KGS02

கெடு முன் கிராமம் சேர் - 2

சென்ற இதழில் வந்த கட்டுரையைப் படித்து விட்டு சில பேர் சில முக்கியமான கேள்விகளைக் கேட்டார்கள். அவற்றிற்கு விடை அளித்துவிட்டு என் கதையைத் தொடர்வது நியாயம் என்று எண்ணுகிறேன்.

கே: உலகம் முழுவதும் எல்லோரும் நகரம் நோக்கிப் பெயர்ந்து கொண்டிருக்கையில் இது மாதிரி கிராம மலர்ச்சி என்ற உளறல், பத்தாம் பசலித் தனமாக இல்லையா?

ப: உலகம் முழுவதும் சந்தோஷம் அதிகமாகிக் கொண்டிருக்கிறதா, குறைந்து கொண்டு வருகிறதா? நம் முற்பட்டவர்களை விட நாம் வருவாய் அதிகம் உள்ளவர்களாக இருக்கிறோம்; ஆனால் அன்பும், நிம்மதியும், ஓய்வும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் கடந்த காலங்களை விட அதிகமாகி உள்ளதா குறைந்துள்ளதா? இந்த நவீனம் என்ற "முன்னேற்றப் பாதையில்" பெரும் பின்னடைவு இருப்பதால்தானே நாம் இதெல்லாம் யோசிக்கிறோம், எத்தனிக்கிறோம்? நகரம் நோக்கிப் பெயர்வதினால் நாம் சாதிப்பதெல்லாம், தீராப் பசி கொண்ட பல்வேறு சந்தை சக்திகளுக்குப் பலி கடாக்கள் ஆவதைத்தவிர வேறு என்ன? சுதந்திரம், தன்னிறைவு, தற்சார்பு, இயற்கை, திருப்தி என்பதெல்லாம் கெட்ட வார்த்தைகள் ஆகி விட்டனவே ?மற்றவர்கள் நம்மைப் பார்த்து பொறாமைப் படுவது முக்கியமா, நாமும் நம் சந்ததியும் அன்பும், ஆரோக்கியமும் நிறைந்து வாழ்வது முக்கியமா?.

கே: எல்லோரும் கிராமம் சென்றால் அங்கும் மாசு, நெருக்கடி போன்ற பிரச்சினைகள் உருவாகாதா?

ப: 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் படி, தமிழ் நாட்டில் 48.44% மக்கள் நகரங்கள் மற்றும் நகராட்சிகளில் (urban areas) வசிக்கிறார்கள். ஆனால் நகர நிலப்பரப்பு 11.61% மட்டுமே. கிராமங்கள் நோக்கி மக்கள் திரும்பினால் அன்றி, நம் அடிப்படைத் தேவைகளான, நீர், நிலம், காற்று போன்றவற்றை வளரும் நமது மக்கள் தொகைக்கு அளிக்க முடியாது. தமிழ் நாட்டில் கிராமங்களில் மக்கள் நெருக்கம் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 554 பேர்; நகரங்களில் இது 7 மடங்கு: 3521 பேர்.

கே: எல்லோரும் விவசாயம் செய்ய நம்மிடம் நிலம் உள்ளதா?

ப: எல்லோரும் விவசாயம் செய்யச் சொல்லி நான் சொல்லவில்லை. அது சாத்தியமும் இல்லை. ஆனால், இப்போது இருக்கும் விவசாயிகளும், வேலை தேடும் இளைஞர்களும் விவசாயம் மற்றும் கிராமப் புறத் தொழில்களில், அண்மைத் தொழில்களில் (local and village industries) ஈடுபட்டால் போதும். இந்தக் கட்டுரையின் முடிவில் கால் காணி எவ்வாறு ஒரு இளைஞனுக்கு நல்ல வருவாய் ஈட்டித் தரும் என்று எழுதியுள்ளேன். நம் மாநிலத்திலும் சரி , மொத்த பாரத நாட்டிலும் சரி, ஒவ்வொருவருக்கும் கால் காணி விவசாய நிலம் இருக்கிறது என்பதே உண்மை.

நம் அரசு இணையதளத் தகவலின் படி, 65 லட்சம் ஹெக்டேர் விளை நிலமும், 4.75 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலமும், 10.85 லட்சம் ஹெக்டேர் விளை நிலம் ,ஆனால் தரிசாய் இருப்பவையும் உள்ளது. 75 லட்சம் ஹெக்டேர் விளை நிலம் என்று கொண்டால், ஒவ்வொரு மனிதனுக்கும் 0.1 ஹெக்டேர் - அதாவது 26 சென்ட் நிலம் உள்ளது. நமது மாநிலத்தின் சராசரி குடும்பத்தின் அளவு 4.6 பேர்; ஒரு குடும்பத்திற்கு ஒரு காணி உள்ளது. 30% பேர் காணி நாயகர்கள் ஆனாலே போதும்!

இவை தவிர ஒரு மிக முக்கியமான கேள்வியை ஒரு விவசாயி நண்பர் கேட்டார்: " ஒரு ஏக்கரில் 50 சென்ட் கொய் மலரும், 50 சென்ட் காய்கறிகளும் பயிரிடச் சொல்கிறீர்கள்; அது தினம் 400 ரூபாய் நிகர வருமானம் அல்ல அதற்கு அதிகமாகவே ஈட்டும் என்பதில் ஐயமில்லை; ஆனால், ஒரு ஏக்கர் தின வேளாண்மை செய்ய வேண்டுமானால் குறைந்தது 5 நடவாள் (பெண் தொழிலாளர்கள்) ஆவது நிரந்தரமாக வேண்டுமே, திருப்பூரில் பனியன் கும்பணிக்கே ஆள் பற்றாக்குறையான காலத்தில் நாங்கள் எங்கே போவது?". இது மிக யதார்த்தமான ஒரு கேள்வி. இதற்கு விடை காண வேண்டித் தலையைப் பிய்த்துக் கொண்டதின் விளைவாக, ஒரு ஹெக்டேர் திட்டம் என்பதை ஒரு காணி நிலத்திற்கான திட்டம் என்று மாற்றி வரைந்துள்ளேன். நீர் பற்றாத இடங்களில் லிட்டரில் அளந்து நீர் நிர்வாகம் செய்வது போல், நிலம் குறைக்கப்பட்ட சூழலில், சென்டில் இருந்து சதுர அடியில் அளந்து நிர்வாகம் செய்யும் திட்டத்திற்கு மாற்றி எழுதியுள்ளேன். இவை எல்லாம் தாளாண்மை ஆசிரியரின் திருப்திக்காகவோ, கட்டுரைக்காகவோ எழுதப்படுபவை அல்ல! உழவன் விடுதலை பெற என்ன செய்ய இயலும் என்று யோசிப்பதின் விளைவாக உண்டாகும் எழுத்துக்கள், செயல் திட்டங்கள். வேளாண்மை என்பது அவ்வச் சூழ்நிலைக்கேற்றது (location specific). இந்தக் கருத்துக்களிலிருந்து தேவைக்கு ஏற்ப கிரஹித்துக்கொள்ள வேண்டும்.

காணி நிலம் போதும்

ஒரு காணி நிலத்திற்கான திட்டம்:

ஒரு காணி என்பது 1.33 ஏக்கர் அல்லது, ஏக்கர் அல்லதுஏக்கர் அல்லது ஏறத்தாழ‌ 58000 சதுர அடி கொண்ட பரப்பளவு ஆகும் . காணி நாயகர்கள் எவ்வாறு ஒரு காணி நிலத்தில் பொருள் ஈட்டுவது என்பதே நம் குறிக்கோள். ஒரு காணி நிலத்தை திட்டமிடும் பொழுது, அது ஒரு உயிர்ச்சூழல் பண்ணையாக, தன் உரத் தேவைகளைத் தானே சமாளித்துக் கொள்வதாய் , இடு பொருள் மற்றும் வேலை ஆட்கள் தேவை குறைந்ததாய், நிலைத்த பொருளாதாரம் கொண்டதாய் திட்டமிடல் வேண்டும். சுருக்கமாய் சொன்னால் தற்சார்பு உடையதாய் இருக்க வேண்டும்.

மாதிரித் திட்டம்:

(1) வீடும் பிறவும்: 8000 சதுர அடி (18 சென்ட்)

இதில் வீடு, மாட்டுக் கொட்டகை, பம்பு செட், வாகனம் நிறுத்துமிடம்,மண்புழு எருக் கொட்டகை, கோழி/ஆடு கட்டுமிடம் எல்லாம் அடங்கும்.

(2) உணவுத் தற்சார்பு:

தானியங்கள்/பயறு/ எண்ணை வித்துக்கள் உற்பத்தி (சுயதேவைக்காக) - 12500 சதுர அடி (29 சென்ட்)

சாதாரணமாக ஒரு 5-6 பேர் கொண்ட குடும்பத்திற்குத் தேவை என்றால் , அரிசி, பருப்புகள், பால், காய்கறி, பழங்கள், எண்ணை, புளி, மிளகாய், (முட்டை, இறைச்சி) அடிப்படையானவை.

(மாதம் 10 கிலோவில் தொடங்கி 50 கிலோ அரிசி வரை தேவைப்படும் குடும்பங்கள் உள்ளன. எனவே நம் கணக்கிற்கு ஒரு சராசரியாக 30 கிலோ அரிசி உற்பத்தி செய்வதாக வைத்துக் கொள்வோம். இதற்கு மேல் தேவைப்படுபவர்கள் இரு போகம் நெல்லோ அல்லது அதிக அளவு நட்டோ உற்பத்தி செய்து கொள்ளலாம்.)

சென்ற இதழில் 3000 ரூபாய் நகரத்தில் செலவு செய்வதைப் பாதியாகக் குறைப்பதாய்த் திட்டமிட்டோம். அரிசி முழுவதும் விளைப்பதாகவும் சொன்னோம். அது எங்ஙனம் என்று பார்ப்போம்.

நம் தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யக் கூடியவையும் அவற்றின் சராசரி மாதத் தேவையும்:

அரிசி - 30 கிலோ = 900

இட்லி அரிசி - 10 கிலோ x 20 = 200

உளுந்து - 4 கிலோ x 70 = 280

து/பா/க‌. பருப்பு - 2 கிலோ x 70 = 140

சமையல் எண்ணை - 5 லி x 100 = 500

வர மிளகாய் - 1/2 கி x 100 = 50

முட்டை 45 x 3 = 135

மீன், கோழி போன்றவை = 200

வருடத்தில் பார்த்தால், உளுந்து 50 கிலோ, எண்ணை 60 லி, பிற பருப்புகள் 25 கி, இட்லி அரிசி 120 கிலோ மேலும் சாப்பாட்டு அரிசி 360 கிலோ வருகிறது. மிளகாய், முட்டை போன்றவை மிக எளிதான‌வையே.

அரிசி உற்பத்தி:

29 சென்ட் சம்பா பட்டத்தில் வயல் கலக்கி ஒற்றை நாற்று முறையில், கிச்சடி சம்பா, தூயமல்லி, வெள்ளைப் பொன்னி போன்ற சன்ன ரகங்களை நட்டு நன்கு நிர்வகித்தால் 600 கிலோ நெல் விளைக்கலாம். இயற்கை முறையில் விளைவித்த நெல், 60-62% அரிசி தரும். வருடம் 360 கிலோ சாப்பாட்டு அரிசி இதிலிருந்து பெறுவது மிக‌ சாத்தியமே. இதற்கு சுமார் 2500 ரூபாய் செலவு ஆகும் - (இயற்கை விவசாயம் ஆனதால் செலவு குறையும்)

இட்லி அரிசிக்கு, குள்ளக்கார் போன்ற மோட்டா ரகங்களை குறுவை அல்லது நவரைப் பட்டத்தில் 10 சென்ட் இடத்தில் நட்டு 120 கிலோ தயரிக்கலாம்.

எண்ணை:

நிலக்கடலை வளரும் மண் பகுதிகளில், 29 சென்ட் கடலை மூன்றாவது பயிராக நட்டால், மண் வளம் பெறுவதோடல்லாமல், 150-200 கிலோ கடலை கிட்டும் - இதிலிருந்து 40 லி எண்ணை எடுக்கலாம். 12 முற்றிய தேங்காய் இருந்தால் 1 லி எண்ணை கிடைக்கும். எள், சூரிய காந்தி போன்றவற்றையும் முயற்சிக்கலாம்.

உளுந்து

வாழை மரங்களுக்கிடையில் ஊடு பயிராகவும், மேட்டுப் பாத்திகளில் குச்சி கொண்டு துளையிட்டு நட்டும் நல்ல மகசூல் பெறலாம். 20 சென்ட் நட்டால் 50 கிலோ கிடைக்கும்.

நம் வருட உணவு தேவைக்கு வருடம் 20 - 30 நாட்கள் வேலை செய்தால் போதுமானது.

மாதம் மிச்சம்: அரிசி 900 ரூபாய் ; மளிகை செலவு 1500 ரூபாய்

(3) நீண்ட கால மரங்களும் அவற்றின் இடையில் தீவனப் புற்களும்(கால் நடைகளுக்காக)- 12500 சதுர அடி (29 சென்ட்) - ஈட்டி, குமிழ், தேக்கு போன்ற மரங்கள்.

வீட்டுத்தேவைக்காக ஒன்று அல்லது இரண்டு பசுக்கள் வைத்துக் கொள்ள வேண்டும். இவை நாட்டு ரகங்களோ அல்லது நாட்டு மாடுகளுடன் கலப்போ இருப்பது நல்லது. ஒரு நாளைக்கு 5 லிட்டருக்குள் கறக்கும் பசுவாக இருப்பின் அது அதிகம் செலவு வைக்காது. வெளித் தீவனத் தேவையும், மாட்டு டாக்டருக்குச் செலவும் இருக்காது.

நடக்கவும், மேயவும்,வெயில் மழை தாங்க‌வும்வெயில் மழை தாங்க‌வும் ஏவெயில் மழை தாங்க‌வும் ஏற்ற பசுக்களாக வாங்குவது நலம்!

மாதம் மிச்சம்: பால் 60 லி x 25 ரூ = 1500

விறகடுப்பும், சாண எரிவாயுவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

மாதம் மிச்சம்: 400

கடையில் வாங்கும் பெரும் பகுதிக் காய்கறிகளை நாமே விளைக்கப் போகிறோம்

மாதம் மிச்சம்: 600 (30 x20 = 600 ; தினம் ஒரு கிலோ சராசரியாக‌)

எப்படியும், நகரப் பணியாளருடன் ஒப்பிடும் பொழுது, வருட செலவில் - வாடகையில் 60,000 மற்றும் செலவுக் குறைப்பில் 60,000 ஆக 120,000 வருட வருமானம் கிட்டுகிறது!

(4) வாழை, பப்பாளி போன்ற பழ மரங்கள் 5000 ச.அடி. (களிமண் பூமியில் இதற்குப் பதிலாக மீன் குட்டையை முயற்சிக்கலாம்).

(5) பல தரப்பட்ட காய்கறிகள் - மேட்டுப் பாத்திகளில் - 20000 ச அடி

சதுர அடி வருமானக் கணக்கு:

காணி நாயகர்களுக்கு கணக்கு என்பது இன்றியமையாத ஒன்று. (இது துவக்கத்தில்தான். நிலத்துடன் இணைந்தும் இசைந்தும் வாழ ஆரம்பித்தபின் எண்ணும், எழுத்தும் தேவையற்றவை ஆகிவிடும். வானத்துப் பறவைகளைப் போல, கிடங்குகளில் சேமிக்காமலே ஒரு நல்ல விடுதலை வாழ்க்கைக்கு நாம் மாறி விடுவோம்!)

ஒரு ஏக்கர் என்பது சுமார் 43600 சதுர அடி. ஒரு ஏக்கரில் நல்ல விளைச்சல் எடுத்தால் தற்கால வேளாண்மையில் கீழ்க்கண்ட வருட லாபம் பெறலாம் (அதிக பட்சமாக)

1. நெல், நெல், உளுந்து/பயறு -25,000 ( வளமான காவிரிப் பாசனப் பகுதிகளில்)

2. கரும்பு - 30,000

3. வாழை - 70,000

4. பசுந்தீவனம்+மாடு - 80,000

(ஏக்கருக்கு 8 மாடு என்றால்)

5. தென்னை மரம் - 30,000

6. பழ மரத் தோப்பு

(மா, சப்போட்டா போன்றவை) 60,000

இது போல எல்லா பணப் பயிர்களையும் கணக்கிட்டுப் பார்க்கலாம்.மிகக் குறைந்த லாபம் உள்ளவை தானியங்களே; ஏனெனில் தானியங்கள் பயிரிடப் பெரிய தொழில் நுட்பம் ஏதும் தேவை இல்லை. நம் தமிழ் நாட்டிலே, 59 % பயிரிடப் படுவது நெல்! தமிழக உழவன் ஏழையாய் இருக்க இதுதான் காரணமோ?

(எக் காலத்திலுமே அதிக வருவாய் ஈட்டக்கூடியவை காய்கறிகளும், கொய் மலர்களுமே. ஆனால், மேலே கூறியது போல அதிக இடத்தில் இவற்றைப் பயிரிடுவது மிகக் கடினம்). ஒரு ஏக்கரில் ஒரு லட்சம் லாபம் வந்தால் ஒரு சதுர அடியில் வருட வருவாய் ரூ.2.50. இந்திய விவசாயி இதை மிக அதிக வருமானமாய்க் கருதுகிறான். ஓரினப்பயிர் செய்து இடைத் தரகரிடம் விற்பனை செய்யும் உழவன் இன்று ஒரு சதுர அடியில் 30-35 பைசா வருட வருமானம் பெற்றால் மிக்க மகிழ்ச்சி அடைகிறான். (ஏக்கருக்கு 15000 நிகர வருட‌ லாபம்). இது விலை உயர்ந்த பொன்னை பழைய இரும்புக்கு விற்பது போலாகும்.

ஒரு சதுர அடியில் வருடம் 10 ரூபாய் சம்பாதிக்க முடிந்தால், அதை 20 ரூபாயாக்கினால்? 20,000 சதுர அடி மட்டும் பயிர் செய்தால் வருடம் 2 லிருந்து 4 லட்சம் வரை ஈட்ட முடியும். இது ஏதோ கனவோ, கதையோ அல்ல. என்னுடைய புதிய சிந்தனையும் அல்ல. market gardening என்று சொல்லப்படும் சந்தை வேளாண்மைதான் இது. இன்று சராசரியாக ஒரு கிலோ காய் ரூ.20-25 வரை விற்கிறது. ஒரு சதுர அடியில், ஒரு வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு கிலோ விளைவிப்பது கடினமல்ல. 20,000 சதுர அடியில் 20 வகையான காய்கறிகளை வளர்ப்பதின் மூலம், பூச்சி, நோய் தாக்குதலில் இருந்து பெரும் அளவு விடுபடலாம்.

ஊக்கமுள்ள ஒரு இளைஞன், ஓரளவு நீர் வசதியுள்ள ஒரு 40 சென்ட் இடத்தில் மேட்டுப் பாத்தி அமைத்து, தானே கம்போஸ்ட் தயாரித்து, இயற்கை முறையில் காய் கறிகளை உற்பத்தி செய்து அவ் விளை பொருள்களைத் தானே விற்பனை செய்தால் ஒரு சதுர அடியில் சாதாரணமாக வருடம் 20 ரூபாய் ஈட்ட முடியும். இதற்குத் தேவைப்படும் காலம் தினம் 6 மணி நேரம் தான். வருடம் மூன்று லட்ச ரூபாய் வேலை வாய்ப்பை கால் காணி உருவாக்கி விடும். ஐந்தாறு உழவர்கள் ஒன்று கூடி, ஒரு குழு அமைத்து செய்தால் இன்னும் எளிது.

தன் பொருளைத் தானே விற்பது உழவனுக்குச் சாத்தியமா? விற்பனை என்பது சாதாரணமானதா? வியாபாரியை நம்பியன்றோ இன்று உழவன் வாழ்கிறான்? உழவன் கொண்டு சென்றாலும் அவனிடம் கடை விலை கொடுத்து யார் வாங்குவர்? இவையும் நியாயமான கேள்விகளே. இவற்றிற்கு விடையை அடுத்த இதழில் காண்போம்!


Powered by LionWiki. Last changed: 2014/05/26 04:17 Erase cookies Edit History