KenyaDiary

வாங்கக் கடன் நிறைக்கும் வள்ளல் முதலீட்டார்! (Edit)

( வழிப்போக்கன் என்ற பெயரில் தாளாண்மையில் வெளியான கட்டுரை )

நம் பாரத நாட்டை ஒரு வல்லரசாக்கவும் உலக வர்த்தகத்தின் மையமாக மிளிரச் செய்வதற்காகவும், இங்கு உள்ள ஏழைகள் எல்லாம் உடனே கோடீசுவரர்களாகவும் வேண்டி நம் பிரதமரும், நிதியமைச்சரும் பிற மேதைகளும் அந்நிய முதலீட்டிற்கு சிவப்புக் கம்பள‌ம் விரித்து வருகிறார்கள். ஏதோ பன்னாட்டுக் கம்பனிகள் முதலீடு செய்யாவிடில் நாம் எல்லாம் பட்டினிச் சாவில் பட்டு அழிந்து விடுவோம் என்பது போலச் சித்தரிக்கிறார்கள். வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைக்கோல் போலக் கெட்டு விடும் என்று அன்றே வள்ளுவர் எச்சரித்துள்ளார். சுதந்திரம் அடைந்த உடனேயே நம் தேசம் போகும் திக்கு சரியல்ல என்று அறிஞர் குமரப்பா கடுமையாய் எச்சரித்தும் அது யார் காதிலும் விழவில்லை. இன்று நம் நாட்டின் கடன் சுமை 1950ல் இருந்தது போல் 1000 மடங்கு அதிகரித்தும் நாம் இன்னும் பிடிவாதமாக இந்த உலகமயமாக்கல் நம்மைக் காப்பற்றி விடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அறிவாளி பிறர் பிழைகளைப் பார்த்துக் கற்றுக் கொள்வான். சராசரி மனிதன் தான் செய்த பிழைகளில் பாடம் கற்பான் - முழு மூடனோ, எவ்வளவு பட்டாலும், தான் செய்தது சரியே, அது தோற்றதற்கான காரணங்கள் வேறு என்று யாரைக் குறை சொல்வது என்று சுற்றுமுற்றும் பார்ப்பான். இன்று நம் அரசும், திட்டமிடுவோரும் இதில் யாரைப் போல் இருக்கிறார்கள் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனினும் அறிவாளிகளான நாம், பிறர் செய்த பிழைகளில் பாடம் காண முயல்வோம்.

இது நடந்தது கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில். சுமார் 4.5 கோடி மக்கள் கொண்ட ஒரு சிறு நாடான கென்யாவில் விவசாயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கால் பங்கு வகிக்கிறது. (இந்தியாவில் இது 17%). நாட்டின் இரண்டாவது பெரிய தொழில் விவசாயம். நம் நாட்டைப் போலவே சிறு,குறு விவசாயிகள் நிறைந்த கென்யாவில், பால் உற்பத்தியும், பால் பண்ணையும் முக்கிய சிறு தொழில்களில் ஒன்று. 95 சத‌விகிதத்திற்கும் மேற்பட்ட பால் சிறு விவசாயிகளால் உற்பத்தி செய்யப் படுகிறது. மொத்த வேளாண் உற்பத்தியில் பால் உற்பத்தி மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது. 2003ல் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் குழுமம் ( Food and Agricultural Organisation - FAO) ஒரு நீண்ட ஆய்வறிக்கையில், கென்யாவின் பால்பண்ணைகளைப் பற்றி ஆராய்ந்து, கென்யா பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது என்று கூறியுள்ளது. சிறு பால்பண்ணைகள் ஏறத்தாழ 6.25 லட்சம் குடும்பங்களுக்கு பால் உற்பத்தி வேலை வாய்ப்பு அளித்தது. இது தவிர பலவாயிரம் மக்கள் பால் விநியோகத்திலும் வேலை வாய்ப்புப் பெற்றனர்.

ஆனால் ஒரு விஷயம் நன்றாய் நிம்மதியாய் இருந்தால் அதில் உலக வர்த்தகம் செய்வது எப்படி, சும்மா விடுவோமா நாம்? 2007ல் வரிந்து கட்டிக் கொண்டு வந்தது நெஸ்லே (Nestle) நிறுவனம் - ஆம் , உலகின் பலப்பல நாடுகளில் குழந்தை உணவு விற்கும் அதே நெஸ்லே தான். அந்நிய முதலீடு செய்கிறோம் , பால் பண்ணைத் தொழிலை நவீன மயமாக்குகிறோம், உங்கள் நாட்டில் உள்ள சிறு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறோம் என்று தேனைத் தடவிப் பேசி விட்டு அரசின் அனுமதியுடன் நெஸ்லேவும் , அதன் பின் லேண்ட் ஆஃஃப் லேக்ஸ் (Land O' Lakes) என்ற நிறுவனமும் கென்யாவின் வளமான ரிஃப்ட் பள்ளத்தாக்கில் நவீன ரக மாடுகளைக் கொண்டு வந்து பால்பண்ணைகள் ஆரம்பித்தனர்.

அமெரிக்க அரசின் வெளிநாட்டு வேளாண் சேவைப் பிரிவைச் சேர்ந்த மிக்கேல் யோஸ்ட் என்பவர், "ஏழை நாடுகள் உலக வர்த்தகத்தில் பங்கு கொள்ளவும்", " அவற்றின் வேளாண் பொருளாதாரங்களை 21ம் நூற்றாண்டுக்கு இட்டுச் செல்லவும்" கேட்ஸ் அறக்கட்டளை, நெஸ்லே, அமரிக்க அரசு எல்லாம் இணைந்து இந்த முயற்சியில் முனைவதாக நீட்டி முழக்கினார். சிறுமீன்களை விழுங்கும் சுறாமீன் போல, இப்பெரும் நிறுவனங்கள் உழவர்களிடம் நேரடிக் கொள்முதல் செய்ய ஆரம்பித்தன. 2010ல் இந்த நவீனத் தொழில்நுட்பங்களால் கென்யாவின் பால் உற்பத்தி வேகமாக அதிகரித்து, தேவைக்கும் மிக அதிகமானதால், பாலின் கொள்முதல் விலை குறைந்தது. 2010 மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் பால் உற்பத்தியாளர்கள், தங்களுக்குக் கிடைக்கும் விலை கட்டுப்படி ஆகாத‌தால், பாலை வீணே வயலில் கொட்டினர்!

இன்றைய நிலை என்ன? இதையும் மீறிப் பால் விவசாயிகள் தங்கள் உற்பத்தியை, நம் நாட்டில் உள்ளது போலவே, பால்காரர்களிடம் விற்று ஓரளவு நிம்மதியாக இருந்தனர். ஒரு லிட்டர் பாலுக்குப் பால்காரர்கள் தரும் கொள்முதல் விலை 35 ரூபாய் (50 கென்ய சில்லிங்) - நிறுவனங்கள் தருவதோ 18 முதல் 28 ரூபாய் (28-40 கென்ய சில்லிங்). பால்காரர்கள் , உழவர்களிடம் 32-35 ரூபாய்க்கு வாங்கி காய்ச்சாத உடன்கறந்த பாலாக‌ ,42-43 ரூபாய்க்கு நுகர்வோரிடம் விற்கிறார்கள். பெரும் நிறுவனங்களோ பாலைக் காய்ச்சி அதில் உள்ள பாதிக் கொழுப்பை எடுத்து சீஸ், வெண்ணை போன்ற பொருட்களைத் தயாரித்தபின், குறைந்த கொழுப்புள்ள பாலை 78 ரூபாய்க்கு விற்கிறார்கள்!

இதனால் நடுத்தர மக்களும், பால்காரரிடம் பால் வாங்குவதே நல்லது என்று வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது பன்னாட்டுக் கம்பனிகளுக்கு ஏற்க முடியுமா? என்ன செய்தார்கள் நயவஞ்சகர்கள்? வழக்கம்போல் அர‌சின் கையை முறுக்கி, சாம, தான‌, பேத, தண்ட உத்திகளால், அமரிக்காவில் உள்ளது போல் ஒரு சட்டம் இயற்றி உள்ளனர்: "காய்ச்சாத, பதப்படுத்தப் படாத பாலை விற்பது சட்ட் விரோதம்!". இதற்கு இவர்கள் கூறும் காரணம் காய்ச்சாத பாலில் கிருமிகள் கூடி பொதுமக்களின் உடல் நலக் குறைவுக்கும் நோய் பரவுதலுக்கும் வழி வகுக்கும் என்று. ஆனால் உண்மையான‌ காரணம், 43 ரூபாய்க்குப் பொது மக்களுக்குக் கிடைக்கும் நல்ல பாலை முடக்கி, 78 ரூபாய்க்கு சத்து குறைந்த பாலை விற்று லாபம் பார்ப்பதுதான். உழவர்களுக்குக் கிடைக்கும் விலையும் 35 ரூபாய்க்குப் பதில் 28 ரூபாய். ஒரு லிட்டரில் முழுதாய் 50 ரூபாய் வருமானம்!

இது பரவலாக அமலில் வந்தால் கென்யாவில் என்ன நடக்கும்? அடிப்படை உணவான பாலின் நுகர்வோர் விலை ஏறும். உழவருக்குக் கிடைக்கும் கொள்முதல் விலையோ மிகவும் குறையும். சில ஆண்டுகளில் பால்காரர் வியாபாரமே இல்லாது போனபின், இப்பெரு நிறுவனங்கள் வைத்ததுதான் வாங்கும் விலையும், விற்கும் விலையும். இதில் உழவர் நலனும், நுகர்வோர் நலனும் பலி கடாவாகின்றன. இச்சட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பு இருக்கின்ற‌ போதும், இதற்கு அரசு சொல்லும் மற்றொரு காரணம் " நம் நாட்டில் இவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்; அவர்களின் முதலைப் பாதுகாக்க வேண்டும்" - என்னே பொருளாதார அறிவுடைமை!

முதலில் உழவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நாங்கள் முதலீடு செய்கிறோம் என்று தொடங்கிப் பின் எங்களுக்குக் கட்டுபடியாகவில்லை எனவே உழவர்களின் நேரடி மற்றும் சில்லறை விற்பனையைத் தடை செய்யுங்கள் என்று அரசை வற்புறுத்தும் இந்த முதலீட்டார்களால் பாமர மக்களுக்கு என்ன நன்மை கிடைக்க இயலும்? நாளை இதே நிலைமை நமக்கும் தானே? அரசாங்கங்களை விடவும் பெரும் வலுவுடைய பெரும் வாணிப நிறுவனங்கள், ஏழைகளுக்காகவா முதலீடு செய்கின்றன? தங்கள் லாபத்திற்கும், சுய நலத்திற்கும் அல்லவோ? அவை இவ்வளவு வளர்ந்திருக்கின்றன என்றாலே அவற்றின் பின்னணியில் என்னென்ன ஊழல்களும், அநீதிகளும் இருந்திருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்கலாம் அல்லவா?இதெல்லம் சிந்திக்கத் தெரியாதவர்களா நம்நாட்டு மேதைகள்?

பசுக்களைப் பாடும்போது "வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்காள்" என்று ஆண்டாள் அழகு தமிழில் மெச்சுவாள். ஆனால் இம்முதலாளித்துவ முதலைகளின் வள்ளன்மை நம் கடனை அல்லவா நிறைக்கின்றன!


Powered by LionWiki. Last changed: 2014/01/13 03:16 Erase cookies Edit History