KGS03

கெடு முன் கிராமம் சேர் - 3(Edit)

சந்தைச் சிந்தனைகள்(Edit)

முதல் கட்டுரையில் கிராமம் சேர்வதன் அவசியத்தையும், விவசாயம் எப்படி ஒரு நல்ல தொழிலாக முடியும் என்பதையும் பார்த்தோம். மரங்கள் வளர்ப்பது நீண்ட கால சேமிப்பு என்றும், கால்ந‌டைகள்தான் உண்மையான மாடு (செல்வம்) என்றும் கண்டோம். அதன் பின் இரண்டாவது கட்டுரையில், ஆட் பற்றாக்குறையான சூழலில் கூட, சுய உழைப்பினாலோ அல்லது ஓரிரு பணியாளர்களை வைத்தோ, சுமார் கால் காணியில் ஒரு நல்ல தொழில்/சுய வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்று பார்த்தோம். ஒரு குடும்பம் கால் காணியில் எவ்வாறு உணவுத் தற்சார்பு அடைவது என்றும் பார்த்தோம். இப்போது சற்றே பின்னோக்கிச் சென்று, நாம் முயற்சிப்பது என்ன என்பதை நினைவு படுத்திக் கொண்டு தொடரலாம்.

காந்தி, நம் நாடு பூரணமாக விடுதலை அடைய வேண்டுமானால், கிராம சுயராச்சியத்தின் மூலமே அது சாத்தியம் என்றார். அவரின் நேர் வாரிசான குமரப்பா, கிராம‌ முன்னேற்றத்தைப் பற்றியும், இயற்கை வேளாண்மையைப் பற்றியும் ஏராளமாக எழுதியுள்ளார். பொருளாதாரத் த‌ன்னிறைவுடன் கிராமங்கள் மல‌ர்வதற்கு இயற்கை வேளாண்மையும், அண்மைத் தொழில்களும் இன்றியமையாதவை. தற்சார்பான கிராமங்களுக்குத் தற்சார்பான வேளாண்மை அடித்தளம். காணி நாயகர்கள்தாம் கிராம சுயராச்சியத்தின் வித்து. எனவே உழவன் விடுதலை என்பது நம் தலையாய பொறுப்பாகிறது. விடுதலை என்பதற்கு முதலில் சார்பின்மை தேவையாதலால், அதிக நேரம் பொருளதாரத்தைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது.

உழவர்கள் நிலத்தை சதுர அடியில் அளந்து வேளாண்மை செய்யும் பொழுது, குறைந்த இடத்தில் நிறைவான விளைச்சல் பெற இயலும். ஒவ்வொரு சதுர அடியிலும் நம் உழைப்பும், இடு பொருள் செலவும் அடங்கி இருப்பதால், நில நிர்வாகம் மிக முக்கியம். உற்று நோக்குக: நிறைய விளைச்சல் வேறு, நிறைவான விளைச்சல் வேறு. நிறைவான விளைச்சல் என்பது செலவு போக நம் முதலீட்டுக்கும், உழைப்புக்கும், தேவைக்கும் ஒரு நியாயமான வருவாய் ஈட்டித் தருவதுதான். ஆகாயக் கோட்டைகளுக்கு என்றுமே இயற்கையில் இடம் இல்லை. எனவே பேராசையால் உந்தப்படுபவர்கள் வேறு தொழில் தேடிக்கொள்ளவும் !

தற்காலப் பொருளாதாரத்தில், உழவனுக்குத் தன் விளைச்சலின் நுகர்வோர் விலையில் (மளிகைக் கடையில் விற்கும் விலை) 40 - 50 சதவிகிதம் கிடைத்தால் மிக அதிகம். சராசரியாக மூன்றில் ஒரு பங்குதான் அவனுக்குப் போய்ச் சேருகிறது. இதையே 65 சதவிகிதம் ஆக்கினால் நிறைவான விளைச்சல் என்பது இப்போது கிடைக்கும் விளைச்சலை விடக் குறைவாகவே இருக்கும். உதாரணமாக ஏக்கருக்கு 1000 கிலோ மக்கச்சோளம் விளைவித்து அதை 14 ரூபாய்க்கு விற்பது ஏக்கருக்கு 5000 நிகர லாபம் தரக்கூடும். அதுவே 700 கிலோ விளைச்சலை 20 ரூபாய்க்கு விற்க முடிந்தால், அதே லாபம் பெறுகிறான். தன் வருமானத்தைக் கூட்ட விளைச்சலை அதிகரிப்பதை விட, அதிக விலை பெறுவதுதான் நல்ல உத்தி.

விற்பனைக்கு விவசாயி துணியாததால் வருமானத்தைக் கூட்ட விளைச்சலையே நம்பி உள்ளான். அதற்காசைப்பட்டு வீரிய ஒட்டு ரகங்கள், செயற்கை வேதி உரங்கள், விஷ மருந்துகள் என்று தன் இடு பொருட்களை மிக அதிகப்படுத்திப் புலி வால் பிடித்த கதையாய்த் தன் மண் வளத்தையும், பாரம்பரிய விதைகளையும் இழந்து வருடா வருடம் ஏறிக்கொண்டே வரும் இடுபொருள் விலையால் கட்டுண்டு வறுமைக்கும் கடனுக்கும் தள்ளப்படுகிறான். உயர் விளைச்சல் என்ற மாயையில் சிக்கித்தான் உழவர்கள் வறியவர்களாகிறார்கள். குறைந்தபட்ச ஆதார விலை என்பது உழவனுக்கு அதிக பட்ச விற்கும் விலையாக மாறி விட்டது.

நுகர்வோர் விலையில் மூன்றில் இரண்டு பங்கேனும் விளைவிப்பவனுக்குக் கிடைத்தால்தான் நீடித்த கிராமப் பொருளாதாரத்திற்கு அடித்தளம் அமையும்.உணவு உற்பத்தி செய்யும் கிராமங்கள் ஏழ்மைப் பட்டுக்கொண்டே போவதும், இடு பொருள் விற்று, விநியோகித்து, நுகர்ந்து, பிற பொருட்கள் உற்பத்தி செய்யும் நகரங்கள் வலுத்துக் கொண்டே போவதும், உழவு இயந்திரமயமாக்கப்படுவதும் எல்லாம் அழிவின் அறிகுறிகள்; நிலையற்ற பொருளாதாரத்திற்கு அடி கோலுபவை. நான் பல மாவட்டங்களில் சென்று உழவர்களுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன்; நான் பார்த்தவரை நூற்றுக்கு ஒரு விவசாயி கூட விற்பனையைப் பற்றித் திட்டமிடுவதில்லை. ஆயிரத்தில் ஒருவர் கூடத் தன் பொருளைத் தானே விற்க முடியுமா என்று சிந்தித்ததில்லை. இன்று உழவன், தன் வேலை ஆட்களுக்கு அடுத்து அதிகம் சார்ந்து இருப்பது தன்னிடம் கொள்முதல் செய்யும் வியாபாரியைத்தான். எனவே உழவன் விடுதலையில் சந்தைப் படுத்துதல் என்பது மிக முக்கியமான அங்கமாகும். ஆக, சுய விற்பனை என்பதன் பொருளாதார ஆழம் புரிந்தபின் அதை எவ்வாறு செயல் படுத்துவது என்று நாம் ஆராய்வோம்.

எல்லாரும் விற்கும் பொருளை நாமும் விற்பதை விட, நம் தயாரிப்பைத் தனிப்படுத்திக் காட்ட ஏதேனும் ஒன்று இருக்குமானால், அதனை நுகர்வோர் விரும்பி வாங்குவர். இவ்வாறு தனித்தன்மை இல்லாத பொழுது, உற்பத்தி செய்பவன், உற்பத்தி-தேவை இவற்றிற்கிடையே உள்ள இடைவெளியைப் பொறுத்து விலை கூடவோ குறைவாகவோ பெறுவான். எல்லோரும் நெல் தயாரிக்கும் பொழுது , உற்பத்தி அதிகமானால் விலை குறைவதும், விலை ஏறும்போது விளைச்சல் இன்றியும், நெல் விவசாயி, இரு புறமும் இடி வாங்கும் மத்தளம் போல் ஆகிறான். அதுவே, தானே நெல்லைக் காய வைத்து, அரிசியாக அரைத்து நேரடியாக நுகர்வோரிடம் ஒரு விவசாயி விற்பானேயானால் அவன் விலை ஏற்ற‌த்திற்கும், வீழ்ச்சிக்கும் பாதிக்கப்படாமல் தனக்கென ஒரு தற்சார்பான பொருளாதாரத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.இதில் நேரடி வியாபாரத்திற்கான தனித்தன்மை என்ன இருக்க முடியும்? அதுதான் இயற்கை சார் வேளாண்மை!

( நான் சுமார் 7 வருடங்கள் (2003-2009) நாகப்பட்டினம் மாவட்டத்தில் நெல் விவசாயம் செய்தேன். என் சக உழவர்கள் எல்லோரும் 1800 கிலோ உயர் விளச்சல் எடுக்கும் போது நான் 1300-1400 கிலோதான் விளைவித்தேன்; ஆனால் என் இடுபொருள் செலவு மிகக் குறைவு: ஏக்கருக்கு 5000 ரூபாய் நான் செலவு செய்து 1300 கிலோ நெல்லில் இருந்து 800 கிலோ பச்சரிசி தயாரித்து, கிலோ 30 ரூ - 40 ரூ என்று விற்றேன். என் நிகர லாபம் சராசரியாக ஏக்கருக்கு 25000 போல வந்தது . அப்போது அரசுக் கொள்முதலில் நெல்,6 ரூ/கிலோ முதல் 8ரூ விற்றது. மற்ற விவசாயிகள் ஏக்கருக்கு 7000 செலவழித்து 12000-14000 ஈட்டினார்கள். இரு போகத்தில் 3600 கிலோ விளைத்து அவர்கள் நிகர லாபம் பெற்றது ஏக்கருக்கு 12000க்கும் குறைவே - இது உயர் விளைச்சலில். இரு போகத்தில் அவர்கள் சம்பாதித்த்ததை விட நான் ஒரு போகத்தில் (தாளடி என்னும் சம்பா பட்டம்) அதிகம் ஈட்டினேன். என் அரிசியை விற்பதற்கு முதல் வருடம் மட்டும்தான் சற்று மெனக்கெட வேண்டியிருந்தது; ஒரு முறை இயற்கையில் விளைந்த பொருட்களை வாங்கி உண்டவர்கள் மீண்டும், மீண்டும் அதை விரும்பிக் காத்திருந்து வாங்கினர். )

பொருளாதாரத்தைக் கொண்டு பார்க்கையில் இயற்கை (உயிர்ம) வேளாண்மை என்பது மூன்று விஷயங்களுக்கு அவசியமாய் இருக்கிறது.

1. இடு பொருள் செலவைக் குறைக்க

2. மண்வளம் குறையாதிருக்க

3. விற்பனையை எளிதாக்க!

உழவன் தன் விளைபொருளைத் தானே விற்க இயற்கை வேளாண்மை மிக முக்கியமானது. தற்காலத்தில் வியாதிகள் பெருகி வருவது யாவரும் அறிந்ததே; அதனால், நஞ்சில்லா உணவு கிட்டுமாயின் அதனைத் தேடிச் சென்று வாங்க, மேல் தட்டு மக்கள் மட்டுமின்றி, நடுத்தட்டு மக்களும் ஆவலாகவே உள்ளனர். மதிப்புக்கூட்டிய பொருளைப் பற்றிப் பலரும் பலவும் பேசி வருகிறார்கள் - ஆனால் என் விற்பனை அனுபவத்தில், இயற்கையாய் விளைப்பதை விட உணவுக்கு ஒரு மிகச் சிறந்த மதிப்புக்கூட்டல் எதுவுமே இல்லை. அதனால் சுயநலமான வியாபார நோக்குடனாவது நாம் இயற்கை வேளாண்மை செய்ய வேண்டும்.

உழவன் தன் பொருளுக்குத் தானே முதல் வாடிக்கையாளன் ஆக வேண்டும். அதாவது தன் தேவைகளை முதலில் விளைக்க வேண்டும். பின்னர், தான் விளைப்பதைத் தன் உறவினர்கள், அண்டை வீட்டார் என்று விற்க முனைய வேண்டும். நம் தமிழ் நாட்டில், எந்த கிராமத்தில் இருந்தாலும் ஒரு 50 கிலோமீட்டர் சென்றால் ஒரு சிறு நகரத்தை எட்டி விடலாம். அந்த ஊரில், நுகர்வோர்களைத் தொடர்பு கொண்டு தன் விளை பொருட்களை நேரடியாக விற்க முயல வேண்டும் (அண்மைக் கடைகள்). வாரம் ஒரு முறை அல்லது இரு முறை அவ்வூரில் கோவில், பள்ளி போன்ற பொது இடங்களில் வாடகை எதுவுமின்றி இயற்கைப் பொருட்களை விற்கத் தொடங்கினால், வெகு விரைவில் அவை பிரபலம் ஆகி விடும். நல்ல தரமான பொருட்களை மட்டுமே கொண்டு செல்வது என்று தீவிரமாக இருக்க வேண்டும்.

நமக்கென்று ஒரு சந்தையை உருவாக்குவது ஆரம்பத்தில் சற்றுக் கடினமாகத் தோன்றினாலும், இதனால் நம் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்கிறோம் என்பதை உணர வேண்டும். விவசாயி நுகர்வோரை நேரடியாகச் சென்று அணுகுவதற்கு முதலில் மிகவும் கூச்சம் தோன்றத்தான் செய்யும். சந்தைத் தற்சார்பு வந்தால் பின் எல்லாத் தற்சார்பும் அதன் விளைவாய்த் தானே ஏற்படும்.

ஒரு கிராமத்தில் நான்கைந்து பேர் கூடி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டால், விற்பனை வேலைகளைப் பகிர்ந்து கொள்வது எளிது. பல்வகையான பொருட்களையும் தயாரிக்கலாம். ஒருவர் சில காய்கறிகள், ஒருவர் வேறு சில காய்கறிகள், வேறொருவர் பால், நெய், ஒருவர் பருப்புக்கள், எண்ணை என்று திட்டமிட்டுச் செய்யலாம். இயற்கையில் விளைந்த காய்கறிகளுக்கு மிகுந்த கிராக்கி இருக்கும். முன் கூறியபடி, பேராசைப் படாமல், கடை விலைக்கோ அல்லது அதை விட ஓரிரு ரூபாய் குறைத்தோ விற்றால் வியாபாரம் எளிதாகி விடும்.

இதே போல் நுகர்வோர் குழுக்கள் அமைப்பது இன்னொரு வழி. அதாவது, இயற்கை உணவுப் பொருட்களை இன்ன பொருள் இன்ன விலைக்கு மாதம் இவ்வளவு கிலோ எங்களுக்குத் தேவை என்று ஒரு 10-12 நுகர்வோர் பட்டியல் கொடுத்தால் அதை 2-3 உழவர்கள் கூடித் தங்களுக்குள் பகிர்ந்து விளைவிக்கலாம். சுய வேலை வாய்ப்பை விரும்பும் இளைஞர்களை ஊக்குவித்து 10-15 சதவிகிதம் அவர்களுக்கு கிட்டுமாறு சந்தைப் படுத்தலாம். ஒரு இளைஞன் அருகுள்ள ஊரில் 30 வீடுகளின் தேவைகளை நிர்வாகம் செய்து கவனித்தால் சராசரியாக மாதம் 1 லடசம் முதல் 1.5 லட்சம் வரை வியாபாரம் செய்து மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம். விலைவாசி ஏற ஏற அவன் வருவாய் தானாக ஏறும்!

நாம் ஏன் காய்கறிகள் விளைப்பதை நம் திட்டத்தில் முக்கியமாகக் கருதுகிறோம் என்றால், பாலும் காய்கறிகளும் நம் இந்திய உணவில் மிக முக்கியமானவை. அவற்றை உற்பத்தி செய்வதற்கு கவனிப்பும் உழைப்பும் அதிகமானதால் அதிகம் பேர் செய்வதில்லை. நம் நாட்டில் காய்கறிகளின் தேவையில் 40% தான் உற்பத்தியாகிறது. (ஊட்ட‌ச்சத்துத் தேவைப்படி ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 80 கிராம் பழங்களும், 300 கிராம் காய்கறிகளும் தேவை. நாம் விளைவிக்கும் மொத்தக் காய்கறிகள் 120 கிராம் மட்டுமே). அதிலும் இயற்கை முறைக் காய்கறிகள் என்றால், நபர் ஒன்றுக்கு 0.1 கிராம் கூட உற்பத்தி ஆவதில்லை. எனவே இயற்கைக் காய்கறிகளுக்கு ஒரு அழியாத, தற்போது பூர்த்தி செய்யப்படாத‌ தேவை இருக்கிறது.

(இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டு இருக்கும் வேளையில் பாலின் விலை ரூ.36 ஆகி விட்டது என்ற செய்தி வந்தது. வருடம் 1000 - 1200 லிட்டர் கறக்கும் ஒரு பசுவானது, 40,000 ரூபாய் ஈட்டக் கூடிய, விவசாயிக்குச் சாதகமான‌ நிலைமை, உருவாகி உள்ளது. தீவனம் முழுவதும் நாமே விளைத்தால், ஒரு ஏக்கரில் 5 முதல் 7 பசுக்களைப் பராமரிக்கலாம்.அடிப்படை உற்பத்தியில் ஈடுபட்டு இருப்பதால், விலைவாசி ஏற்றத்தால் பயனடையும் மிகச் சில தொழில்களுள், விவசாயம் முதன்மையானதாகும்.)

சந்தை என்றதும் நம் எண்ணத்தில் தோன்றுவது பெரு நகரங்களே. ஆனால், சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் சென்று விற்பது மட்டுமே சந்தைப் படுத்துதல் அல்ல. மனிதர் இருக்குமிடமெல்லாம் உணவுத் தேவை உள்ளதால், எல்லா ஊருமே நம் சந்தைதான். முடிந்தவரை உணவு அதிகம் பய‌ணம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுவே சுற்றுச் சூழலுக்கும், நம் லாபத்திற்கும் உகந்தது. வெண்டைக்காய் எவ்வளவு தொலைவில் இருந்து வருகிறது என்று பார்த்து யாரும் விலை கொடுப்பதில்லை. எதுவானாலும், அண்மையாய், சிறிய அளவில் இருக்கும் வரை பேராசையும் ஊழலும் இன்றி, நிர்வகிக்க எளிதாய் இருக்கும். பிரச்சினைகள் வரின், ஒருவருக்கு ஒருவர் நேர் முகமாய்ப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.

ஒரு சமூகவியல் மற்றும் பொருளாதாரவியல் பார்வையில் பார்த்தால், உழவர்கள் தங்கள் சந்தையைத் தாங்களே ஆளுமை கொள்வது உழவனை மிகப் பெரிய பலசாலி ஆக்குகிறது. 'நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்' என்று நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன் உழவன் தலை நிமிர்ந்து நடக்கலாம். எதையும் சந்தையில் வாங்காமல், பெருமளவு உற்பத்தியைத் தானே சந்தைப் படுத்தும் உழவன், ஒரு குறுநில மன்னனுக்குச் சம‌மான வாழ்க்கையை வாழ இயலும்!

நீங்கள் பெருமூச்சுடன் கேட்கும் அடுத்த கேள்வி எனக்கு நன்றாகவே கேட்கிறது. "கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால், விவசாயம் செய்யக் கிராமம் சென்றால் அங்கு கல்வி, மருத்துவ வசதி, பொழுதுபோக்கு போன்றவற்றிற்கு என்ன செய்வது? பிள்ளைகள் வளரும் சூழல் சரியில்லை. இதில் எந்த சமூக அந்தஸ்தும் இல்லை. வெறும் வருமானம் வாழ்க்கை ஆகி விடுமா?" இதற்கு விடைகளை வரும் இதழ்களில் காண்போம்.


Powered by LionWiki. Last changed: 2014/05/26 04:18 Erase cookies Edit History