KGS07

கெடு முன் கிராமம் சேர் - 07

பல சின்னஞ் சிறு கதைகள் பேசி.. - உழவன் பாலா

பொதுவாய் எல்லோருக்கும் உள்ள ஒரு கருத்து என்னவென்றால், கிராம வாழ்க்கை சலிப்பூட்டுவது; அதிகமாய்ப் புது நிகழ்வுகள் இல்லாதது; உண்டதே உண்டும், உடுத்ததே உடுத்தும், உரைத்ததே மீட்டு மீட்டுரைத்தும் நாள் கழிவது என்று. இதில் ஓரளவு உண்மை உள்ளது.கிராமத்தில் உள்ள பெரும்பாலோர் என்னிடம் "இங்க என்ன இருக்குன்னு இங்க வரீங்க?" என்று கேட்டிருக்கிறார்கள். உணவு, உடை, இருப்பிடம், பாதுகாப்புக்குப் பின் ஒரு மிக முக்கியமான மானிடத் தேவை பொழுதுபோக்கு. மாற்றமாம் வையகத்தே வெவ்வேறாய் நிகழ்வுகள் தேடிப் பழகுகிறது நம் மனம். "பழமையே அன்றிப் பார்மிசை ஏதும் புதுமை காணோம் எனப் புலம்புவாய்" என்றும் "புதியதை விரும்புவாய், புதியதை அஞ்சுவாய், புதியது காணிற் புலன் அழிந்திடுவாய்" என்றும் நம் மகாகவி மனப்பெண்ணைச் சாடியிருக்கிறானே! மேலோட்டமாய்ப் பார்க்கும் பொழுது பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாயுள்ள‌து, கிராம மலர்ச்சிக்கு ஒரு தடையாய்த் தெரிகிறது . ஆனால் மிகுந்த நிறைவான, பல சுவைகளையும் உடைய வாழ்க்கையை வாழ்வதற்குக் கிராமமே சரி.

இதன் மறுபக்கத்தைப் பார்த்தோமானால், நகர வாழ்க்கையில் நிதானம் என்பதற்கு அதிக இடமில்லை என்பது நிதர்சனம். பரபரப்பாக ஏதோ எல்லோரும் எப்போதும் செய்து கொண்டிருக்கிறோம். காலை எழுந்து பால் வாங்குவதிலிருந்து, குடி தண்ணீர் பிடிப்பது/வாங்குவது, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, நாம் கிளம்பி அலுவலகம் செல்வது, பின்னர் ஏதோ மிகவும் சாதித்து விட்டது போலக் களைத்து, ஓய்ந்து இரவில் திரும்புவது என்று சதா நேரத்துடன் போட்டியிட்டுக் கொண்டு ,அலைகளைத் துரத்தும் கடற்கரைச் சிறுவர் போல், வேகமாய் ஓடிப் புறப்பட்ட இடத்திற்கே வருகிறோம்.

கிரேக்கப் புராணங்களிலே சிசைபஸ் (sisyphus) என்றொரு பாத்திரம் உண்டு. ஒரு சாபத்திற்கு ஆளான அவன் வேலை என்னவென்றால், தினமும் காலை எழுந்து ஒரு மிகப் பெரிய பாறையை ஒரு குன்றின் உச்சிக்கு உருட்டிச் செல்வான். அவன் குன்றின் உச்சியை அடையும் பொழுது அந்தி சாய்ந்து விடும். அப்பாறை தன் எடையினால் தானாக உருண்டு குன்றின் கீழ் வந்து விடும். அவன் களைத்துச் சலித்துக் கீழிறங்கித் தூங்கச் சென்று விடுவான். பின் மறு நாள் காலை இதே பாறையை இதே போல் மீண்டும் மலையேற்றுவான். பொருள‌ற்ற வேலைகளை நையாண்டி செய்யும் ஒரு புராணக் கதை இது. நம்மில் உள்ள பல சிசைபஸ்களில் பெருமளவு நகரங்களில்தான் இருக்கிறோம் என்றே எனக்குத் தோன்றுகிறது!

சமூகவியலில் சொல்லப்படும் செயற்கைச் சலிப்பு ( unnatural monotony) என்ற வாழ்முறையில்தான் பொழுதுபோக்குத் தேவை அதிகமாயுள்ளது. சலிப்புக்கு முதற்காரணம் தற்காலத்தில் நாம் உடல் உழைப்பை எல்லாம் முற்றும் குறைத்துவிட்டு மன உளைச்சலை அதற்கு மாற்றாக நம் நவீன உற்பத்தி மற்றும் பிற தொழில்களில் வைத்துள்ளதுதான். உடலும், மனமும் இசைந்து உழைக்கும் வேலையே ஒரு பொழுதுபோக்குதான். ஒரு நல்ல ஆசாரியோ, தையற்காரரோ, கொத்தனாரோ வேலை செய்யும் பொழுது சலிப்புக் கொள்வதில்லை. ஆனால் ஒரு நாற்காலி/மேசை விற்கும் கடைக்காரரோ, பல ஆசாரிகளை/கொத்தனார்களை வேலைக்கு வைத்துக்கொண்டு கட்டிட வேலை/ மர வேலை செய்யும் ஒப்பந்தக்கார‌ரோ கவலை அதிகமாகப் பட்டுக் கொண்டு, உடல் உழைப்பின்றி, மன உளைச்சலுடன்தான் தொழில் செய்கிறார்கள். அவர்களுக்கு வேலை முடிந்ததும் சிந்தனை மாற்றமும், வார, வருட ஓய்வும், சுற்றுலாவும், இன்ன பிறவும் தேவைப்படுகிறது. ஆனால் உடல் உழைப்பால் தொழில் செய்யும் ஆசாரிக்கோ கொஞ்சம் மதுவும், நல்ல இரவு உணவும், தூக்கமுமே புத்துணர்ச்சிக்குப் போதுமானதாய் இருக்கிறது. இதையே சுமார் 2300 வருடங்களுக்கு முன் விவிலியத்தில் அரசர் சாலமன் "உழைப்பாளியின் உறக்கம் இனிமையானது" என்று எழுதுகிறார். 'Chief nourisher in life's feast' என்று ஷேக்ஸ்பியரால் புகழப்பட்ட உறக்கம் இன்று பலருக்கும் நல்ல காற்று, தண்ணீரைப் போல் அரிதான பொருளாகி விட்டது!

பெண்களை எடுத்துக் கொண்டால், இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் வரை கிராமத்துப் பெண்களின் பெரும்பாலான நேரம் உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவது, பாதுகாப்பது, வித விதமாய் அண்மையில் கிடைக்கும் உணவுப் பொருட்களை சமைப்பது, வீட்டுத் தோட்டத்தால் உணவுத் தற்சார்பு அடைவது என்று செலவானது. இதனால் தாய்மார்கள் தாங்களும் ஆரோக்கியமாய் இருந்து குடும்ப ஆரோக்கியத்தையும் காத்தார்கள். தற்போது எல்லாப் பொருட்களும் பிளாஸ்டிக் பைகளில் பதப்படுத்திக் கிடைப்பதாலும், மிக்சி, அரவை இயந்திரம் போன்ற பற்பல விசைப்பொறிகள் வேலைகளைக் குறைத்து விட்டதாலும், தொலைக்காட்சிப் பெட்டியே உற்ற தோழியாக மாறி விட்டது.

இன்றைய வாழ்முறையில் தொலைக்காட்சி என்பது பொழுதுபோக்கு என்றாகி விட்டது. Home is where your TV is. (உன் தொலைக்காட்சிப் பெட்டி உள்ள இடமே உன் வீடு) என்று ஆங்கிலத்திலே நையாடுவார்கள். "ஒரு தமிழனின் கதை: தமிழன் பிறக்கிறான், டி.வி பார்க்கிறான், வளர்கிறான், டி.வி பார்க்கிறான், மூக்கிறான், டி.வி பார்க்கிறான், இறக்கிறான்" என்று ஒரு நகைச்சுவை நடிகர் ஒரு பேட்டியில் கூறியது எனக்கு நினைவு வருகிறது. நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு கல்பம்; கல்பம் என்பது பிரம்மாவின் வாழ்வில் ஒரு நாள் என்று இந்துப் புராணங்களிலே கூறுவார்கள். மனித குலம் தொலைக்காட்சியின் முன் தவம் கிடக்கும் மணித்துளிகளை எல்லாம் தொகுத்தால் பல கல்பங்களைத் தாண்டும் என்றே நான் நினைக்கிறேன்!

நான் என் 47 வருட வாழ்வின் பெரும் பகுதியைப் பிறந்தது முதல் பெரு நகரங்களிலேதான் கழித்துள்ளேன் . சிறு வயதில்- வாழ்வு சலிப்பூட்டும் அளவுக்குப் பணக்காரர்களாக நாங்கள் இல்லாததால்- ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்துப் பிரஜைகளாய் இருந்ததால்- கிட்டிப்புள், கோலி, பம்பரம், பட்டம், திருடன்-போலீஸ் என்று கோவையின் தெருக்களிலே விளையாடியே நாங்கள் பொழுது போக்கினோம். எனக்கு நினைவு தெரிந்து நேரம்போக்குவது எப்படி என்று நான் விழித்ததே இல்லை. விளையாட நேரமின்மைதான் எங்களின் தலையாய குறையாக இருந்தது. மழைக்காலங்களில் வீட்டிற்குள் தாய‌ம், சீட்டாட்டம், சதுரங்கம், கேரம் என்று எங்கள் கொட்டம் மாறும். இன்றைக்குக் குழந்தைகள் திறந்த வெளியில் விளையாடுவது மிகக் குறைந்து விட்டது; நகரங்களில் திறந்த வெளியும் மிகக் குறைந்து விட்டது. கணினி விளையாட்டுக்களும், கை பேசிகளும், தொலைக்காட்சியுமே முக்கிய மகிழ்விப்போர் ஆகி விட்டன. PWC என்னும் நிறுவனம் 2013ல் இந்தியா பொழுதுபோகிற்காகச் செலவழிக்கும் பணம் ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்றும், இது வருடந்தோறும் 12% வளரும் என்றும் கணித்துள்ளது.

ஆனால் உண்மையில் நல்ல பொழுது போக்கு என்றால் என்ன? குழந்தைகளுக்கு ஒத்த‌ வயதுடையவர்களுடன் திறந்த வெளியில் விளையாடுவது முக்கியமான பொழுதுபோக்கு. ஜான் ஹால்ட் என்ற அமெரிக்கச் சிந்தனையாளர், பிள்ளைகளின் கல்வி என்பதே விளையாட்டுத்தான் என்றும் பள்ளி என்பது தேவையற்றது மட்டுமல்ல முற்றிலும் இயற்கைக்கு முரணானது என்று பல‌ ஆழ்ந்த ஆய்வுக்கட்டுரைகளும், புத்தகங்களும் எழுதி உள்ளார். இதற்குக் கிராமமே நகரத்தைக் காட்டிலும் ஏற்றது. (ஆனால் பிற வீடுகளும், குழந்தைகளும் இருக்க வேண்டும்! இன்று எல்லாக் கிராமங்களும் முதியோர் இல்லங்கள் போல் ஆகிக் கொண்டு வருகின்றன.)

பெரியவர்களுக்குச் சராசரியான பொழுதுபோக்கு என்றால் சில அடிப்படை விஷயங்களைச் சொல்லலாம்: சக மனிதருடன் கதை பேசுவது; சக மனிதர்களைப் பற்றி வம்பு பேசுவது; பிறருடன் வாக்குவாதம்/சண்டை செய்வது; ஒருவரை ஒருவர் நையாண்டி செய்து கொள்வது - இதெல்லாம் நம் தின வாழ்வில் தேவையான அறுசுவைகள். நவ ரசங்களையும் வெளிப்படுத்த வேண்டிய மனோரீதியான தேவை நமக்கு இருக்கிறது. மொழி என்ற நாகரிக வளர்ச்சியின் விளைவு இது. மொழி தெரிந்த அனைவருக்கும் பேச வேண்டிய ஆழ் மன உந்துதல் இருக்கும்; பெரிதும் சிந்திக்கப் பழகாத சராசரி மன வளர்ச்சி உள்ள மனிதர்களுக்குப் பிறரைப் பற்றித்தான் பேச முடியும். இதைத்தான் ப்ளேட்டோ "The popular mind can understand only to its level" என்றும் நம்மாழ்வார் "அவரவர் தமதம‌து அறிவறி வகைவகை" என்றும் கூறினர்!

எனவே சராசரி மக்களின் பொழுதுபோக்கு பாரதி சொன்னது போல் "பல சின்னஞ் சிறு கதைகள்" பேசுவதே! இதற்கு அடிப்படைத்தேவை ஒருவரை ஒருவர் அதிகம் பார்த்துக் கொள்ளும்படியான சமூக நிகழ்வுகள். கிராமங்களில் இவற்றிற்கு வாய்ப்பு அதிகம் - கோவில் திருவிழாக்கள், வீட்டு விசேடங்கள், சிறிய பிரச்சினை ஆனாலும் ஊரளவில் பஞ்சாயத்துக் கூடல், நடக்கும் தூரத்தில் இருக்கும் கிராமங்களெல்லாம் வந்து கண்டு மகிழும் அரிச்சந்திர புராணம், ந‌ந்தனார் சரித்திரம் போன்ற ஆண்டுக்கொரு வாரம் கலை நிகழ்ச்சிகள் என்று நம் முன்னோர் பற்பல திட்டங்கள் வகுத்திருந்தனர். தொலைக்காட்சியும், கிரிக்கெட்டும் வந்த பின் இன்று கிராம வாழ்க்கை மிகவும் சிதைந்து விட்ட்து. எனினும் இடம்-நேரம் இரண்டிலும் வசதியாய் இருப்பதால் இன்றைய சூழ்நிலையிலும் கிராமமே பொழுது போக்கிற்கு உகந்தது.

நகரங்களில் எல்லாரும் நெருக்கி வாழ்ந்தாலும் யாரும் நெருக்கத்துடன் வாழ்வதில்லை. பொழுது போக்கிற்கு செய்யப்படும் செயல்கள் சினிமாவிற்குப் போவது, கடற்கரைக்குப் போவது, உணவகங்களில் சென்று உண்பது, சற்று அதிகபட்சமாய் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அருகிலுள்ள திறந்த வெளி இடங்களுக்குப் போய்த் தங்குவது என்பன போன்றவை. உற்று நோக்கினால் இதற்கு நகரங்களில் வசிக்க எந்தத் தேவையும் இல்லை. கிராமத்தில் நல்ல வசதியுடன் பெரிய வீட்டில் வசித்துக் கொண்டு, பரபரப்புத் தேவை என்றால் எங்காவது கிளம்பி ஒரு நாள் முழுவதும் அலைந்து விட்டுப் பின் களைத்து வந்து கூடடைவதும் இதே போன்றதுதான். தமிழ் நாட்டிலே புகழ் பெற்ற, பாடல் பெற்ற, வரலாற்று/சமய முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் என்று கணக்கிட்டால் ஆயிரத்திற்கும் மேல் இருக்கும். ஒவ்வொன்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. வாரம் ஒன்றாய்ச் சென்றால் கூட எல்லாவற்றையும் ஒருமுறை மட்டுமே காண 20 ஆண்டுகள் பிடிக்கும்! ஒன்றிற்கும் நுழைவுக்கட்டணம் இல்லை - எல்லாமே பேருந்திலும், புகைவண்டியிலும் சென்று செலவின்றிக் காணக் கூடியவை.

நாம் எல்லாம் தமிழ்நாட்டில் பிறப்பதற்கோ, வசிப்பதற்கோ மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இங்கே எங்கு நோக்கினும் பழமை வாய்ந்த‌, வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும், இயற்கைச் சூழல்களும், ஒரே நாள் பயணத்தில் ஐந்திணைகளையும் காணக்கூடிய நிலப்பரப்பும், பிரமிக்க வைக்கும் கட்டிடக் கலைகளும், இயல்,இசை,நாடகத்தில் ஒரு உயர் நிலையை எட்டிய பண்டை அரசுகளின் எண்ணற்ற செல்வங்களும் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில், மிகக் குறைந்த விலையில் (பெரும்பாலும் இலவசமாக) கிடைக்கிறது. (உதாரணமாக‌, லண்டன் நகரில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் நுழைவுக் கட்டணம் நபர் ஒன்றுக்கு சுமார் 1000 ரூ; நம் திரு அனந்தபுரம் பத்மநாபபுரம் அரண்மைனைக்கோ இலவச அனுமதி.) பறவைகளை அடையாளம் காண்பதில் ஆர்வமுள்ள ஒரு நண்பர், சரியான தெரு வசதி கூட இல்லாத‌ எங்கள் கிராமத்தில் ஒரு நாள் முழுதும் கடும் வெயிலில் சுற்றிவிட்டு "இன்று 51 வகைப் பறவைகளுக்கு மேல் நான் இங்கே கண்டேன்" என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றார்.

நான் இதுவரை பேசியதெல்லாம் நம் மூளைக்கு வேலை கொடுக்காத விறுவிறுப்பற்ற பொழுதுபோக்குகளைப் பற்றி. முனைப்புடன் ஈடுபட்டுப் பொழுதைக் கழிப்பதற்குத்தான் கலைகள் உள்ளன. நம் இசை, இலக்கியம், கவிதை, ஓவியம், வரலாற்று ஆராய்ச்சி, கட்டிடக் கலை, கணிதம், வான்கோள் ஆராய்ச்சி, திணையியல் என்று ஒவ்வொன்றும் ஒரு வாழ்நாள் போதாத அளவு ஆழமும் அகலமும் கொண்டவை. இவை வெறும் பொழுதுபோக்கல்ல - வாழ்வே தவம் என்று நம்மை உயர்த்தக் கூடியவை. இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.


Powered by LionWiki. Last changed: 2014/05/26 04:39 Erase cookies Edit History