேவை ஆதலால், விவசாயிக்கு ஒரு நியாயமான விலை கிடைக்க இயலாமலே இருக்கிறது. இதனால் விவசாயம் ஒரு லாபமற்ற/லாபம் குறைந்த‌ தொழிலாக மாறி, அதன் ஆள் ஈர்க்கும் திறனும் மிகவும் மெலிந்து விடுகிறது. வேறு வேலைக்குத் திறமையற்றவர்கள் விவசாய வேலைக்கு வருவதும், படித்தவர்கள் , தொழில் முனைவோர் மற்றும் நிபுணர்கள் அனைவரும் நகரம் சென்று விடுவதும், கிராமத்தில் ஒரு மூளைப் பற்றாக்குறை (brain drain)ஏற்பட்டு விடுவதும் ஆக உள்ளது.

இச்சூழலில், கிராம முன்னேற்றத்திற்கு உழைக்க விரும்பும் அனைவரும், கிராமப் புரங்களில் அண்மைத் தொழில்கள் எவ்வாறு உருவாக்குவது என்று கூர்ந்து ஆராய வேண்டும். அண்மைத் தொழில்கள் என்றால் இரு விதமாகப் பொருள் கொள்ளலாம்: மூலப் பொருட்களுக்கும், உற்பத்திக்கும், நுகர்வோருக்கும் இடையில் அதிக தூரம் இல்லாமல் அண்மையாய் (local) இருப்பது; இன்னொன்று விவசாயத்திற்கும், கிராம வாழ்க்கைக்கும்,நேர்மைக்கும் அந்நியப் பட்டுப் போகாமல் நெருக்கமாய், அண்மையாய் (close, integrated) இருப்பது. முன்னது இயற்கைக்கு நல்லது; பின்னது மனித மனத்திற்கு நல்லது. இரண்டையும் உள்ளடக்கிய‌, நேர்மையான தொழில்களுக்கு நாம் வந்தனை செய்வோம். அத்தகைய‌ வந்தனைத் தொழில்களை எவ்வாறு கிராமங்களில் நிறுவுவது, அவற்றின் லட்சணங்கள் என்ன, அதன் விளைவுகள் என்ன என்று பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

இன்று மேம்படுத்துதல் (development) என்று சொல்லப்படும் இயந்திரமய‌மான உற்பத்திக்கு உலகளாவிய ஆதரவு உள்ளது - விஞ்ஞானிகள், பொருளாதார மேதைகள், அரசியல் வாதிகள், அரசுக்கள், வியாபாரிகள், பாமர மக்கள் என்று மானுடத்தின் 99 % மக்கள் சேய்மை உற்பத்திதான் பொருளாதார வளர்ச்சி (centralized production is economic growth) என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். அது சரியா என்று யாரும் கேட்பதில்லை - கேட்டால் 'உருப்படாத வெட்டிப்பயல்', 'மனித முன்னேற்றத்திற்கு எதிரி', ஹிப்பீ (Hippie)போன்ற அவச் சொற்கள் அள்ளி வீசப்படுகின்றன. எனினும், இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும் உண்மையைக் கண்டறிவது என்ற பிடிவாதம் கொண்ட நாம் அதைப் பொருட்படுத்தாமல் சற்று மெய்ப்பொருள் காண முயல்வோம். இந்த சேய்மை உற்பத்தியின் முதல் இயல்பு என்னவென்றால், இயற்கை வளங்களை அழித்து, மிகுந்த சக்தியை உள்வாங்கி தேவைக்கும் அதிகமான அளவு பொருட்களை உற்பத்தி செய்வதுதான். உபரி உற்பத்தியை தூர தேசங்களுக்குக் கொண்டு சென்று தேவை இருக்கிறதோ இல்லையோ அம்மக்களுக்கு விளம்பர உத்திகளுடன் மூளைச் சலவை செய்து அப்பொருட்களைத் தலையில் கட்டிவிட்டு தன் லாபத்தைப் பெருக்கிக் கொள்வதுதான்.

உதாரணமாக ஒரு செருப்புத் தயாரிக்கும் தொழிலை எடுத்துக் கொள்வோம். அண்மையில் ஒரு 10,000 பேருக்குச் செருப்பு தயாரிக்கும் ஒரு தொழில் இருக்குமானால், ஒரு ஜோடி செருப்பு சுமார் 200 ரூபாய் என்றும் வருடம் ஒரு ஜோடி சராசரியாக வாங்குவோம் என்றும் உதாரணமாக எடுத்துக் கொண்டால் வருடம் சுமார் 20 லட்சம் உற்பத்தி/விற்பனை செய்யும் ஒரு சிறு தொழில் உருவாகும். தினம் ஒரு 300 ஜோடி செருப்புத் தயாரிக்கும் இத் தொழிலால் மாதம் 60,000 - 80,000 சம்பளமாகச் செலவழிக்க இயலும். ஐந்து முதல் பத்து லட்சம் ரூபாய் முதலீட்டிலேயே இத் தொழிலைத் தொடங்க‌ இயலும். தொழில் முனைவோரும் தனக்கென ஒரு நல்ல சுய வருமானம் ஏற்படுத்த இயலும். அதாவது 10 லட்சம் முதலீடு செய்யும் ஒரு தொழில் 7-10 லட்சம் வருட‌ சம்பளமாகக் கொடுக்க இயலும்!

இதுவே நாம் டில்லியிலோ, மும்பையிலோ உள்ள ஒரு பெரும் செருப்புக் கும்பணியிடம் செருப்பு வாங்குவோமேயானால், உற்பத்தி பெரிதும் இயந்திர மயமாக்கப்பட்டுக் கோடிகளில் முதலீடும் வெகு சில லட்சங்களே வேலையாட்களின் சம்பளமாகவும் செலுத்தப்படும். வருமான‌த்தில் கணிசமான‌ பகுதி, பொருட்களை மேலும் கீழும் கடத்தவே செலவாகி விடும். தூரம் அதிகமாகும் பொழுது அது பல கை மாறி வர வேண்டிய தேவை இருப்பதால், விநியோக செலவு அதிகமாகி விடும். நுகர்வோர் வாங்குவதற்காக அதே 200-250 ரூபாயில் விற்க வேண்டிய கட்டாயத்தில் இந்நிறுவனம் இருப்பதால், அது எங்கெல்லாம் செலவைக் குறைக்கலாம், எப்பிடி விற்பனை செய்யலாம் என்று, ஆரம்பிக்கும் பொழுதே ஒரு இறுக்கத்துடனும், நூதன வன்முறையுடனும் துவங்குகிறது. மூலப் பொருள் விற்போர், இயந்திரங்கள் விற்போர், வேலை செய்வோர், விற்பனை, வினியோகம் செய்வோர் என்று அனைவருடனும் ஒரு எதிரிப் பாவனையுடன்தான் தொழில் நடத்த வேண்டியிருக்கிறது. அண்மைத் தொழிலில் உள்ள பகிர்ந்து உண்ணும் சிந்தை, சேய்மைத் தொழிலில் பிடுங்கி உண்ணும் சிந்தையாக மாறி விடுகிறது. வந்தனைக்குரிய தொழில் நிந்தனைத் தொழிலாக மாறுவதற்கும், தற்கால நாகரிகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு காணப்படும் மனவியல், உளவியல் பிரச்சினைகளுக்கும், தனி மனிதன் சமூகத்திலிருந்து மிகவும் அந்நியமாய் உணர்வதற்கும் இந்த சேய்மைத் தொழில்முறை ஒரு முக்கியமான காரணமாகும்.

செருப்புக்குச் சொன்ன அதே கருத்துக்கள் நம் வாழ்வில் அன்றாடம் பயன் படுத்தும் பற்பசை/பற்பொடி, சோப்பு, பிற நானாவிதப் பொருட்கள், உடை, உணவுப் பொருட்கள் என்று எல்லாவற்றிற்கும் பொருந்தும். முக்கியமாக சமையல் எண்ணையை எடுத்துக் கொண்டால், குமரப்பா கூறியது போல, நிலக்கடலை , எள் போன்ற எண்ணை வித்துக்கள் விவசாயியிடம் இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, எண்ணையாக ஆட்டப்பட்டுப் பெரும் நிறுவனங்களால் விளம்பரங்கள் மூலம் பிளாஸ்டிக் பைகளில் மீண்டும் கிராமத்திற்கே விற்கப்பட்டு, மண்வளத்தைக் கூட்டும் புண்ணாக்கு மண்ணுக்கோ, மாட்டிற்கோ திரும்பாமலே வேறு நிறுவனங்களுக்கு மூலப் பொருளாய் விற்கப்படுகிறது. எள்ளில் இருந்து எண்ணெய் எடுப்பதோ மிகச் சுலபமான தொழில்நுட்பமே.

கோவையிலே, ஆனமலை மாவட்டத்தில் நம் நண்பர் ராஜா சங்கர் அவர்கள் இயற்கை முறையில் தென்னை வேளாண்மை செய்கிறார். அதற்குத் தேங்காய் வியாபாரி கொடுக்கும் விலை நியாயமாகத் தோன்றாத்தால், அவரே மதிப்புக் கூட்டிய பொருளாக தேங்காய் எண்ணெய் தயாரிக்க ரூ. 10 லட்சம் முதலீட்டில் ஒரு சிறு எண்ணெய் மில் ஆரம்பித்திருக்கிறார். இதனால், அவர் பயனடைவதோடன்றி, அங்குள்ள பிற விவசாயிகளும் இயற்கையாகத் தங்கள் பண்ணையை மாற்றுவதற்கு இது ஏதுவாக உள்ளது. விவசாயிக்கும் ஒரு நிரந்தர விலை கிடைக்கும் வாய்ப்பு இத் தொழிலால் உருவாகி உள்ளது.

சரி, எது அண்மைத் தொழில், எது சேய்மைத் தொழில் என்று எப்படிப் பிரிப்பது? அமெரிக்காவிலே தயாராகும் சோப்பை விட அம்பத்தூரில் தயாராவது அண்மை அல்லவா? என்பது நியாயமான கேள்வி. இதற்கு Small is Beautiful என்ற நூலில் E F Schumacherஎன்ற பொருளாதார மேதை ஒரு நல்ல வழி சொல்கிறார். ஒரு வேலையை உருவாக்குவதற்குத் தேவைப்படும் மொத்த முதலீடு அவ் வேலையின் ஒரு வருட சம்பளத்திற்கு மேல் இல்லாதிருந்தால் அத்தொழில் அண்மைத்தொழிலாக இருக்கும் என்று.

இந்தக் கணக்குப்படி பார்த்தால், அண்மைத் தொழில்களின் முக்கியத்துவம் புரியும். உதாரணமாக, தற்சார்பு இயக்கத்தின் நண்பர்கள் கூடி, இயற்கை முறையில் விளைந்த பருத்தியைக் கொள்முதல் செய்து, குடிசைத் தொழில்கள் மூலம் சட்டை, ஜிப்பா போன்ற அங்கிகள் தயாரிக்கும் தொழில் ஒன்றை உருவாக்கி உள்ளோம். 15 லட்சம் முதலீட்டில் துவங்கப்பெறும் இச்சிறு தொழில் 15 பேருக்கு வேலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது -( உற்பத்தியில் மட்டும் - இது தவிர விற்பனையிலும் வேலை வாய்ப்புக்கள் உண்டாகும். இது பற்றிய விவரங்கள் பின்னர் விரிவாக தனிக் கட்டுரையில் காண்போம்). இதுவே, 4000 கோடி முதலீட்டில் குஜராத்தில் ஃபோர்ட் கும்பணி தொடங்கும் தொழிற்சாலை, 5000 வேலைகளையே உருவாக்கப் போகிறது. ஒரு வேலை உருவாக்க அவ்வேலையின் 40 வருட சம்பளம் முதலீடாகத் தேவைப்படுகிறது! இதே ரீதியில் ஒரு வேலைக்கு ஒரு கோடி ரூபாய் முதலீடு என்று போனால் நமக்குத் தேவைப்படும் வேலைகளுக்கு அந்நிய முதலீட்டுக்கு எத்தனை கோடி தேவை அன்று கணக்கே பார்க்க இயலாது.

நான் செல்லும் எல்லாக் கூட்டங்களிலும், நான் ஒரே பல்லவியைத் தான் பாடுவேன்: நாம், நமக்கு இருக்கும் நில மற்றும் இயற்கை வளங்களையும், மனித வளத்தையும் முறையாய்ப் பயன் படுத்தினால் இந்தியன் வெளி நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வதை விட்டு, நாம் வெள்ளைக்காரர்களுக்கும், பிறருக்கும் வேலை மற்றும் விஸா கொடுக்க இயலும். இது கேட்க விநோதமாக இருந்தாலும் இதில் உண்மை உள்ளது. இன்றைக்கு $30,000 (வருடம் 15 லட்சம்) என்பது அமெரிக்க நாட்டிலே ஒரு நல்ல வருமானமாகக் கருதப் படுகிறது. ஒரு முனைப்புள்ள அமெரிக்கன் நம் நாட்டிலே 15 லட்சம் முதலீடுள்ள ஒரு அண்மைத் தொழில் தொடங்கி உழைத்தால், வருடம் 15 லட்சம் ஈட்டும் நிலையை 2-3 வருடங்களில் எட்டலாம் - இதற்குப் பல கிராமத் தொழில்கள் உள்ளன.

இன்னும் சில உதாரணங்களைப் பார்ப்போம். 1000 ஏக்கர் உள்ள ஒரு சிறு கிராமம், வருடம் 45 லட்சம் வரை உரம் மற்றும் பூச்சி கொல்லிகளுக்குச் செலவழிக்கிறது. நான்கு கிராமங்களுக்கு மத்தியில் ஒரு கம்போஸ்ட் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவினால், வருடம் 2 கோடி அதனால் விற்பனை இலக்கை எட்ட முடியும். இயற்கை முறையில் தயாரித்த உணவுப் பொருட்களையும், அவற்றின் மதிப்புக் கூட்டிய பொருட்களையும் (நெய், அவல், உடைத்த பருப்பு, வெல்லம், எண்ணெய் போன்றவை), தயாரிக்கும் சிறு தொழில்கள் கிராமத்தில் உருவானால், விவசாயப் பொருட்களுக்கு ஒரு நல்ல விலை கிடைக்க வழி ஆகும். தென்னை நாரிலிருந்து கயிறு திரிக்கும் தொழில், வாழை நாரில் ஆடை நெய்வது, கோரைப்புல் கொண்டு பாய் செய்வது என்று பல விதமான தொழில்கள் உள்ளன.

கிராமக் கூட்டுறவு அமைப்புக்களின் மூலம் உழவர்கள் தங்கள் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம்; அதற்குத் தடையாய் இருப்பது முதலீடோ, மூலப் பொருட்களோ அல்ல - தொழில் முனைவோரும், விவரம் அறிந்தவர்களும் இல்லததுதான் மிகப் பெரிய தடையாகும். எனவே கிராமத்திற்கு இன்றைய மிக அத்தியாவசியமான தேவை வழி நடத்திச் செல்லக் கூடிய, சேவை மனப்பான்மை உள்ள நேர்மையான தலைவர்கள்தான்.

கிராமம் நகரத்தை விடப் பெரிய சந்தை. அச்சந்தைக்கு கிராமங்களிலிருந்தே உற்பத்தி செய்வது கிராமத்தின் செல்வத்தை கிராமத்திலேயே இருத்த உதவும். விவிலியத்திலே கூறியது போல எங்கு நம் புதையல் இருக்கிறதோ அங்கு நம் இதயமும் இருக்குமாதலால், கிராம மலர்ச்சிக்கும், இளைஞர்களை கிராமத்தில் இருத்துவதற்கும், வேலை மற்றும் தொழில் வாய்ப்பு இன்றியமையாதது. கிராமத் தொழில் என்றால் ஊதுவத்தியும், பப்படமும் மட்டும்தான் என்று நாம் நினைத்து விடக் கூடாது. சிறு தொழில் முனைவோர், கிராமங்களுக்குப் பெயர்ந்தால், தாங்களும் முன்னேறலாம், அங்குள்ளவர்களையும் முன்னேற்றலாம். உலகிலேயே உயர்ந்த கொடை தன்னைக் கொடுப்பதுதான்!


Powered by LionWiki. Last changed: 2013/11/25 01:18 Erase cookies Edit History