KGS06

கெடுமுன் கிராமம் சேர் - 06 - உழவன் பாலா(Edit)

தன்நோய்க்குத் தானே மருந்து(Edit)

நகரப் பெயர்ச்சி என்பது எல்லா நாடுகளிலும்,காலங்களிலும், எல்லா நாகரிகங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒரு சமூக நிகழ்வு. கடந்த நூறு ஆண்டுகளில் இயந்திரப்புரட்சியின் காரணமாகவும், சாலை, புகைவண்டித் தடம் போன்றவற்றாலும் இப் பெயர்ச்சி மிகப் பெரிய அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இக் கட்டுரைத்தொடரின் நோக்கம் நகரப் பெயர்ச்சிக்கு ஒரு மாற்றுச் சிந்தனையை ஏற்படுத்துவதும், மேம்படுத்துதல், பொருளதார வளார்ச்சி என்று வர்ணிக்கப்படக்கூடிய இந்த சந்தைமய உற்பத்தியையும் நுகர்ச்சியையும் எதிர்த்து ஒரு அலையை, இயக்கத்தைத் தூண்டுவதுமே. ஆட்டு மந்தை வாழ்க்கைக்கு மாற்றான அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தேட வேண்டுமென்றால், முதலில் மந்தையினின்று விலகி நின்று ஒரு மாற்றுச் சிந்தனையைக் கைக்கொள்ள வேண்டும்.

எனவே தற்கால சமூகமென்னும் கட்டிடத்தின் அடிப்படைச் செங்கல்லான குடும்ப வாழ்க்கையின் ஒவ்வொரு பரிமாணத்தையும் கிராம வாழ்க்கையில் எங்ஙனம் நிறைவு செய்து கொள்வதென்று நோக்குவது தேவையாகிறது. ஒரு சராசரி மானுட வாழ்க்கையில் பற்பல தேவைகள் உள்ளன; பற்பல பயங்களும் உள்ளன. பல நேரங்களில் நமக்கு எது பயம், எது தேவை என்று பகுத்தறிய முடிவதில்லை. கற்பனைப் பயங்களுக்கு இரண்டு விதமாகத் தீர்வு காணலாம் - அப் பயம் தேவையற்ற ஒன்று என்று பகுத்து அறிந்து கொள்ளலாம் ; அல்லது நம் மனதுக்குப் பிடித்தமான‌ ஒரு விடையை நாமே கற்பனை செய்து கொள்ளலாம்.

இதுவரை கடந்த ஐந்து இதழ்களில் நகரத்திலுள்ளோர் கிராமம் செல்வதன் அவசியத்தையும், அதனால் கிராம‌மும் அவர்களும் ஒருவருக்கொருவர் பெறும் நன்மைகளையும் கோடிட்டுக் காட்ட முயன்றுள்ளேன். விவசாயம் லாபகரமாகச் செய்வது எப்படி என்று பார்த்தோம். (சொன்னதோடு நின்று விடாமல், நம் காணித் திட்டம் நடைமுறையில் சரியாகுமா என்று ஆராய்வதற்காக திருநெல்வேலி, அம்பா சமுத்திரம் வட்டத்தில், செட்டிகுளம் என்ற ஊரில், ஒரு காணி நிலத்தில் ஒரு மாதிரிப் பண்ணையும் அமைத்துள்ளோம். நாம் சந்தைச் சிந்தனைகளில் எழுதியபடி, அண்மையில் நேரடி விற்பனை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். தொடங்கி இரண்டு மாதங்களே ஆன சூழலில் இது பற்றிப் பின்னர் விவரமாக எழுதுகிறோம்).

கிராமத்தில் வருமானமும், கல்வியும், சிறுதொழில் வாய்ப்புக்களும், சுய வேலை வாய்ப்பும் எங்ஙனம் நாமே ஏற்படுத்திக்கொள்ளுவது என்று பார்த்தோம். இதில் ஒவ்வொரு அங்கமும் முக்கியமானது; பல கட்டுரைகளில் ஆராய வேண்டிய ஆழம் கொண்டது. எனினும் முதல்சுற்றில் நாம் , ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு தலைப்பைத் தொட்டு , அதன் கீழ் நம் கருத்துக்களைக் கூறி அடுத்ததற்குப் பெயர்கிறோம். அந்த வரிசையில் இந்தக் கட்டுரையில் நாம் கிராமத்தில் மருத்துவ வசதிகளும், அவசர உதவிகளும் கிட்டுமா என்று ஆராய்வோம்.

"வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்" என்று சுமார் 1200 வருடங்களுக்கு முன் குலசேகராழ்வார் பாடியுள்ளார். விவிலியத்திலே யேசுநாதர் பல வியாதிகளைக் குணப்படுத்தினார் என்று சான்றுகள் உண்டு. சமயக் குரவர்கள் நோய் தீர்த்த பாடல்கள் ஏராளம். ஆதி நாகரிகங்களில் நோய்தீர்க்கும் திறனுள்ளவர்க்கு அரசனை விடச் செல்வாக்கு இருந்தது. ஆனால் காசுக்காக மருத்துவம் பார்த்ததாகச் சரித்திரங்கள் அதிகம் இல்லை. பெரும்பாலும் மருத்துவம் தன்னலமற்ற‌ ஒரு உயர்ந்த சேவையாகவே இருந்து வந்திருக்கிறது - மிகச் சமீப வரலாற்றுக் காலம் வரை!

அமெரிக்க நாகரிகம் (மகாத்மா காந்தி என்னை மன்னிப்பாராக!) உலகின் பிற நாடுகளுக்கு வழி காட்டும் தற்காலச் சூழலில், கல்வி, மதம், அறிவுரை, பொழுதுபோக்கு, உணவு, உடற்பயிற்சி, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது என்று எல்லாமே வியாபாரமாகி விட்டது - இதில் மருத்துவம் மட்டும் தப்புமா என்ன? கிராமமாயினும், நகரமாயினும் மருத்துவம் என்பதற்கு மிகுந்த செலவு செய்தாக வேண்டும். மருத்துவச் செலவுகள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு மருத்துவக் காப்பீடு வியாபாரமும் செழித்தோங்கும். இனி வரும் காலங்களில் ஆங்கில மருத்துவம் விலை ஏறிக்கொண்டே போகுமேயன்றிப் பாமரர்களைச் சென்றடைய வாய்ப்பில்லை. எனவே மருத்துவ வசதிக்கு முக்கியத் தேவை பணம் மற்றும் காப்பீடு. பணம் சேர்ப்பதற்கு கிராமத்தில் வாய்ப்புக்கள் அதிகமாதலால் (சரியாகச் சொல்வதானால் பணம் செலவழிக்க வாய்ப்புக்கள் குறைவு!) மருத்துவச் செலவு என்று வரும் பொழுது உபரிப் பணம் உள்ளவர்கள் சற்று முன் நிற்க இயலும்.

நவீன மருத்துவ வசதிகள் என்று நாம் கருதும் ஆங்கில மருத்துவ முறையில், நோயின் கார‌ணிகள் கண்டறியப்படுமுன், அதன் அறிகுறிகள் உடனடியாகக் கவனிக்கப்படுகின்றன (symptomatic treatment ). பக்க விளைவுகள் மிக அதிகம் உள்ளதும், ஒரு நோய் அழிக்க வேறொரு நோய் கிளம்புவதும், எல்லா மனித‌ உடலும் ஒன்றே என்ற கோட்பாடுடையதுமான இச் சிகிச்சை முறை பல அடிப்படைக் குளறுபடிகளைத் தன்னுள் அடக்கியது. ஆங்கில மருத்துவத்தை விமர்சிப்பது நம் நோக்கமல்ல. கிராமம் செல்வோர் உடல் நிலை பாதிக்கப்பட்டால் என்ன செய்வார்கள் என்பதே நாம் கவனிக்க வேண்டியது.

வியாதிகள் பெருகிவிட்ட இக்காலத்தில், மருத்துவக் கல்லூரிகளும் பெரிதும் பெருகி ஏராளமான மருத்துவர்கள் உருவாகி வருகிறார்கள். இதன் விளைவாக, எந்தச் சிற்றூராய் இருந்தாலும் போலி க்ளினிக்குகளும் (poly clinic), சுகம், ஆரோக்யம், வெங்கடேஸ்வரா, கணபதி, வள்ளிநாயகம் என்று இஷ்ட தெய்வத்தின் பெயரில் 24 மணி நேர சேவை (வியாபார) மருத்துவ மனைகளும் மலிந்து விட்டன. நம் தமிழ் நாட்டிலே எந்தக் குக்கிராமாமாயினும் ஒரு மணி நேர வண்டிப் பயணத்தில் ஒரு சிற்றூரையும் அதில் உள்ள போலி க்ளினிக்கினையும் அடையலாம். சென்னையில் இருப்பவர்கள் அவசர சிகிச்சைக்கு ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்குச் சென்று, அங்கு மருத்துவரைப் பார்த்துச் சிகிச்சை பெற இயலுமா என்று தெரியவில்லை. நாளின் பெரும்பகுதி நேரம் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கவே செலவாகி விடுகிறது.

இது இப்படி இருக்க, நகரங்களை விடவும் கிராமங்களில் உடல்நலமாய் இருக்க வாய்ப்புக்கள் அதிகம் என்பதைக் கிட்டத்தட்ட எல்லோருமே ஏற்றுக்கொள்வார்கள். சென்னையிலுள்ள எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர், வருடம் இரண்டு முறை குடும்பத்துடன் தன் சொந்த ஊருக்குச் சென்று ஓய்வெடுத்து வருவார். அதற்கு அவர் கூறிய காரணம் என்னைச் சிந்திக்க வைத்தது : " சென்னையில் சுவாசிக்க நல்ல காற்றுக்கு வாய்ப்பே இல்லை. இதனால் நம் நுரையீரல் மிகவும் பாதிக்கப்படும். பிராணவாயு பற்றாக்குறையினால் உடலின் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடும். எனவே சென்னையில் உள்ளோர் அனைவரும் ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் ஒரு வாரம் எங்கேயாவது சென்று தம் நுரையீரல்களைப் புதுப்பித்து வர வேண்டும்" என்றார்.

எரி முன்னர் வைத்தூறு போல நம் உடல்ந‌லம் அழியாதிருக்க, வருமுன்னர்க் காவோனாய் நாம் உடலின் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்குத் திறந்த வெளிகளில் நடப்பதும், நல்ல காற்றைச் சுவாசிப்பதும், இய‌ற்கை முறையில் விளைந்த பொருட்களை உண்பதும் எல்லாம் நல்ல உத்திகள். இய‌ற்கை வேளாண்மையில் விளைவித்த உணவுப் பொருட்களில் salicylic acid என்று சொல்லப்படும் உடல் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும் ஒரு அமிலம் அதிக அளவில் இருக்கும். செயற்கை வேளாண்மையில் இதன் அளவு வெகுவாகக் குறைந்து விடும். இந்த அமிலத்தால் புற்றுநோய், இருதய நோய் போன்றவை தடுக்கப்படும்.

விவசாயம் செய்யாவிடினும், சிற்றூர்களில் உள்ளோர் வீட்டைச் சுற்றிக் கீரையேனும் விளைவித்துக் கொள்ளலாம். இயற்கையில் விளைந்த‌ வாழை, முருங்கை, அகத்திக்கீரை, பரங்கிக்காய், பப்பாளி, மாங்காய், தேங்காய், கறிவேப்பிலை போன்றவை அண்மை வீடுகளுடன் நட்பில் ஏற்படும் இயல்பான பண்ட மாற்றில் கிடைக்கும். கிராம வாழ்க்கை நிதானமானது. மன அழுத்தம் குறைந்தது. இதுவே பல வியாதிகளை ஒத்திப்போட உதவும்.

நாங்கள் சென்னையில் 5 வருடம்(2000-2005) குடியிருந்தோம். அப்போது தவறாமல் மாதம் 1000 ரூபாய் மருத்துவச் செலவுக்கென்று நிதி ஒதுக்கீடே செய்ய வேண்டி வரும். சதா டெங்கு, சிக்குங்குனியா, வைரஸ் காய்ச்சல், இருமல், சளி என்று போராடிக்கொண்டே இருக்க வேண்டி வந்தது. ஆங்கில மருத்துவருக்கு ஒவ்வொரு முறையும் 100 ரூபாய்க் கட்டணமும், குழந்தைகளுக்கு விநோதமான மாத்திரை, களிம்பு, கசாயம் என்றும் வாங்கிக் கொடுத்தால்தான் சரி ஆகும். இப்போது சீர்காழி வந்து 7 வருடம் ஆகிறது. நாங்கள் மருத்துவத்துக்கு என்று செய்யும் செலவு மிகச் சொற்பமே - எப்போதாவது குழந்தைகள் விளையாடி அடிபட்டுக் கொண்டாலோ அல்லது வெகு அபூர்வமாக உடல்நலம் குறைந்தாலோதான் நாங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டி வரும்.

இவற்றையெல்லாம் தாண்டித் தற்சார்பிலிருந்து சிந்தித்தால், பல அரிய பாரம்பரிய மருத்துவ முறைகளைக் காலம் காலமாக நம் நாட்டில் கடைப்பிடித்து வருகிறோம். மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு என்று வள்ளுவர் அன்றே கூறியுள்ளார். மூலிகை மருத்துவமும், ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும், இயற்கை மருத்துவமும், யுனானியும் பல நூற்றாண்டுகளாகக் கையாண்டு வரும் நம் நாகரிகம், இன்று ஆங்கில மருத்துவம் மட்டுமே மெய் என்று கொள்வது நம் தன்னம்பிக்கை இன்மையைக் காட்டுகிறது.

பண்ணையில் ஒரு முறை நான் தங்கியிருந்த பொழுது ஒரு தேள் என்னக் கடித்து விட்டது - அங்குள்ள மூதாட்டி ஒருவர் இளம் பூவரசு இலைகளை உப்புடன் சாப்பிடக் கொடுத்தார். கொஞ்சம் தேங்காயும் தின்று நிறையத் தண்ணீரரும் குடித்தபின் எனக்குத் தானாக ஒரு மணி நேரத்தில் கடு கடுவென்றிருந்த வலி சரி ஆகி விட்டது. நண்பர் ஜெய்சங்கர் ஒரு முறை சருமத்தில் கொப்புளங்கள் வந்து எல்லா இடங்களிலும் பரவிய போது தினம் நான்கைந்து தும்பை இலைகளைச் சாப்பிட்டுத் தன்னைத் தானே சரி செய்துகொண்டார். இது போல் எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. மருத்துவமனை என்பதைக் கடைசிக்கட்டமாகக் கொள்ள வேண்டும். (ஆனால், சர்க்கரை நோய்க்குத் தினம் ஒரு ஆங்கில மருத்துவ மாத்திரை நான் சாப்பிடுகிறேன் என்ற உண்மையையும் இங்கு ஒத்துக் கொள்கிறேன். அதிகம் பயணம் செய்வதும், பல கடைகளில் கிடைத்ததைச் சாப்பிடுவதுமாக உள்ள வாழ்முறையில் மூலிகை மருத்துவம் முயற்சிக்க இயலவில்லை).

இயற்கை வேளாண்மை செய்யும் நண்பர் சேதுராமன் அடிக்கடி ஒன்று சொல்லுவார்: "விவசாயம் செய்யத் தேவையான அனைத்தும் நம் கொல்லையிலேயே உள்ளது" என்று. இதே போல் பெருமளவு நோய்களைத் தீர்க்கத் தேவையான அனைத்தும் நம் கொல்லையிலேயே உருவாக்க இயலும் என்றே நான் நினைக்கிறேன். தற்சார்பு வாழ்வியலில் மருத்துவம் ஒரு மிக முக்கியமான அங்கம். நோய்த் தடுப்பும், ஒத்தி வைப்பும், வந்தபின் நோய்முதல் நாடி அது தணிப்பதுவும் மானுட சமூகம் தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இன்றியமையாதவை. ஆங்கில மருத்துவம் நன்றாய்க் கற்ற நவீன மருத்துவர்கள் மனச்சுணக்கம் இன்றிப் பிற மருத்துவ முறைகளையும் புரிந்து கொண்டு அதன்பின் தற்சார்பான மருத்துவ சேவையில் ஈடுபட்டால், கிராம முன்னேற்றத்திற்குப் பெரியதொரு பலம் கிடைக்கும்.


Powered by LionWiki. Last changed: 2013/11/25 01:43 Erase cookies Edit History