kgs-book

கெடுமுன் கிராமம் சேர் - சாட்சி

0 foreword

1 சேவை எனப்படுவது யாதெனின்...

நம்மில் பலருக்கும் மனித இனத்தைப் பற்றிய அக்கறையும், அதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தாகமும் உண்டு.ஆனால் என்ன செய்வது என்ற தெளிவு நம்மில் மிகச் சிலருக்கே இருக்கிறது.உண்மையான சேவை என்பது என்ன, நம் அளவில் நம்மால் என்ன செய்ய இயலும் என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். இதற்கு முதலில் நாம் தற்போதுள்ள சமூக, பொருளாதார சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்மால் என்ன செய்ய இயலுமோ அதைச் செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் தாக்கத்தைப் பற்றி அதிகம் கவலைப் பட்டுக் கொண்டிருக்கலாகாது. அது மிகுந்த மன உளைச்சலை உருவாக்கிக் கடும் மனக்கசப்பிலும், விரக்தியிலும் கொண்டு போய் விட்டு விடும்.

தற்கால மானுடத்தைப் பார்க்கும் போது, உலகெங்கும், இன, நிற, மத. மொழி வேற்றுமை இன்றி இரண்டே சாதிகள் இருப்பதைக் காணலாம் - ஒன்று சுரண்டும் இனம், இன்னொன்று சுரண்டப்படும் இனம். வரலாற்றில் கொடுங்கோல் மன்னர்களும் அவர்களின் அடிவருடிகளும் சுரண்டும் இனமாய் இருந்திருக்கிறார்கள். பெரிதாய்ப் புகழப்படும் இராசராச சோழனின் ஆட்சியில் நில வரிகள் விளைச்சலில் 16% வரை இருந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. எல்லாப் பண்டை நாகரிகங்களிலும் ஆண்டான்-அடிமை இனங்களும், ஏழை-பணக்காரன் வித்தியாசமும் இருந்தன. இவ்விரு சாதிகளும் மனித நாகரிகத்திற்கும் முற்பட்டவை என்று சற்று உற்று நோக்கினால் புலனாகும். "மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியில்லை" என்று பாரதி சுதந்திர இந்தியாவை உருவகிக்கிறான் (ஆனால், இனத்தாலும், நிறத்தாலும் மட்டுமே மாறுபட்ட வேறு ஒரு சுரண்டும் கூட்டத்தை அல்லவோ நாம் வளர்த்து விட்டோம்!).

மக்கள் ஆட்சி என்ற பெயரில், அரசியல், வலியோர் மட்டுமே ஆடக் கூடிய‌ களமாக மாறி விட்டது. நல்லவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுகிறார்கள்.

[நாட்டில் உள்ள‌ இவ்வளவு மக்கள் சபை, மாநில சபை உறுப்பினர்களில் எவ்வளவு பேரை "இவர் சிறந்த சேவை செய்தவர், தன்னலம் இல்லாதவர்" என்று விரல் விட்டு எண்ண முடியும்?] தேர்தலில் வெற்றி பெற‌ மிகுந்த பணம் தேவைப் படுவதால், பெரும் வியாபார நிறுவனங்கள், அரசியல் கட்சிகளை எளிதாக‌த் தம் கைக்குள் போட்டுக் கொள்ள இயல்கிறது. அதிக பட்சமாக சுரண்டும் இனத்தில் பணக்காரர்களும், பதவியில் இருப்போரும் இருக்கிறார்கள்.சுரண்டும் இனத்திற்குக் கைக்கூலிகளாய் இருப்பதை நாம் நல்ல வேலை என்கிறோம்.

இச்சூழலில், ஒரு சராசரி மனிதனால் என்ன செய்ய இயலும்? தனி மனிதனால் என்ன மாற்றம் ஏற்படுத்த இயலும்? அல்லது விதியை நொந்தபடி ஆட்டு மந்தையுடன் போவதுதான் வழியா?

மையப்படுத்தப்பட்ட இச்சமூகப் பொருளாதார வாழ்முறையில், வேலைக்குப் போய் சம்பளம் வாங்குவதும், அச்சம்பளத்தைக் கொண்டு சந்தையில் நமக்குத் தேவையானவற்றை நுகர்வதும்தான் நமக்குத் தெரிந்த வாழ்க்கை. ஆணாய் இருந்தால் பணக்காரன் ஆவதும், பெண்ணாய் இருந்தால் பணக்காரனுக்கு மனைவி ஆவதும் வாழ்க்கையின் வெற்றியாகிறது. இதை ஒரு குதிரை வண்டியுடன் ஒப்பிடலாம்.

நாம் செல்ல வேண்டிய ஊருக்கு நடந்து போவது கடினமாதலால் குதிரை வண்டிகள் கண்டு பிடிக்கப் பட்டன; அதில் ஏறி அமர்ந்து விட்டால் பின் அது நம்மை இழுத்துக் கொண்டு போய் விடும். எத்தனை பேர் இருக்கிறோம், எத்தனை குதிரை வண்டிகள் உள்ளன, எல்லோருக்கும் வண்டியில் இடம் இருக்கிறதா, குதிரைகளால் தொடர்ந்து நம்மை இழுத்துக் கொண்டு போக முடியுமா என்பது எல்லாம் நமக்குத் தேவையற்ற கவலைகள்! முண்டியடித்து ஏறி நுழைந்து விட வேண்டியது. சரி ஏறி விட்டோமே இனி நிம்மதியாய் இருப்போமா என்றால் அது இல்லை. உட்கார எப்படியாவது இடம் பிடிக்க வேண்டும். உட்கார்ந்தாலோ கொஞ்சம் கால் நீட்டிக் கொண்டால் தேவலாம் போல இருக்கிறது. பின்னர் படுக்க இடம் வேண்டும். அந்த இடம் நம் குடும்பம், பிள்ளை குட்டிகள், உற்றார் உறவினர் எல்லருக்கும் கிடைக்க வேண்டும். அது மட்டும் போதாது நான் பிடித்த இடம் சாகும் வரை எனக்கு வேண்டும் , அதன் பின் என் பையனுக்கு, பேரனுக்கு என்று எல்லா இடமும் எனக்கே வேண்டும். என்னைச் சுற்றி உள்ளவர் எல்லாரையும் விட எனக்கு அதிக இடம் வேண்டும்.

இப்போது குதிரையைச் சற்று நோக்குவோம். புவியிலுள்ள இயற்கை வளங்களும், நீர், நிலம், காற்று போன்ற வாழ்வாதாரங்களும், ஆற்றல் (சக்தி) ஆதாரங்களும், பிற கனிம வளங்களும், தாவர, விலங்கு உயிர்ப் பெருக்கங்களும் எல்லாம் மனித இனத்தை இழுத்துக் கொண்டு போகும் குதிரைகள். அவற்றின் முதுகில் சவாரி செய்து செய்து தான் நாம் நடக்காமல் ஊர் போய்ச் சேர்கிறோம். வலுத்தவர்கள் எல்லாம் குதிரை வண்டியில் மிகுந்த இடங்களை வளைத்துப் போட்டு விட்டதாலும், மிக வலுத்தவர்கள் சொந்தமாய்க் குதிரைகளை வாங்கி இருப்பு வைப்பதாலும், சராசரி மக்களுக்கு என்று குறைவான குதிரை வண்டிகளே மிஞ்சுகின்றன ; அவற்றில் ஏகப்பட்ட நெரிசல் இருப்பதால் குதிரை பெருமூச்சு விட்டு , எலும்பெடுத்து, நுரை தள்ளிக் கொண்டிருக்கிறது. எனினும் நடக்க முடியும் என்பதையே மறந்து விட்ட நாம், முண்டியடித்து வண்டியில் ஏறுகிறோம். வண்டியில் ஏறியதும், எல்லா நல்லவர்களும், குதிரை படும் பாட்டைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கிறோம்; குதிரையைக் காப்பாற்ற என்னவென்ன வழிகள் இருக்கிறது என்று கருத்தரங்குகள் நடத்துகிறோம். சற்றுத் துணிவுள்ளவர்கள், கொழுத்த செல்வந்தர்களுக்கு இவ்வளவு குதிரைகள் ஏன் என்று புரட்சி செய்கிறோம்; பொதுவுடைமை தேவை என்கிறோம்.

வேறு சில நல்லவர்கள், கடவுளை நம்புங்கள் அவர் குதிரையையும் நம்மையும் காப்பாற்றுவார் என்று பக்தி மார்க்கத்தையும் அவரவர் தெய்வங்களையும் பரப்புகிறோம். நீ கருப்பு சாமியைக் காட்டுகிறாய், என் சாமி வெள்ளை என்று இந்நல்லவர்களில் ஒருவொருக்கொருவர் வண்டிக்குள்ளேயே சண்டை போட்டு மாய்கிறோம்.

வேறு நல்லவர்கள், 'செயல் ஒன்றுதான் சேவை; மற்றெல்லாம் வீண்' என்று குதிரையின் புண்களுக்கு மருந்து வைப்பதும், அதற்கு வலிக்காமல் இருக்க களிம்பு தடவி விசிறி விடுவதும் எல்லாம் செய்கிறோம். மனசாட்சி உறுத்தலாலோ அல்லது எல்லோரும் தன்னைப் பற்றிப் பெருமையாய் எண்ண வேண்டும் என்றோ பல செல்வந்தர்கள்,குதிரைகளுக்கு அன்னதானம், நெரிசலில் சிக்கி அடி பட்டோருக்கு இலவச சிகிச்சை முகாம் எல்லாம் நட‌த்துகிறார்கள். இதற்கு வட்ட நாற்காலி , சதுர மேசை போன்ற‌ பல அமைப்புகள் ஏற்படுத்தி அவரவர் கடையை விரித்துக் கொள்ளுகிறார்கள்.

ஆனால், இவ்வளவும் செய்யும் நம்மில் ஒருவரேனும், "அந்தக் குதிரை பாவமப்பா வண்டியில் இருந்து இறங்கி நடந்து போவோமே" என்று எண்ணுவதில்லை. அது முடியாவிடினும், 'எனக்கு நிறைய இடம் இருக்கிறது; எனக்கிது போதும் மற்றவர்கள் அமர்ந்து கொள்ளுங்கள்' என்று சொல்லத் தயாரில்லை. மனித இனத்தையும் நம் புவியையும் பீடித்துள்ள மிகப் பெரிய பீடை இந்த நுகர்ச்சிதான். "அளவாய் நுகரும் அருமைப் பண்பும்" என்று தாளாண்மையில் கவிஞர் செல்வமணி எழுதியிருந்தார். அதுதான் உலகிற்கு நாம் செய்யும் மிகப் பெரிய சேவை. காந்தியும் "எல்லாருடைய தேவைக்கும் நம்மிடம் உள்ளது; ஆனால் எல்லாருடைய பேராசைக்கும்தான் எதுவும் இல்லை" என்றார்.( Earth provides enough to satisfy every man's need, but not every man's greed).

இந்த இடத்தில் நாம் சூழல்சுவடு (ecological footprint) என்ற முக்கியமான ஒரு கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவு, அதன் இயல்பு, அது பயணிக்கும் தூரம், உடை, வீடு, நிர்வகிக்கும் முறை, வருட மின்சக்தி உபயோகம், போக்குவர‌த்துக்கு நாம் செலவழிக்கும் பெட்ரோல், டீசல் போன்ற பலவற்றையும் கூட்டி, நம் தேவைகளை எல்லாம் தயாரிக்கத் தேவைப்படும் மொத்த நிலப் பரப்புதான் நம் சூழல்சுவடு. இது பொதுவாக ஹெக்டேர் அளவில் கணக்கிடப்படும். இது ஒரு உத்தேசமான கணக்கு ஆனாலும், நாம் எந்த அளவில் இருக்கிறோம் என்று அறிய உதவியாய் இருக்கும். 2007 கணக்கீட்டின்படி அரபு நாடுகள் நபர் ஒன்றுக்குச் சராசரியாக 10 ஹெக்டேர் நிலமும், டென்மார்க், பெல்ஜியம், அமெரிக்கா ஆகியவை 8 ஹெக்டேர் நிலமும் தேவைப்படும் வாழ்முறையில் இருக்கின்றன. இந்தியாவில் 2007ல் நபர் ஒன்றுக்குச் சராசரியாக 0.91 ஹெக்டேர் நிலம் தேவை. (இது 5 வருடங்களில் மாறியிருக்கும்; மற்றும் பெரும்பாலான ஏழைகள் எந்தச் சூழல்சுவடுமே பதிக்காது இருப்பதால்தான் சராசரி அளவு நம் நகர வாழ்முறையின் அசிங்கத்தை மறைத்து விடுகிறது). நாம் இந்தப் புவிக்கும், மனித இனத்திற்கும் செய்யும் மிகப் பெரிய சேவை நம்முடைய சூழல்சுவட்டைக் குறைப்பதுதான். குதிரை வண்டியில் இருந்து இறங்குவது என்பதும் இதுதான்.

வண்டியில் இருந்து இறங்கி நடந்து போக முயற்சிப்பது எல்லாரும் முயற்சிக்கக் கூடிய செயல். இதைத்தான் நாம் தற்சார்பு வாழ்வியல் என்கிறோம். இதை முயற்சிக்கத் துணிவு குறைந்தால், நாம் நெரிசல் அதிகமற்ற, ஆரோக்கியமான‌ சொந்தக் குதிரையில் சவாரி செய்யலாம். நமக்கென்று ஒரு சிறு சமூகம் ஒருவாக்கிக் கொள்ள முயற்சிக்கலாம் - இதைத்தான் கிராம சுயராச்சியம் என்று காந்தி கூறினார். தென்னாப்பிரிக்காவில், இந்தியர்களுக்கான சுதந்திரப் போராட்டத்தின் போது, டால்ஸ்டாய் பண்ணை என்று ஒரு தற்சார்பான சமூகத்தை காந்தி உருவாக்கினார். உணவு, வீடு, கல்வி, மருத்துவம் போன்ற அனைத்தையும் அவர்கள் தற்சார்பாகவே நிறைவு செய்து கொண்டனர். 'தென்னப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்' என்ற தன் நூலில் இப்பண்ணையின் அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி அவர் அதிகமாக எழுதி உள்ளார்.இப்பண்ணை நடத்திய போது தாங்கள் பெற்ற ஆன்ம சுத்தியும், தவ வலிமையுமே தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

தற்சார்பைப் பற்றிப் பேசும் பொழுது தோரோவைப் பற்றிப் பேசாமல் இருக்க இயலாது. 1817ல் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்த தோரொ (Henri David Thoreau - 1817-1862), தற்சார்பு வாழ்வியலைத் தேடித் தன் 28வது வயதில் (1845) வால்டன் என்னும் குளக்கரையில் தானே தன் கையால் கட்டிய ஒரு குடிசை வீட்டில் 2 வருடம் 2 மாதம் தங்கி, எந்தக் கொள்முதலோ, பண்டமாற்றோ இன்றித் தன் உழைப்பால் மட்டுமே தன் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள இயலுமா என்று ஆராய்ந்தார். இவ்வனுபவங்களைத் தொகுத்து வால்டன் (Walden or Life in the Woods) என்னும் புத்தகமாக வெளியிட்டார். இன்றளவும் தற்சார்பு வாழ்வியலைப் பற்றிய அடிப்படை நூலாக அது கருதப்படுகிறது.

இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்!

அதற்கு முன் வள்ளுவருக்கு ஒரு வணக்கத்துடன் ஒரு புதுக்குறளுடன் இக்கட்டுரையை முடிக்கிறேன்.

சேவை எனப்படுவது யாதெனின், யாதொன்றும்

தேவை இலாத நடை.

(நடை = வாழ்முறை; எதுவும் நுகராத வாழ்முறையே மிகப்பெரிய‌ சேவை).

2 ஒரு காட்டின் கதை

முன்னொரு காலத்தில் திருப்தி என்றொரு காடு இருந்தது. அதில் நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும், சிங்கம், புலி, ஓநாய் போன்ற மாமிசம் உண்ணும் விலங்குகளும், மான், முயல், மாடு போன்ற தாவரம் உண்ணும் விலங்குகளும், ஓடை, ஆறு, நீர் வீழ்ச்சி, மரங்கள் அவற்றில் மீன்கள், பலவகைப் பறவைகள், பட்டாம்பூச்சிகள், மற்றும் பல்லி, பூரான், பாம்பு போன்ற ஊர்வன எல்லாம் ஒருமித்து வாழ்ந்தன. ஒன்றுக்கொன்று உணவாகவும், எதிரியாகவும் இருப்பினும், அவற்றின் வாழ்வாதாரங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட இனமும் அளவின்றிப் பெருகி விடாதபடி, ஒரு வகை சுழற்சியும், சமன்செய்யும் நிகழ்வுகளும் நடந்து கொண்டே இருந்தன. இதனைக் கதை ஆசிரியரான நாம் 'இயற்கை' என்று பெயரிடலாம்.

அமைதியும், நிறைவும் கொண்ட இந்தத் 'திருப்தி' என்ற காட்டில் ஒரு நாள் ஒரு வித்தியாசமான நான்கு சக்கர வண்டி வந்தது. ஓசையும், புகையும் எழுப்பி வந்த அதில் இருந்து நான்கைந்து இரண்டு கால் பிராணிகள் இறங்கின. தங்கள் தோலிற்கு மேல் பல வண்ணங்களில் ஆடை அணிந்திருந்த அவர்கள் காலணிகள் , தலையணிகள், கண்ணுக்கு கருப்பு உறை என்றெல்லாம் அணிந்து மிக நேர்த்தியாகவும், துளியும் மேலே அழுக்கின்றியும் பளபளவென மிளிர்ந்த வண்ணம் நடந்து வந்தனர். நேரே காட்டின் அரசனான சிங்கத்திடம் போய் "நாங்கள் மனிதர்கள். உங்கள் காட்டை மேம்படுத்தி நாகரிகமாக்குவதற்காக வந்துள்ளோம். அரசனாகிய நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்புத் தந்தால் நாங்கள் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உலகிலேயே மிக முன்னேறிய காடாக இதை மாற்றி விடுவோம்" என்றனர்.

இத்தகைய மிருகங்களைக் கண்டும் இது போன்ற வார்த்தைகளைக் கேட்டும் அறியாத சிங்கம், "நாங்கள் மிகுந்த நிறைவுடன் இருக்கிறோம். எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. பசிக்கும் பொழுது உணவும், குடிக்க நீரும், மனைவி குழந்தைகளுடன் இனிமையான வாழ்வும், நிறைய ஓய்வும், விளையாட்டுமாய் உள்ள எங்கள் வாழ்வை நீங்கள் எப்படி இதைவிட‌ முன்னேற்றுவீர்கள் ? " என்று கேட்டது.

வளர்ச்சி, முன்னேற்றம், வசதி மற்றும் மதிப்பு

இதற்கு ஒரு அழகிய பெண், சிங்கத்திடம் வந்து "ஐயா, அரசரே. என் பெயர் நவீனம். நான் போட்டிருக்கும் இக்கண்ணுறையின் பெயர் கறுப்புக் கண்ணாடி. இதை அணிந்தால் வெய்யிலே தெரியாது நீங்கள் அணிந்து பாருங்கள்" என்று சிங்கத்தின் மீது விழாத குறையாக அதற்குக் கண்ணாடி போட்டு விட்டாள். அதை அணிந்த சிங்கமும் "ஆம் குளிர்ச்சியாக உள்ளதே" என்று வியந்தது. அந்த மனிதப் பெண்ணின் மேல் வீசிய ஒருவித இனிய வாடையும் அரசனைக் கிறங்க அடித்தது. அப்போது கர்ஜனை செய்த அரசியின் அருகில் ஒரு உயரமான வாலிபன் சென்று , 'அரசி நீங்கள் இந்த நறுமணத் தைலத்தைப் பூசிப் பாருங்கள். உங்கள் அரசன் ஆயுளுக்கும் உங்கள் பின் அலைவார்' என்று அரசியின் மேல் ஒரு திரவியத்தைத் தெளித்தான். அரசியும் கிறங்கினாள். என் பெயர் வாணிபம் என்று அந்த இளைஞன் இனிய குரலில், பணிவுடன் அரசியிடம் அறிமுகம் செய்து கொண்டான்.

அப்பொழுது ஒரு வயதான பெரியவர், நரைத்த தலையுடன் தன்னை 'நவீன பொருளாதாரம்' என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அரசனைப் பார்த்து: "நீங்கள் அரசன் என்கிறீர்கள்; உங்களுக்கும் பிற சிங்கங்களுக்கும் என்ன வேறுபாடு? உங்கள் வலிமையைப் பறைசாற்ற நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்களுக்குச் சேவகர்கள் உண்டா? மாட மாளிகைகள், அரண்மனை எதுவும் உண்டா? நாளை உணவுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? தினம் தினம் வேட்டையாடித் தின்பதுவும் ஒரு வாழ்க்கையா? உங்கள் குடும்பத் தேவைக்கான உணவை நீங்களே வேட்டையாடுகிறீர்களே, இது காட்டுமிராண்டித்தன்மல்லவா? எப்போதும் மான், முயல் கறி தானா? நாகரீகம் என்றால் வண்ண,வண்ண உடை அணிவது, பல சுவைகளில் விதம்,விதமாய் உண்பது, உழைக்காமல் சேவகர்களை வைத்து உணவு உற்பத்தி செய்வது, பணியாட்கள் பலரை ஏவல் செய்வது, பிறர் நம்மைப் பார்த்துப் பொறாமைப்பட வைப்பது, நாலு பேர் நடுவில் கௌரவமாய், மரியாதையாய் இருப்பது, இது போன்றதுதான். அரசனான நீங்கள் இனிமேலும் இப்படி இல்லாமல் எங்களைப் போல் நாகரீகமும், முன்னேற்றமும் அடையுங்கள் - இப்படித்தான் உலகம் போய்க் கொண்டிருக்கிறது; நீங்களும் காலத்துக்கு ஏற்றபடி மாறி விடுங்கள்" என்று பலவாறாகப் போதித்தார். அவரின் குரல் வளமும், அழுத்தமும், தன்னம்பிக்கையும் சிங்க ராஜனைக் குழப்பத்தில் ஆழ்த்தின. "சரி என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள் ?" என்றார் அரசன்.

"அப்படிக் கேளுங்கள். முதலில் உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்புத் தேவை. இருக்க நல்ல இட வசதியுடன் வீடு தேவை. மண்ணிலிருந்து விளையும் புல்லைத் தின்பதும், அப்புல்லைத் தின்னும் விலங்குகளை நீங்கள் தின்பதுவும் எல்லாம் மிக அநாகரீகமான செயல். முதலில் நீங்கள் எங்களை நிறையக் கடை திறக்க அனுமதியுங்கள். பணம் என்றால் என்ன என்று உங்கள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொடுக்கிறேன். இதுதான் ரூபாய். இதைக் கொண்டு போய் கடையில் கொடுத்தால் உங்கள் தேவைக்கான உணவுப் பொருட்களும், வேறு வசதிகளும், வேலையாட்களும் எல்லாம் கிடைப்பார்கள். நீங்கள் பாடுபடவே வேண்டாம். வளர்ச்சி என்பதும் முன்னேற்றம் என்பதும் நிறையப் பணம் சேர்ப்பதுதான். மற்றவை எல்லாம் வீண். " - என்றார் திருவாளர் பொருளாதாரம்.

"சரி பணம் எங்களுக்கு எப்படிக் கிடைக்கும் ?" என்ற சிங்கத்தின் கேள்விக்கு, வாணிபம் "எதற்கும் கவலைப்படாதீர்கள். உங்கள் ஆட்சியிலுள்ள எல்லாப் பொருள்களையும் நாங்கள் வாங்கிக் கொள்வோம். உதாரணமாக ஒரு மானை வேட்டையாடி நீங்களே தின்னாமல் எங்களிடம் கொடுத்தால் நூறு ரூபாய் கொடுப்போம். அந்தப் பணத்தைக் கொண்டு போய் சந்தையில் உஙளுக்குப் பிடித்தபடி வேக வைத்த மானோ, முயலோ, இல்லை கோழிக்கறியோ எது வேண்டுமானாலும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். ஒரு மரத்தை வெட்டித் தந்தீர்களானால் 500 ருபாய் தருவோம். உங்களால் மரம் வெட்ட இயலாதென்றால் நீங்கள் அதற்கு யானைகளை அடிமை கொள்ளலாம். பழம் பறிக்கக் குரங்குகளையும், மீன் பிடித்து எங்களிடம் விற்க நாரை, கொக்கு, மீன்கொத்தி போன்ற பறவைகளையும் நீங்கள் பணிக்கு அமர்த்தலாம். அவையும் வெட்டியாய்த் திரியாமல் ஒரு நாகரீகமான வாழ்க்கை வாழலாம்; உங்கள் குடிமக்களில் ஒருவர் கூடப் பசி என்றால் என்னவென்றே தெரியாது இருப்பார்கள். எல்லாமே கடைத்தெருவில் கிடைத்து விடும். நிறையக் குடும்பங்களுக்கு வேலை கொடுத்துக் காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்" என்று விளக்கமளித்தார்.

இப்படியாக மேம்படுத்துதலும், வளர்ச்சியும், மனிதனும் குடி புகுந்த காடு ஒரு முப்பது வருடங்களுக்குப் பிறகு எப்படி இருந்தது? அதன் கதை என்னவாயிற்று? காலச்சுவட்டைப் புரட்டி அருகில் சென்று பார்ப்போம்.

வளர்ச்சியின் வெற்றி

சிங்கங்கள் எல்லாம் மான்களை வேட்டையாடி ஆடிப் பணமாய் மாற்றிச் சேர்த்தன. புலிகளுக்கும், சிங்கங்களுக்கும் வேட்டையாடும் நிலப்பரப்பில் கடுமையான வன்மை ஏற்பட்டு அடிக்கடி ஒன்றொடொன்று போர் புரிந்தன. யானைகள் எப்பொழுதும் சங்கிலிகளுடன் காட்டில் மரங்களைச் சாய்த்து இழுத்து வந்து கொண்டிருந்தன. மான்களும், மாடுகளும், வரிக்குதிரைகளும் தங்கள் பாதுகாப்பிற்கென ஓநாய்களுக்குச் சம்பளம் கொடுத்துக் காவலாளிகளாக்கின. அவை தம் இனத்தைப் பாதுகாப்பதற்குப் பணம் தேவையென்பதால் பால் பண்ணை வைத்து மனிதனிடம் அதைக் காசாக்கின. அவற்றின் குழந்தைகள் ஊட்டச் சத்து இல்லாத சவலைக்குழந்தைகளானாலும், உயிரோடும் பாதுகாப்போடும் இருக்க முடிந்ததை நினைத்து மகிழ்ந்தன. பழம் தூக்கித் தூக்கி முதுகு வளைந்து விட்ட குரங்குகள் தாங்கள் பறித்த பழங்கள் விலை அதிகமானதால், மரத்தின் வேர்களில் உள்ள கிழங்குகளைச் சாப்பிட்டு வாழப் பழகி விட்டன.

புத்திசாலித்தனமும், த‌ந்திரமும் நிறைந்த குள்ளநரிகள் எல்லாம், யானைகளுக்குப் புண்ணுக்கு மருந்து தரும் மருத்துவர் தொழில், மீன்கொத்திகளுக்கும், நாரைகளுக்கும் மீன்பிடிக்கக் கற்றுத் தரும் பள்ளி- கல்லூரி நடத்துதல், மான்களுக்கும், மாடுகளுக்கும் ஆயுள் காப்பீடு, சிங்கம், புலிகளுக்கு ஆலோசகர் தொழில் போன்ற நூதனமான, யாரும் நுழைய முடியாத தொழில்கள் அமைத்து நிறையப் பணம் சேர்த்தன. அழகிய மயில்கள், விளம்பரங்களில் நடிப்பதும், மனிதர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதுமாகத் தங்கள் வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தன.

தந்திரமோ, பேச்சுத் திறமையோ இல்லாத கழுதை, எருமை, ஆடு போன்ற நேர்மையான மிருகங்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தப் பட்டு சமூக ஏணியின் அடித்தட்டில் வைக்கப்பட்டன. ஏய்க்கும் தொழில்களே மரியாதைக்குரியனவாக உயர்வு பெற்றன. காட்டில் செழிப்பைக் கண்ட மனிதர்கள், பெரும் அளவில் காட்டிற்குப் பெய‌ர்ந்து, மேலும் பணம் சேர்த்தனர். இதைச் சற்று யோசிக்கத் தெரிந்த கிழக் கழுதைகள் கேள்வி கேட்ட போது, இதுதான் வளர்ச்சி, இதுதான் ஒரே வழி மற்றெல்லாம் பழம்போக்கு என்று பெருமளவில் ஊடகங்களில் விளம்பரங்கள் செய்யப் பட்டன. தொடர்ந்து தொல்லை கொடுத்த கழுதைகளை தேச துரோகக் குற்றங்களுக்காக சிறையில் அடைத்தனர். இதற்காகப் பல சட்ட திருத்தங்கள் போடப்பட்டன.

சில கழுதைகள் தங்கள் பாட்டனார்கள் இதை எதிர்த்து அன்றே எழுதி வைத்ததைப் படித்து விட்டு, எல்லா மிருகங்களிடமும் சென்று "நாமெல்லாம் இப்படி அடிமைப்படப் பிறந்தவர்கள் இல்லை. யானைகள் விலங்கென்றால் என்னவென்றே அறிந்ததில்லை,பறவைகள் பறப்பதற்குப் பிறந்தவை.நேர்மையான சிங்கம் வருடத்தில் 15 முதல் 20 முறைதான் வேட்டையாடும்.உணவைத் தவிர வேறு எதற்கும் வன்முறையே அறியாதவர்கள் நாம். நம் வாழ்வாதாரங்களான நீர், மண், மரம் இவற்றை விலங்குகளான நாம் ஒரு போதும் அழிக்க முற்பட்டதில்லை. பணம் என்பது இல்லாமலே நல்ல வாழ்க்கை வாழ் முடியும், நாமெல்லாம் இந்தக் காட்டை விட்டு அந்த மலையின் பின்புறம் உள்ள முட்கள் நிறைந்த‌ காட்டிற்குச் சென்று விடுவோம். அங்கே மனிதர்களும், வளர்ச்சியும் வராது. நிம்மதியாய் இருப்போம். நம்மை நம்பி விடுதலையை விரும்பி வருபவர்கள் வரட்டும். மற்றவர்களுக்காக நாம் பரிதாபப்படுவோம், பிரார்த்தனை செய்வோம் - ஆனால் நம்மால், நம் ஆற்றலால் இந்தக் காட்டை மீட்க இயலாது. பேராசையும், களவும், காமமும், பொறாமையும் புரையோடி விட்டன. வசதிகள் குறைந்தாலும் ஒரு தற்சார்பான வாழ்வைத் தேடுவதே நல்லது. எனவே வெளியேறுவது ஒரு நல்ல தீர்வு" என்றன. மகாகவி என்ற ஒரு கழுதை "மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ, கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ" என்று பாடியது. கேட்டிருந்த வெகுசில மிருகங்கள் தீராத விடுதலை வேட்கை கொண்டன. தன்னம்பிக்கையும், துணிவும் உள்ள சில கழுதைகள் தனித்து வெளியேறின.

மேலும் இருபது வருடங்களுக்குப் பின்

மனிதர்கள் மட்டுமே தனியாகக் கூடி ஒரு நள்ளிரவில் ஒரு ரகசிய ஆலோசனைக் கூட்டம் நிகழ்த்திக் கொண்டிருந்தன. இக்கூட்டத்திற்கு மனித நாட்டிலிருந்து பற்பல பெரிய மனிதர்கள் வந்திருந்தனர். கூட்டத்தைக் கூட்டிய பொருளாதாரம் விளக்கிக் கொண்டிருந்தார்: "கடந்த ஐம்பது வருடங்களில் நாம் இந்தக் காட்டிலிருந்து பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களைச் சுரண்டி விட்டோம். சாதி, மதம், இனம், நிறம் என்று பற்பல பிரிவினைகளை இவர்களுக்குள் உருவாக்கி இவர்களை ஆண்டோம். மேம்படுத்துதல் என்ற பெயரில் நாம் முடிந்தவரை சுரண்டி விட்டோம், இங்கே சந்தை தேக்க நிலைக்கு வந்து விட்டது. இப்போது இந்தக் காடு வளம் மிகவும் குன்றி விட்டது. கூலி வேலை செய்யும் நம் குடிப்படைகள் மிகவும் நோயுற்று விட்டார்கள். நாம் வெளியேறி வேறு காட்டை நோக்கிப் போக இது மிக நல்ல தருணம்.பேசாமல் இந்த மிருகங்களுக்கு தன்னாட்சி. மக்களாட்சி என்ற புதிய பெருங்காயப் பெட்டிகளைக் காட்டி வெளியேறிவிடுவோம்" என்று பல புள்ளி விவரங்களைக் கூறியது. கூடியிருந்த பல மனிதர் இன நிபுணர்களும் அதை வரவேற்றனர். இந்தச் சுரண்டலுக்குத் திட்டமிட்ட திருவாளர் பொருளாதாரத்திற்கு மனித இனத்தின் மிகப் பெரிய மரியாதையாகக் கருதப்பட்ட நோபல் பரிசு வழங்கப்பட்டது. நம் திருப்தி என்ற காடும் மக்களாட்சி பெற்றது.

(பின் குறிப்பு: இந்தக் காட்டிற்கு திருப்தி என்ற பெயர் கதாசிரியர் வைத்ததுதான். வாசகர்கள் அவரவர் விருப்பப்படி இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்கா, பிரேசில், பெரு, பிலிப்பைன்ஸ் போன்ற பெயர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் எல்லா இடத்திலும் கதை ஒன்றுதான்!)

3 தாமே தமக்கு விதிவகையும்

தற்சார்பு வாழ்வியலில் தன்னாட்சி (பூரண சுயராச்சியம் - absolute self rule) என்றால் என்ன என்று ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம். பலகோடி தனிமனிதர்களால் உருவான சமூகத்தைச் சீர் செய்ய ஒரு சில தனிமனிதர்களால் இயலுமா என்பது கேள்வி.

தற்சார்பு என்பதன் கோட்பாடு என்ன? தன் தேவைகளுக்குத் தன்னைச் சார்ந்து இருப்பது தற்சார்பு. இதில் மனிதனுக்கு உடல் ரீதியாகவும், மனம் ரீதியாகவும் இரண்டுவகையான தேவைகள் உள்ளன. உடல் ரீதியான நேர்மையான தேவைகள் எளிதாய் நிறைவுசெய்யக் கூடியவை; அடிப்படையான‌ இல்லற ஒழுக்கமும், நேர்மையான ஒரு தொழிலும் இருந்தால் நம் உடல் ரீதியான தேவைகள் எளிதில் நிறைவு பெற்று விடும். ஆனால் மனம்தான் புரியாத புதிர். மனதின் ஆசைகளுக்கு எல்லையே இல்லை ; "அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர்" என்று தாயுமானவர் எச்சரிக்கிறார். எனவேதான் எல்லா மதங்களிலும் மனத்தை அடக்கக் கூடிய துறவிகளுக்கு மிக உயர்ந்த மரியாதை அளிக்கப்படுகிறது. மனத் தேவைகளில் முக்கியமானது மனதை நெறிப்படுத்துவது. அதற்குத் தேவை ஒரு கோட்பாடும் (சித்தாந்தம்) அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் அமையும் ஒரு வாழ்முறையும். வரலாற்றைப் பார்க்கும் போது மனித இனம்தான் உலக அழிவில் மிகப்பெரிய பங்கு கொண்டதென்றும், எக்காலத்திலுமே தீயவர்களும், நல்லவர்களும் கலந்துதான் இருந்திருக்கிறார்கள் என்றும் தெளிவாகும். ஆனால் வரலாற்றில் மனித இனம் மேம்படுவதற்கு வித்திட்ட அனைவரும் ஒரு அடிப்படைக் கோட்பாட்டைப் பல்வேறு வடிவங்களில் கூறியிருக்கிறார்கள்.அக்கோட்பாட்டை நாம் தற்சார்பு வாழ்வியல் என்று கூறுகிறோம்.

மகாபாரதத்தில் துரியோதனன், தான் கெட்டவன் என்று தெரிந்தும் தன்னால் அது பற்றி ஒன்றும் செய்ய இயலவில்லை என்று கூறுவதாக வரும். வைணவக் கவிஞரான நம்மாழ்வாரும் இயற்பா பெரிய திருவந்தாதி எனப்படும் தன்னுடைய வெண்பாக்களில்

இவையன்றே நல்ல, இவையன்றே தீய

இவையென்று இவை அறிவனேலும் - இவையெல்லாம்

என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே

என்னால் செயற்பால‌து என்

(எது நல்லது எது தீயது என்று தெரிந்தும் அந்தக் கட்டுக்களில் இருந்து விடுபட முடிவதில்லையே, என்னால் என்ன செய்ய இயலும்)

என்று வருந்துகிறார். ஆதி சங்கரர் தன்னுடைய விவேகசூடாமணி என்னும் நூலில் ஆன்ம சாதகனுக்கு இன்றியமையாத குணங்கள் என்று வரிசையிடும்போது, "எது நிலைப்பது (நித்தியம்) , எது நிலையாதது(அநித்தியம்) என்று பகுத்தறியும் விவேகம்" முதலிலும் அதன் பின் " அநித்தியப் பொருட்களை விட்டொழிக்கும் வைராக்கியம்" இரண்டாவதாகவும் வரிசைப்படுத்துகிறார். கிரேக்க அறிஞர் பிளாட்டோ "எது நல்வாழ்வு?" என்ற தேடலுக்குத் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவழித்ததாகக் கூறுவர்.நம் அறிஞர் குமரப்பாவும், அரசியல் கொள்கையைப் பற்றி எழுதும் பொழுது "ஒரு நாட்டின் கொள்கை, வாழ்வைப் பற்றிய அடிப்படைச் சித்தாந்தத்தைச் சார்ந்ததாக இருந்தால் அக்கொள்கை தெளிவாக இருக்கும்" என்று எழுதியிருக்கிறார்.

வால்டனில் தோரோவும், "மனிதன் தொடர் முயற்சியால் தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ளும் திறனை விட ஒரு மிகப்பெரிய ஊக்கமூட்டும் உண்மை நான் எதுவும் அறியேன்" என்று எழுதியுள்ளார்.

ஆக இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்பொழுது, (1) நன்மை தீமை என்று இரண்டு உள்ளது (2) நாம் எவ்வளவு தீமையில் மூழ்கி இருந்தாலும் ஒரு உந்துதலுடன் மேலெழும்பி நன்மையை நோக்கிப் போவது என்ற இரண்டு சித்தாந்தங்களை நாம் ஏற்றுக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.

எது நல்லது , எது தீயது என்ற கேள்விக்கு ஒரு ஞானி இவ்வாறு விடை கூறினார் " உலகியலில் பார்க்கும் போது எச்செயல் துன்பத்தை உண்டாக்குகிறதோ அது தீயது; எச்செயல் துயர் துடைக்கிறதோ அது நல்லது. பூரணமாகப் பார்க்கும் போது எது உன்னை ஞானத்தின் அருகில் கொண்டு செல்கிறதோ அது நன்று; எது உன்னை ஞானத்தினின்றும் சேய்மைப்படுத்துகிறதோ அது தீது" (இதில் ஞானம் என்று ஒன்று இருப்பதாகவும் அதை நாம் நோக்கிச் செல்ல வேண்டும் என்று்ம் பொருள்படுகிறது. இதை வேண்டுவோர் ஏற்றுக் கொள்ளலாம்; இல்லையேல் விட்டு விடலாம். நம் தேடலுக்குக் கடவுள் என்பதோ,வைகுந்தம், கயிலாயம், தேவ ராச்சியம், மோட்சம், நிர்வாணம் போன்ற உருவகங்களோ தேவையற்றவை. உள்ளதை உள்ளபடி அறிவதே நம் நோக்கம்.) பகுத்தறிவு என்பது நாத்திகம் அல்ல , ஆத்திகமும் அல்ல. ஆத்திகம் மூட நம்பிக்கை என்றால், நாத்திகம் மூட எதிர்ப்பு அவ்வளவே. யார்யார்வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது தான் பகுத்தறிவு. தனிமனித வாழ்வில் மெய்ப்பொருளைக் காண்பதே நம் நோக்கம்.

சரி நன்மை என்பது என்ன, தீமை என்பது என்ன? எல்லா உயிர்களும் தன்னை இந்தப் புவியில் இருத்திக் கொள்ள மிகக் கடுமையான வன்முறையைக் கடைப்பிடிக்கின்றன. ஒரு உயிரைத் தின்றுதான் இன்னொரு உயிர் வாழ இயலும் என்பது இயற்கை நியதி. ஆனால் மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் எதுவும் தங்கள் அடிப்படைத் தேவைகளைத் தவிர வேறு எதற்கும் வன்முறையைக் கையாள்வதில்லை. மனிதன் மட்டுமே தேவைகளுக்கு அன்றி ஆசைகளுக்கும், பொழுது போக்கிற்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயத்திற்கும், ஆளுமைக்கும், சக மனிதர்களின் பொறாமையைத் தூண்டுவதற்கும் எண்ணில் வன்முறையைக் கையாள்கிறான். எனவே வன்முறையைக் குறைப்பதும் பிறர் துயர் துடைப்பதும் நன்மையான விடயங்கள் என்று கொள்ளலாம். அகிம்சையே பரம தர்மம் என்று வேதத்தில் சொல்வதும் , பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று வள்ளுவர் போற்றுவதும் இந்த நன்மையையே.

முதல் கட்டுரையில் பார்த்தது போல, சூழல்சுவட்டைக் குறைப்பது அகிம்சையின் ஒரு மிக நல்ல வெளிப்பாடு. அது மிகப் பெரிய சேவையும் கூட. இது இயற்கை வேளாண்மை, எளிய வாழ்முறை, சுயநலம் குறைந்த நடை, சமூக சேவை, அநீதி எதிர்ப்பு போன்று பல வடிவங்களில் வெளிப்படலாம். எவ்வடிவாயினும் இதன் உண்மையான உந்துதல், நம் உள்ளிருக்கும் ஒரு இனம்புரியாத‌ தேடல்தான். ஆனால், நம் உடல் ரீதியான தேவைகளைக் குறைப்பதும், சூழல் சுவட்டைக் குறைப்பதும் ஒரு துவக்கம் மட்டுமே - அதுவே முடிவாகி விடாது. சாதாரண மனிதர்களான நாம் சதா காரண காரியங்களிலேயே விடயங்களைப் புரிந்து கொள்கிறோம். நன்மை- தீமை, வினா-விடை, இன்பம்-துன்பம் எல்லாம் நமக்கு ஐம்புலனுக்கு உட்பட்ட உலகில் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.

ஆனால் இந்த ஐம்புலன்களுக்கு அடித்தளமான, "சித்" என்று வடமொழியில் கூறப்படும், Consciousness என்று ஒன்று எல்லா உயிரினங்களையும் ஒரு மின்காந்த வெளிபோல் இணைக்கிறது. நாம் இருக்கும் வெளியையும், மூச்சு விடும் காற்றையும் நாம் அனைவரும் பகிர்ந்து கொள்வது போல் இந்த சித்தத்தில் நாம் அனைத்து உயிர்களும் இணைக்கப்பட்டு இருக்கிறோம். நம் ஒவ்வொருவரின் எண்ணற்ற எண்ணங்களின் தொகைதான் இந்த சித்தம். காற்றில் ஒருவர் செய்யும் மாசு எங்ஙனம் அனைவரையும் பாதிக்கிறதோ அதே போல் ஒவ்வொருவரின் மாசு படிந்த சிந்தனைகள்தான் திரளாகி ஒட்டு மொத்த உலகத் தீமைகளாக வடிவெடுக்கிறது.

இந்த சித்தம் என்கிற ஆற்றில் நம் சுயநலமான சிந்தனைகள்தான் சாக்கடை நீர்போல் கலந்து மாசு படுத்துகின்றன. எனவே மிகச் சிறந்த‌ நன்மை என்பது சுயநலமற்ற மனமே; தெளிந்த மனத்தில் குழப்பம் உருவாக்குவது இந்தச் சுயநலமே. சுயநலமற்ற எந்தச் செயலுமே ஒரு சேவைதான் -ஏனெனில் அதைச் செய்பவன் எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை (தன் சுய பாராட்டுதலைக் கூட!). மகா பாரதத்தில் கண்ணன் செய்யும் எண்ணற்ற சூதுகளும், பொய்களும், கோபியருடன் குலவியதும் எல்லாம் சுயநலமற்றவை. தனக்கென்று எதுவும் அவன் செய்ததாய் சான்று இல்லை. ஆனால் தருமன் ஒரே ஒரு பொய் சொன்னதற்காய் மிகவும் வருந்துகிறான். அவனின் நேர்மை மிகுந்த தன்னினைப்பு உள்ளதாய், சுயநலமானதாய், இருக்கிறது.

கூர்ந்து கவனித்தால் பெரும்பாலான சுயநலத்தின் பின்னணியில் தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் , ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு இச்சை இழையோடும். அடுத்தவரின் மதிப்பீட்டிற்கு நாம் சாயத் தொடங்கும் பொழுதே தற்சார்பை இழக்கிறோம். உண்மையான தற்சார்பு என்பது நம் மனத்தை நாமே நிர்வகிக்கப் பழகுவதுதான். நம்மை நாமே, நம் அறிவால் மட்டும் ஆள்வது தன்னாட்சி. உலகத்தோடு ஒட்ட ஒழுகுவது எல்லோரும் செய்வது; உலக நியதிகளால் கட்டுண்டு, பொறுக்க முடியாமல், அந்தத் தளைகளை எதிர்த்து நாடோடிகள் போல் தன்னிச்சைப்படி வாழவது மரபெதிர்ப்பாளர்கள் (hippie) செய்வது - இரண்டுமே தற்சார்பற்றவை; அதனால் நிலையற்றவை. இசைவும் இன்றி, எதிர்ப்பும் இன்றி, தன் அறிவைப் பயன்படுத்தி நன்றும், தீதும் பகுத்தறிந்து, தீதை ஒதுக்கி, நன்றைக் கொள்வது உண்மையான தன்னாட்சி. ஒரு சமயம் உலகோடு ஒழுகுவது போலவும், ஒரு சமயம் மரபை எதிர்ப்பது போலவும் தோன்றினாலும், தன்னாட்சியைக் கடைப்பிடிக்கும் ஒருவன் எப்போதும் தன் அறிவிற்கு மட்டுமே செவி சாய்ப்பான்.

Inner Voice என்று காந்தி கூறியதும் , "எச்சமயத்திலும் எனக்கு உள்ள ஒரே கடமை எனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை மட்டும் செய்வதே " என்று தோரோ வால்டனில் எழுதியதும் இந்தத் தன்னாட்சியைத்தான்.

சாதாரண மனிதர்களான நமக்கு இது மிகக் கடினமானது; நம் அறிவு என்ற வாள் பயன்படுத்தாமல் மிகவும் மொக்கையாகி விட்டது. அதற்காக நாம் பின் தங்கி விடக்கூடாது. பயன்படுத்தப் படுத்த அது தன் கூர்மையைத் திரும்பப் பெறும். நான் இந்தத் தன்னாட்சியை முயற்சிக்கும், மிகவும் தடுமாறும், இடறி விழும், ஒரு சிறு குழந்தை மட்டுமே என்பதை இவ்விடத்தில் வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறேன். இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் எழுதியுள்ளது அனைத்தும் என் அறிவிற்குப் புலப்பட்டு, உண்மையான தற்சார்பிற்கு இதுதான் வழி என்று தெளிந்துதான் எழுதுகிறேன்.

இந்தத் தன்னாட்சியை ஒரே ஒருவர் கடைப்பிடித்தாலும் அவரால் பல்லாயிரம் பேருக்குப் பலன் உண்டு; இருட்டறையில் ஒரே ஒரு செங்கல் தன்னைக் கரைத்துக் கொண்டு விடுபட்டால் அதன் மூலம் வரும் வெளிச்சம் அறை முழுதும் வீசும். புறந்தூய்மை நீரால் அமைவது போல் புறத்தற்சார்பு எளிமையால் அமையும்; ஆனால் வாய்மை போல் இந்தத் தன்னாட்சிதான் அகத்தற்சார்பிற்ககு வழி.

4 பொன் செய்யும் மருந்து

தற்சார்பு வாழ்வியலின் பல அங்கங்களைப் பற்றி நாம் இயன்றவரை ஆராய்ந்து வருகிறோம். அதனால் சமூகத்திற்கு ஏற்படக் கூடிய நன்மைகளைப் பார்த்தோம். சமூகத்தினால் தனக்கு எதுவும் தேவைப்படாத தனிமனிதர்கள், சமூக வாழ்வில் இருப்பதே ஒரு தியாகமும், சேவையும்தான் என்றும் பார்த்தோம். தற்சார்பு வாழ்வியலுக்குத் தேவையான மனநிலை எது என்று இக்கட்டுரையில் ஆராய்வோம்.

நான் சுமார் 25 வயது இளைஞ‌னாய் இருக்கும்போது என் நண்பனின் தந்தை "வாழ்வில் உன் குறிக்கோள் என்ன?" என்று கேட்டார். நான் அதிகம் யோசிக்கத் தேவையின்றி "சும்மா இருப்பதுதான் என் வாழ்வின் லட்சியம்" என்று உடனே கூறினேன். அதை அவர் பெரியதொரு நகைச்சுவையாக ரசித்தார். பின் வெகு நேரம் எனக்கு உலக வாழ்வைப் பற்றியும், பணம் எவ்வாறு வாழ்வில் முக்கியம் என்றும், வெற்றிதான் லட்சியமாக இருக்க வேண்டும் என்றும் போதித்தார். 22 வயதிலேயே தோரோவைப் படித்துக் கெட்டு விட்ட எனக்கு அந்தப் போதனை அதிகம் தாக்கம் ஏற்படுத்தவில்லை.

ஆனால் பின்னர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட பின் பணம் என்பது பல விதங்களில் அவசியமான ஒன்று என்று உணர்ந்து, பணத்தைத் துறந்து இல்லறம் நடத்துவது மிகக் கடினம் என்று உணர்ந்து, என் நேரத்தையும், சுதந்திரத்தையும், வாழ்வின் பெரும்பகுதியையும் அடமானம் வைத்துப் பொருள் ஈட்டினேன். ஓரளவு இல்வாழ்க்கையின் கடமைகளைக், கடன்களைத் தீர்க்க இயன்ற‌தால் என் அடமானத்தின் பெரும் பகுதி மீட்கப் பட்டுவிட்டது. ஓய்ந்து வீழும் முன்னரே ஓய்வு நேரம் அதிகமாய் உள்ள வாழ்முறையும் கிட்டியுள்ளது.

என்னுடன் வேலை செய்த பலரும் என் தற்போதைய வாழ்முறையைப் பார்த்துப் பொறாமைப் படுகின்றனர். ஆனால் என்னை விட அவர்கள் அனைவரும் பணம் அதிகம் உள்ளவர்கள்; நானோ பணம் குறைவாயினும் பெரிய செல்வந்தன்! யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத சுதந்திரமும், மன அழுத்தம் அதிகமில்லா சுய தொழிலும், கடனில்லாத வீடும், நிறைய ஓய்வு நேரமும், குழந்தைகளுடனும், மனைவியுடனும் செலவழிக்க நேரமும், (பெருமளவு) நஞ்சில்லா உணவும் உள்ளவன் செல்வந்தனா அல்லது வங்கி நிறையப் பணமும், விலை உயர்ந்த காரும், சென்னையில் கோடி ரூபாய் பெருமானமுள்ள புறாக்கூண்டு போன்ற வீடும், நச்சுக் காற்றும், நீரும், நஞ்சுள்ள பாக்கெட் உணவும், கடிகாரத்தின் இரு முட்களுக்குள் சிக்கித் திணரும் வாழ்முறையும் உள்ளவன் செல்வந்தனா?

மிகத் தெளிவாய் விடை எடுபடும் இந்தக் கேள்விக்கு யாரும் "நகர வாழ்க்கையே சிறந்தது" என்று சொல்ல முடியாது. ஆனாலும் நாம் அனைவரும் அதை நோக்கியே செல்கிறோம். கிராம மிராசுதாராய் இருந்தவர்களின் அடுத்த தலைமுறை சென்னை, மும்பை என்று தொழில்நோக்கிச் சென்று விட்டது. அதன் பின் வரும் அவருடைய சந்ததியினர் அமெரிக்கா, ஐரோப்பா என்று தொழில்நோக்கிச் சென்று விடுகின்றனர். வளர்ச்சி என்று நாம் கூறுவதும் இதைத்தான். முன்னேற்றம் என்று நாம் கருதுவதும் இதைத்தான். கிராமங்கள் முதியோர் இல்லங்கள் ஆகி விட்டன என்று வருந்தும் சிந்தனையாளர்கள், இனி நக‌ரங்களும் முதியோர் இல்லங்கள் ஆகிவிடும் ஆபத்து இருப்பதை மறுக்க இயலாது. இச் சிந்தனையின் அடித்தளத்தில் உள்ள மனவியல் காரணங்களை நாம் கூர்ந்து அறிந்து கொள்வது தற்சார்பு வாழ்வியலுக்கு மிக இன்றியமையாதது. உற்றுப் பார்த்தால் நாம் வாழ்வாதாரங்களைத் தேடிச் செல்லவில்லை என்பது புலனாகும். கிராமத்திலோ, சிற்றூர்களிலோ பள்ளி ஆசிரியராகவோ, மளிகைக் கடைக்கார‌ர் ஆகவோ தொழில் புரிபவர்கள் கூட மிக நல்ல வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். சிற்றூர்களில் உள்ள சிறு தொழில் அதிபர்கள் பலருக்கு வேலையும் கொடுக்கிறார்கள். தங்கள் உடனடி சமூகத்தில் நல்ல மரியாதையுடன் இருக்கிறார்கள்.

பின் நாம் எதைத் தேடி ஓடுகிறோம்? என் நண்பனின் தந்தை சொன்னதுபோல் வெற்றியைத் தேடி ஓடுகிறோம். ஆனால் எது வெற்றி என்பது யாருக்கும் தெரியவில்லை. புகழ் அடைந்தால் வெற்றியாகுமா? பணம் இருந்தால் வெற்றியாகுமா? அல்லது அலெக்சாண்டர், ராஜராஜன் போன்று அகிலத்தை ஆளும் தீராத ஆளுமைப் பசி வெற்றியாகுமா? ஒரு கடுமையான இலக்கை நோக்கிப் பயணிப்பதும், அதற்குப் பாடுபடுவதும், அதற்கான முயற்சியும், அதில் வரும் வெற்றி, தோல்விகளும் நம் மன வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் மிக நன்று. எதிர்ப்பே இல்லாத வாழ்வில் துயரங்கள் இல்லையெனினும், வளர்ச்சியும் குறைந்து விடும். ஆனால் இலக்கில்தான் நமக்குத் தெளிவு இல்லாதிருக்கிறது. "ஆராயப்படாத வாழ்வு வாழத் தகுதியற்றது" (the unexamined life is not worth living) என்று கிரேக்க ஞானி சாக்ரடீஸ் கூறியுள்ளார். ஆராய்ந்தால் நம் எல்லோருடைய வாழ்வும் full of sound and fury signifying nothing என்று ஷேக்ஸ்பியர் சொன்னது போல் வெறும் புகை மண்டலமாய் ஒன்றும் சரக்கின்றிப் பிசுபிசுத்து விடும். 'பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்றார் பட்டினத்தார்.

ஒரு தெளிந்த இலக்கை நோக்கிப் பயணிப்பது வாழ்வைச் செறிவுள்ளதாக்கும். ஒரு தெளிந்த இலக்காகவும், பெருமளவு அர்த்தமுள்ள வாழ்வைத் தருவதாகவும் தற்சார்பு வாழ்வியல் இருக்கிறது. எனவே எதுவென்று தெரியாத‌ வெற்றியைத் தேடுவதை விட, அன்பும் அறனும் நிறைந்த இல்வாழ்க்கையை இலக்காகக் கொள்வது நல்லது. புத்தர் அடிக்கடி நடுப்பாதை (middle path) என்று ஒன்றைக் கூறுவார். எங்கெல்லாம் குழப்பம் நேருகிறதோ அங்கு ஒரு நடுப்பாதையைக் கடைப் பிடிப்பது நன்று. அதாவது ஒரேயடியாகப் பணத்தாசை பிடித்த கருமியாகவும் இல்லாமல், பணத்தை முற்றும் துறந்த முனிவனாகவும் இல்லாமல், எனக்கிது தேவை, இது போதும் என்ற தெளிவுடன் இல்லறம் நடத்துவது ஒரு நல்ல நடுப்பாதை.

'போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து' என்ற பழமொழியின் பொருள் இதுதான். பொன்செய்ய ரசவாத வித்தையைத் தேடிப் பலரும் நெஞ்சு புண் ஆகி அலைகையில், உண்மையில் பொன் செய்யும் ரசவாதம் என்பது போதும் என்னும் மனப் பக்குவம்தான். அன்பும், அறனும் வேண்டுமாயின் பேராசை கூடாது. திருப்தி என்று சொல்லப்படும் மன‌நிறைவு தேவை. உண்மையான செல்வந்தன் தன் தேவைக்கு மேல் பணம் இருப்பவன் தான். தேவைகள் குறைந்து போதும் என்று வரையறுத்தவனிடம் சேரும் பணம், வள்ளுவர் சொன்னது போல்

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு

என்று எல்லோருக்கும் பயன்படும். (இங்கு போதும் என்ற சிந்தனையைப் பேரறிவு என்று வள்ளுவர் குறிப்பிடுவதைக் கவனிக்கவும்)

ஆனால் எப்படிப் போதும் என்று சொல்வது? எளிமையான தேவைகளுடன் நிறுத்திக் கொண்டால் அவற்றை எளிமையான ஒரு தொழிலால் பூர்த்தி செய்து விடலாம். "யாதானும் தொழில் புரிவோம், யாவும் அவள் தொழிலாம்" என்று நம் மீசைக்கவி சொன்னது போல் குடும்ப நிர்வாகத்துக்குத் தேவையான நிதியை எளிதாய் நிறைவு செய்யலாம். நிறைவு என்பது தற்சார்புக்கு இன்றியமையாதது. ஆழ்ந்த நிம்மதியும், உடல் - மன ஆரோக்கியமும், அன்பும், எல்லாம் இந்த நிறைவால் கிட்டிவிடும். நிறைவு இல்லையேல் என்ன கிடைத்தாலும் பற்றாக்குறைதான். நிறைவு என்பது ஒரு மனநிலைதான் - அது புறப்பொருட்களில் இல்லவே இல்லை. பிறர் நம்மை ஏளனம் செய்வார்களே, கௌரவம் குறைந்து விடுமே என்றெல்லாம் இல்லாத பூதங்களுக்கு அஞ்சினோமானால் நாம் தற்சார்பு இழந்து, பிறர் கருத்தைச் சார்ந்து, காற்றில் பட்ட‌ இலவ‌ம் பஞ்சு போல் அங்கும் இங்கும் அலைய வேண்டி வரும்.

எளிதாய்ச் சொல்ல முடிந்தாலும், இது நடைமுறையில் மிக மிகக் கடினமானது. மற்றவர்களின் நகைப்புக்கு இடமாவதை யாரும் துணிவதில்லை. நம்மை விட வலிதானவர்களைப் பார்த்துச் சற்றுப் பொறாமைப் படாதவர்களும் மிகக் குறைவே. எனவேதான் முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு நாம் மந்தையுடன் சென்று, முண்டியடித்து மந்தையில் முன்வருவதை எப்போதும் விழைகிறோம். ஃபாஷன், ட்ரெண்ட் என்ற பெயரில் கூட்டமாய்ப் போவதை நியாயப் படுத்துகிறோம். தற்சார்பான வாழ்வியல் என்பது உலகியலுக்குப் பல சமயங்களில் எதிரானது. எனவே அப்பாதையில் செல்ல ஒரு துணிச்சல் வேண்டும். எனினும் எளிதானவற்றை மட்டும் செய்து கொண்டிருந்தோமானால் நாம் என்றும் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டியதுதான்.

இதையெல்லாம் சேர்த்துப் பார்க்கையில், தற்சார்பு வாழ்வியல் என்பது மிகுந்த அர்த்தமுள்ள ஒரு வாழ்முறை. இதற்குத் தேவை நிறைவு, பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலையின்மை, ஓரளவு துணிச்சல் ஆகியவை. ஆனால் இதனால் கிடைக்கும் விடுதலையும், மனத் தெளிவும் எல்லாக் கடின‌ங்களையும் தூசி ஆக்கி விடும். இறுதியாக திருப்தியைப் பற்றிய ஒரு கவிதையுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

தன்னிறைவு

===========

சிறிய நாடு, சிலவே மக்கள்

போர்வாள் பலவாம், பயன்பாடு இலவாம்

இறப்பைப் பெரிதாய் இருப்போர் மதித்துப்

பிறந்த இடத்தின் அருகில் இருப்போம்

படகும், ரதமும் பலவாய் இருந்தும்

பயணம் கிளம்பத் தேவை அரிதாம்

வேலும் வாளும் வேண்டிய இருந்தும்

வெளியில் எடுக்கத் தேவை இல்லை

இனிய உணவும், எளிய உடையும்

இருக்கும் இடத்திற் பெருமையும் நிறைவும்

பழகிய வாழ்வு பழகிய முறையுடன்

நிதப்படிப் பணியில் நிம்மதி காண்போம்

அண்டை நாடு கூப்பிடு தொலைவில்

அவரின் சேவல் நம்மை எழுப்பினும்

நம்முடை நாய்குரை ஒலிய‌வர் கேட்கினும்

ஒருவரை ஒருவர் காணா திருந்து

விருந்து கலந்திட வேலை இன்றி

நிறைவுடன் வாழ்ந்து நிறைவுடன் சாவோம்!

(2600 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் "லாவொட்ஸே" என்பவரால் எழுதப்பட்ட "தாவோ தே ஜிங்" என்ற நூலின் 80வது பாடலின் தமிழ்வடிவம். )

5 தோரோ என்னும் துறவி

சென்ற கட்டுரையில் தோரோவைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தோம். 1817ல் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்த தோரோ (Henri David Thoreau - 1817-1862), தற்சார்பு வாழ்வியலைத் தேடித் தன் 28ஆம் வயதில் (1845) வால்டன் என்னும் குளக்கரையில் தானே தன் கையால் கட்டிய ஒரு குடிசை வீட்டில் 2 வருடம் 2 மாதம் தங்கி, எந்தக் கொள்முதலோ, பண்டமாற்றோ இன்றித் தன் உழைப்பால் மட்டுமே தன் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள இயலுமா என்று ஆராய்ந்தார். இவ்வனுபவங்களைத் தொகுத்து வால்டன் (Walden or Life in the woods) என்னும் புத்தகமாக வெளியிட்டார். இன்றளவும் தற்சார்பு வாழ்வியலைப் பற்றிய அடிப்படை நூலாக அது கருதப்படுகிறது.

மாற்று வாழ்முறை (alternate living) என்றும் தற்சார்பு வாழ்முறை (self-reliant living) என்றும் அழைக்கப்படும் ஒரு தனிப்பாதையில் பயணிக்க அனைவருக்கும் துணிவு இருப்பதில்லை. ஆனால் யாருடைய உதவியும், உந்துதலும் இன்றித் தானே தனக்கொரு விளக்காய், வழியாய், ஆசானாய், மாணாக்கனாய்ப் பயணித்து வென்ற மிகச் சில மாமனிதர்களில் தோரோ தலையாயவர். தன் சம காலத்தவர்களால் வெறும்பயல் (idler) என்று ஒதுக்கப்பட்ட தோரோ, தன் வாழ்நாளில் எதுவும் பெரிதாய்ச் சாதிக்கவில்லை.1817ல் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் பிறந்த தோரோ 45 வருடங்களே வாழ்ந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. வாழ்நாளில் மிகச் சொற்ப நாட்களே வேலை செய்தார். ஆனால் அவரின் தேடலும், அவர் கண்ட விடைகளும் மிக நுட்பமானவை; வாழ்வில் அர்த்தம் தேடுபவர்களுக்கு உணவாய்,மூச்சுக் காற்றாய் இருப்பவை.

தன் தந்தையின் பென்சில் தயரிக்கும் சிறு தொழிலில் அவர் குறைந்த செலவில் உடையாத முனைகளுடைய‌ பென்சில் தயாரிக்கும் உத்தி ஒன்றைக் கண்டு பிடித்தார். நண்பர்கள் அவரிடம் ' இதைப் பதிவு (patent) செய்துகொள்; உனக்கு வாழ்நாள் முழுவதும் பணம் கிடைக்கும்' என்ற பொழுது, 'ஒரு முறை செய்ததை எதற்கு மீண்டும்,மீண்டும் செய்ய வேண்டும்' அன்று அலட்சியமாகத் தூக்கி எறிந்து விட்டார். அன்றே உலகின் மிகப் பரபலமான ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற தோரோ, எல்லோரைப் போலவும் வேலைக்குச் செல்லாமல், 'வாழ்வில் பிழைப்பையும் செய்து, வாழவும் நேரம் காண்பது எப்படி' என்ற தன் கேள்விக்குத் தன்னையே பரிசோதனை எலி ஆக்கிக்கொண்டார்! ' மாந்தரில் பெரும் பகுதி சத்தமின்றி ஒரு விரக்தியில் வாழ்கிறார்கள்' என்ற அவரின் வரிகள் மிகப் பிரசித்தம்.

எப்பொருளையும் மெய்ப்பொருள் காணும் துணிவும் , தெளிவும் அவருக்கு இருந்தன. ' ஒரு பொருளின் விலை என்பது நான் அதற்குக் கொடுக்கும் பணம் அல்ல; அந்தப் பணத்தை ஈட்ட நான் செலவிடும் என் வாழ்நாளின் நேரத்தை வைத்துத்தான் அதை மதிப்பிடுவேன்' என்றார். உதாரணமாக ஒருவன் மாடி வீடு கட்டிக் கடன் அடைக்க வேண்டுமானால் 10-15 வருடம் தொடர்ந்து வேலைக்குப் போக வேண்டும். ஆனால் ஒரு வாரத்தில் குடிசை ஒன்றைக் கட்டிக் கொள்ள ஒரு மாத வருமானமே போதுமானது. தோரோவைப் பொறுத்தவரை, குடிசையில் இருப்பவன் கடன் ஏதும் இல்லாமல் ஒரே மாதத்தில் வீடு கட்டி விடுவதால், மாடி வீட்டுக்காரனை விட அவனே செல்வந்தன்! ''எனக்கு எவ்வளவு விரல்கள் இருக்கிறதொ அதை விடவும் எனக்குத் தொழில்கள் இருக்கின்றன' என்று எழுதிய தோரோ, ஆசிரியர், பொறியியலர், எழுத்தாளர், பேச்சாளர், உழவர், நில அளவையாளர் (surveyor) என்று பல தொழில்களை அவ்வப்போது செய்தார். அடிப்படைக் கூலித் தொழிலாளராகவும் அடிக்கடி பணி செய்வார். 'தினக்கூலித் தொழில்தான் நான் செய்த வேலைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது; கூலிக்காரன் அன்றைய பணி முடிந்ததும் தனக்கு இச்சை கொண்ட தேடல்களில் ஈடுபடலாம். தேவைப் படும் பொழுது மட்டும் வேலை செய்யலாம். ஆனால் அவன் முதலாளியோ வருடத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கணக்கிட்டுக் கொண்டு, ஓய்வின்றிக் கவலையில் உழல்கிறான்' என்று வாணிபத்தை நையாடுவார். வாரம் ஒரு நாள் ஓய்வு என்று உலகமே இயங்குகையில் வாரம் ஒரு நாள் வேலை செய்தால் போதும் என்று வருடத்தில் 30-40 நாட்கள் மட்டுமே வேலை செய்து தன் தேவைகள் அனைத்தையும் தானே நிறைவு செய்தவர்.

தன் உழைப்பாலேயே தன் உணவை விளைத்துக் கொண்ட தோரோ, உணவுத் தற்சார்பைப் பற்றி " ஒரு மனிதன் தான் விளைப்பதை மட்டும் உண்டு, உண்பதை மட்டும் விளைத்தால், அவனுக்குத் தேவையானதை அவ்வப்போது, நினைத்த நேரத்தில், இடது கையால் ஒரு கைக்கலப்பையால் விளைக்கலாம். இதற்குத் தேவை ஒரு வருடத்தில் 30 நாட்கள் உழைப்பு மட்டுமே" என்றார். மேலும், "இந்த உலகில் உயிர்வாழ்வது என்பது ஒரு போராட்டமல்ல; அது ஒரு பொழுது போக்கே!" என்றார்.

'ஒரு மனிதனால் எல்லாவற்றையும் எவ்வளவுக்கெவ்வ‌ளவு அலட்சியப் படுத்த முடிகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவன் செல்வந்தன்' என்று செல்வம் என்பதற்கு ஒரு புதுப் பரிமாணம் கொடுத்தார். சந்தையின் மீது நமக்குள்ள ஆதிக்கத்தைத்தான் நாம் சாதாரணமாக செல்வம் என்கிறோம், ஆனால் சந்தையே இல்லாமல் வாழ இயல்பவன்தான் உண்மையில் செல்வந்தன் என்று தோரோ தெளிவாய் உணார்ந்தார் - வாழ்ந்தும் காட்டினார். எளிமைசெய், எளிமைசெய், எளிமைசெய் என்பது அவரின் தாரக மந்திரம்.

இயற்கையின்மேல் மாளாத காதல் கொண்ட தோரோ, வளர்ச்சி, மேம்படுத்துதல் என்று இன்று கூறப்படும் நவீனங்களின் தீமையை 180 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தார். அமெரிக்காவில் ரயில் பாதை அமைத்துப் போக்குவரத்துப் புரட்சிகள் செய்ய ஆரம்பித்த போது, அப்பாதை அமைப்பதற்காக சீனாவிலிருந்தும் அயர்லாந்திலிருந்தும் கூலித் தொழிலாளார்கள் வரவழைக்கப் பட்டனர். இதனைக் கடுமையாக எதிர்த்த தோரோ, ' நான் தண்டவாளத்தைக் காணவில்லை; அதன் ஒவ்வொரு குறுக்குக் கட்டையிலும் ஒரு சீனத் தொழிலாளியின் உடலைத் தான் காண்கிறேன்' என்று எழுதினார். தன் மாநிலத்தில் காடுகள் வெட்டப்பட்டு நகரங்கள் உருவாக்கப் படும்போது, மன வேதனையுடன் 'ஒருவன் காடுகளின் மேலுள்ள காதலினால் அவற்றில் அரை நாள் நடப்பானேயாகில் அவனை வெட்டிப் பயல் என்று பட்டமிடுகிறது இவ்வுலகம். ஆனால் அதிலுள்ள மரங்களை வெட்டிச் சாய்த்துப் புவியை அதன் காலத்திற்கு முன்னரே சொட்டையாக்கும் பொருட்டு ஒருவன் நாள் முழுவதும் நடந்தால் அவனைத் தொழிலதிபர் என்று உலகம் கொண்டாடுகிறது. மானுடத்திற்குத் தன் காடுகளின் மேல் அதனை அழிக்கும் ஆர்வம் ஒன்றுதான் இருக்க வேண்டுமா?' என்று எழுதினார்.

1840-50 வருடங்களில், அமெரிக்காவில், தென் மாநிலங்களில் அடிமைகளாய் இருந்த கறுப்பர்கள் தப்பி ஓடி வட மாநிலங்களில் தஞ்சம் புகுந்தனர். 1850ல் அமெரிக்க அரசு அடிமை அகதிகள் சட்டம் என்ற ஒரு சட்டத்தின் மூலம், இவ்வகதிகளுக்கு உதவுவதோ, புகலிடம் அளிப்பதோ கடும் குற்றம் என்ற சட்டம் கொண்டு வந்தது. அரசியலைப் பற்றி ஆழ்ந்த புரிதலும், மனித உரிமை மீது பற்றும் உள்ள தோரோ இச்சட்டம் வந்தவுடன் தனிமனித வரியான poll tax என்பதைக் கட்ட மறுத்து விட்டார். இதனால் சில நாட்கள் சிறையிலும் அடைக்கப்பட்டார். அவரைப் பார்க்க வந்த நண்பர் எமர்சன், 'ஹென்ரி அங்கே உள்ளே என்ன செய்கிறாய்' என்றதற்குத் தோரோ 'நீ அங்கே வெளியே என்ன செய்து கொண்டிருக்கிறாய்' என்று பதிலளித்தார். 'ஒரு அரசு அநியாய‌த்திற்கு துணை போக ஆரம்பித்து விட்டால் அப்போது நேர்மையான மனிதர்களின் இடம் சிறைதான்' என்றும் 'எவ்வரசு மிகக் குறைவாக நிர்வாகம் செய்கிறதோ அவ்வரசே நல்லரசு' என்றும் அப்போது அவர் எழுதிய "பண்பட்ட ஒத்துழையாமை" (civil disobedience) என்ற கட்டுரை மிகுந்த ஆழ்நோக்குடன், அன்றை விட‌ இன்று அதிகப் பொருத்தமாய் இருக்கிறது. பின்னாளில் வந்த காந்தி, டோல்ஸ்டாய், மார்டின் லூதர் கிங் போன்றோர் இக் கட்டுரையால் பெரிதும் தாக்கம் ஏற்படுத்தப் பட்டார்கள். காந்தி, தான் சத்தியாக்கிரகக் கொள்கையை உருவாக்க இக்கட்டுரை மிக முக்கிய காரணி என்று கூறியுள்ளார்.

வாழ்வில் சோகம், ஒப்பாரி, புலம்பல் என்பதை எல்லாம் முற்றும் நையாடிய தோரோ " நான் துக்கத்திற்குப் பிலாக்கணம் பாட விழையவில்லை; பெரும் ஆரவாரத்தோடு வைகறையை வரவேற்கும் ஒரு சேவற்கோழியைப் போல் என் வெற்றிகளைப் பறை சாற்ற விரும்புகிறேன் - என் சக மனிதர்களை எழுப்புவதற்காகவேனும்!" என்று தான் வால்டன் எழுதிய காரணத்தைக் கூறுகிறார். 'உலகின் எந்த மூலையில் ஒரு நன்மையோ, ஆரோக்கியமோ நடந்தாலும் அது எனக்கு நன்மையே' என்றும், 'உன் வாழ்க்கை எவ்வளவு கேவலமாய் இருந்தாலும் அதை வெறுத்து ஒதுக்காதே, நேரே நின்று எதிர்கொள்', ' மனிதர்கள் வெல்வதற்குப் பிற‌ந்தவர்கள்' , ' நீ காற்றில் கோட்டை கட்டி விட்டால் அதற்காக வருந்தாதே; அவை அங்கேதான் இருக்க வேண்டும். இப்போது உழைத்து அதற்குத் தரையிலிருந்து அடித்தளம் போடு' , ' கடுமையான தூக்கத்திலும் விடியலின் நம்பிக்கை நம்மைக் கைவிடுவதில்லை', 'உன் வாழ்வை நீ எளிமையாக்க ஆக்க பிரபஞ்சத்தின் விதிகள் அனைத்தும் உனக்கு எளிதாகிவிடும்' என்றும் பலவாறாகத் தன் சக மனிதர்கள் படும் பாட்டைத் துடைக்க முயன்றிருக்கிறார்.

வாழ்வில் கஷ்டம் என்பதே பொருளற்றது என்ற திடமான சித்தாந்தம் கொண்ட தோரோ வேறு ஒரு இடத்தில்," என் நண்பா, நீ சகதியில் சிக்கிக்கொண்டு என்னைக் காதலித்துக் கரையேற்று என்று கதறுகிறாய். நான் கூறுகிறேன் நீ வெளியேறி விடு எல்லோரும் உன்னைக் காதலிப்பார்கள்" என்கிறார். விடுதலை என்பது அனைவருக்கும் கைக்கெட்டிய ஒன்று, அனைவராலும் இயலக் கூடிய ஒன்று ; அதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை; நம்மைத் தளைப்படுத்தும் அனைத்தும் நாமே உருவாக்கிக் கொண்டவை; அவற்றை விடத் துணிவும், நேர்மையும்தான் தேவை என்பது தோரோவின் அசையாத கோட்பாடு.

நம் பாரத நாட்டில், எல்லா மதங்களிலும், பொருள், பதவி ஆசைகளைத் துறந்து, ஒரு ஆன்ம தேடலில் ஈடுபடுபவர்களைத் துறவி என்கிறோம். மனிதன் தெய்வமாகலாம் என்று அவர்களைத் தலையில் தூக்கிக் கொண்டாடுகிறோம். காலில் விழுகிறோம். குரு என்கிறோம். அவர்கள் காலடிகளைப் படம் எடுத்துப் பூசை அறையிலும், கழுத்திலும் எல்லாம் மாட்டிக் கொள்கிறோம். இதில் ஏதும் நான் குறை காண முயலவில்லை. 'அவரவர் தமதம‌து அறிவறி வகைவகை' என்று 1000 ஆண்டுகளுக்கு முன்னால் நம்மாழ்வார் திருவாய்மொழியில் சொன்னதுபோல் இது அவரவர் இச்சை. ஆனால், எந்த குரு-சீட மரபிலும் சாராமல், எந்த மதத்தையும் கைக்கொள்ளாமல், புகழையும், பணத்தையும் அறவே புறந்தள்ளி, தன்னறிவொன்றே தெய்வம் என்று உண்மைப் பகுத்தறிவுடன், தற்சார்பான, எளிய வாழ்முறை ஞானத்திற்கு ஒரு வழியென்று தானே பயணித்த ஒரு மா மனிதனை, ஒரு உண்மைத் துறவியை இனங்கண்டு அவரின் எழுத்துக்களைப் படிப்பதே நாம் அவருக்குச் செய்யும் கைம்மாறு.

6 வாங்கக் கடன் நிறைக்கும் வள்ளல் முதலீட்டார்!

நம் பாரத நாட்டை ஒரு வல்லரசாக்கவும் உலக வர்த்தகத்தின் மையமாக மிளிரச் செய்வதற்காகவும், இங்கு உள்ள ஏழைகள் எல்லாம் உடனே கோடீசுவரர்களாகவும் வேண்டி நம் பிரதமரும், நிதியமைச்சரும் பிற மேதைகளும் அந்நிய முதலீட்டிற்கு சிவப்புக் கம்பள‌ம் விரித்து வருகிறார்கள். ஏதோ பன்னாட்டுக் கம்பனிகள் முதலீடு செய்யாவிடில் நாம் எல்லாம் பட்டினிச் சாவில் பட்டு அழிந்து விடுவோம் என்பது போலச் சித்தரிக்கிறார்கள். வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைக்கோல் போலக் கெட்டு விடும் என்று அன்றே வள்ளுவர் எச்சரித்துள்ளார். சுதந்திரம் அடைந்த உடனேயே நம் தேசம் போகும் திக்கு சரியல்ல என்று அறிஞர் குமரப்பா கடுமையாய் எச்சரித்தும் அது யார் காதிலும் விழவில்லை. இன்று நம் நாட்டின் கடன் சுமை 1950ல் இருந்தது போல் 1000 மடங்கு அதிகரித்தும் நாம் இன்னும் பிடிவாதமாக இந்த உலகமயமாக்கல் நம்மைக் காப்பற்றி விடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அறிவாளி பிறர் பிழைகளைப் பார்த்துக் கற்றுக் கொள்வான். சராசரி மனிதன் தான் செய்த பிழைகளில் பாடம் கற்பான் - முழு மூடனோ, எவ்வளவு பட்டாலும், தான் செய்தது சரியே, அது தோற்றதற்கான காரணங்கள் வேறு என்று யாரைக் குறை சொல்வது என்று சுற்றுமுற்றும் பார்ப்பான். இன்று நம் அரசும், திட்டமிடுவோரும் இதில் யாரைப் போல் இருக்கிறார்கள் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனினும் அறிவாளிகளான நாம், பிறர் செய்த பிழைகளில் பாடம் காண முயல்வோம்.

இது நடந்தது கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில். சுமார் 4.5 கோடி மக்கள் கொண்ட ஒரு சிறு நாடான கென்யாவில் விவசாயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கால் பங்கு வகிக்கிறது. (இந்தியாவில் இது 17%). நாட்டின் இரண்டாவது பெரிய தொழில் விவசாயம். நம் நாட்டைப் போலவே சிறு,குறு விவசாயிகள் நிறைந்த கென்யாவில், பால் உற்பத்தியும், பால் பண்ணையும் முக்கிய சிறு தொழில்களில் ஒன்று. 95 சத‌விகிதத்திற்கும் மேற்பட்ட பால் சிறு விவசாயிகளால் உற்பத்தி செய்யப் படுகிறது. மொத்த வேளாண் உற்பத்தியில் பால் உற்பத்தி மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது. 2003ல் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் குழுமம் ( Food and Agricultural Organisation - FAO) ஒரு நீண்ட ஆய்வறிக்கையில், கென்யாவின் பால்பண்ணைகளைப் பற்றி ஆராய்ந்து, கென்யா பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது என்று கூறியுள்ளது. சிறு பால்பண்ணைகள் ஏறத்தாழ 6.25 லட்சம் குடும்பங்களுக்கு பால் உற்பத்தி வேலை வாய்ப்பு அளித்தது. இது தவிர பலவாயிரம் மக்கள் பால் விநியோகத்திலும் வேலை வாய்ப்புப் பெற்றனர்.

ஆனால் ஒரு விஷயம் நன்றாய் நிம்மதியாய் இருந்தால் அதில் உலக வர்த்தகம் செய்வது எப்படி, சும்மா விடுவோமா நாம்? 2007ல் வரிந்து கட்டிக் கொண்டு வந்தது நெஸ்லே (Nestle) நிறுவனம் - ஆம் , உலகின் பலப்பல நாடுகளில் குழந்தை உணவு விற்கும் அதே நெஸ்லே தான். அந்நிய முதலீடு செய்கிறோம் , பால் பண்ணைத் தொழிலை நவீன மயமாக்குகிறோம், உங்கள் நாட்டில் உள்ள சிறு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறோம் என்று தேனைத் தடவிப் பேசி விட்டு அரசின் அனுமதியுடன் நெஸ்லேவும் , அதன் பின் லேண்ட் ஆஃஃப் லேக்ஸ் (Land O' Lakes) என்ற நிறுவனமும் கென்யாவின் வளமான ரிஃப்ட் பள்ளத்தாக்கில் நவீன ரக மாடுகளைக் கொண்டு வந்து பால்பண்ணைகள் ஆரம்பித்தனர்.

அமெரிக்க அரசின் வெளிநாட்டு வேளாண் சேவைப் பிரிவைச் சேர்ந்த மிக்கேல் யோஸ்ட் என்பவர், "ஏழை நாடுகள் உலக வர்த்தகத்தில் பங்கு கொள்ளவும்", " அவற்றின் வேளாண் பொருளாதாரங்களை 21ம் நூற்றாண்டுக்கு இட்டுச் செல்லவும்" கேட்ஸ் அறக்கட்டளை, நெஸ்லே, அமரிக்க அரசு எல்லாம் இணைந்து இந்த முயற்சியில் முனைவதாக நீட்டி முழக்கினார். சிறுமீன்களை விழுங்கும் சுறாமீன் போல, இப்பெரும் நிறுவனங்கள் உழவர்களிடம் நேரடிக் கொள்முதல் செய்ய ஆரம்பித்தன. 2010ல் இந்த நவீனத் தொழில்நுட்பங்களால் கென்யாவின் பால் உற்பத்தி வேகமாக அதிகரித்து, தேவைக்கும் மிக அதிகமானதால், பாலின் கொள்முதல் விலை குறைந்தது. 2010 மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் பால் உற்பத்தியாளர்கள், தங்களுக்குக் கிடைக்கும் விலை கட்டுப்படி ஆகாத‌தால், பாலை வீணே வயலில் கொட்டினர்!

இன்றைய நிலை என்ன? இதையும் மீறிப் பால் விவசாயிகள் தங்கள் உற்பத்தியை, நம் நாட்டில் உள்ளது போலவே, பால்காரர்களிடம் விற்று ஓரளவு நிம்மதியாக இருந்தனர். ஒரு லிட்டர் பாலுக்குப் பால்காரர்கள் தரும் கொள்முதல் விலை 35 ரூபாய் (50 கென்ய சில்லிங்) - நிறுவனங்கள் தருவதோ 18 முதல் 28 ரூபாய் (28-40 கென்ய சில்லிங்). பால்காரர்கள் , உழவர்களிடம் 32-35 ரூபாய்க்கு வாங்கி காய்ச்சாத உடன்கறந்த பாலாக‌ ,42-43 ரூபாய்க்கு நுகர்வோரிடம் விற்கிறார்கள். பெரும் நிறுவனங்களோ பாலைக் காய்ச்சி அதில் உள்ள பாதிக் கொழுப்பை எடுத்து சீஸ், வெண்ணை போன்ற பொருட்களைத் தயாரித்தபின், குறைந்த கொழுப்புள்ள பாலை 78 ரூபாய்க்கு விற்கிறார்கள்!

இதனால் நடுத்தர மக்களும், பால்காரரிடம் பால் வாங்குவதே நல்லது என்று வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது பன்னாட்டுக் கம்பனிகளுக்கு ஏற்க முடியுமா? என்ன செய்தார்கள் நயவஞ்சகர்கள்? வழக்கம்போல் அர‌சின் கையை முறுக்கி, சாம, தான‌, பேத, தண்ட உத்திகளால், அமரிக்காவில் உள்ளது போல் ஒரு சட்டம் இயற்றி உள்ளனர்: "காய்ச்சாத, பதப்படுத்தப் படாத பாலை விற்பது சட்ட் விரோதம்!". இதற்கு இவர்கள் கூறும் காரணம் காய்ச்சாத பாலில் கிருமிகள் கூடி பொதுமக்களின் உடல் நலக் குறைவுக்கும் நோய் பரவுதலுக்கும் வழி வகுக்கும் என்று. ஆனால் உண்மையான‌ காரணம், 43 ரூபாய்க்குப் பொது மக்களுக்குக் கிடைக்கும் நல்ல பாலை முடக்கி, 78 ரூபாய்க்கு சத்து குறைந்த பாலை விற்று லாபம் பார்ப்பதுதான். உழவர்களுக்குக் கிடைக்கும் விலையும் 35 ரூபாய்க்குப் பதில் 28 ரூபாய். ஒரு லிட்டரில் முழுதாய் 50 ரூபாய் வருமானம்!

இது பரவலாக அமலில் வந்தால் கென்யாவில் என்ன நடக்கும்? அடிப்படை உணவான பாலின் நுகர்வோர் விலை ஏறும். உழவருக்குக் கிடைக்கும் கொள்முதல் விலையோ மிகவும் குறையும். சில ஆண்டுகளில் பால்காரர் வியாபாரமே இல்லாது போனபின், இப்பெரு நிறுவனங்கள் வைத்ததுதான் வாங்கும் விலையும், விற்கும் விலையும். இதில் உழவர் நலனும், நுகர்வோர் நலனும் பலி கடாவாகின்றன. இச்சட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பு இருக்கின்ற‌ போதும், இதற்கு அரசு சொல்லும் மற்றொரு காரணம் " நம் நாட்டில் இவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்; அவர்களின் முதலைப் பாதுகாக்க வேண்டும்" - என்னே பொருளாதார அறிவுடைமை!

முதலில் உழவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நாங்கள் முதலீடு செய்கிறோம் என்று தொடங்கிப் பின் எங்களுக்குக் கட்டுபடியாகவில்லை எனவே உழவர்களின் நேரடி மற்றும் சில்லறை விற்பனையைத் தடை செய்யுங்கள் என்று அரசை வற்புறுத்தும் இந்த முதலீட்டார்களால் பாமர மக்களுக்கு என்ன நன்மை கிடைக்க இயலும்? நாளை இதே நிலைமை நமக்கும் தானே? அரசாங்கங்களை விடவும் பெரும் வலுவுடைய பெரும் வாணிப நிறுவனங்கள், ஏழைகளுக்காகவா முதலீடு செய்கின்றன? தங்கள் லாபத்திற்கும், சுய நலத்திற்கும் அல்லவோ? அவை இவ்வளவு வளர்ந்திருக்கின்றன என்றாலே அவற்றின் பின்னணியில் என்னென்ன ஊழல்களும், அநீதிகளும் இருந்திருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்கலாம் அல்லவா?இதெல்லம் சிந்திக்கத் தெரியாதவர்களா நம்நாட்டு மேதைகள்?

பசுக்களைப் பாடும்போது "வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்காள்" என்று ஆண்டாள் அழகு தமிழில் மெச்சுவாள். ஆனால் இம்முதலாளித்துவ முதலைகளின் வள்ளன்மை நம் கடனை அல்லவா நிறைக்கின்றன!

7 புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா

இப்போது அரசியல் தொடங்கி அனைத்திலும் மேம்படுத்துதல், அந்நிய முதலீடு, பொருளாதார வளர்ச்சி, ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்று பற்பல பெயர்களில் தொழில் வளர்ச்சியைத் தேடுகிறோம். நாகரிக வாழ்விற்குத் தொழில் என்பது மிக இன்றியமையாதது; இதில் மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லை. நிறையத் தொழில் வளர்ந்தால் நிறையப் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும்; வறுமை ஒழியும். இதுவும் மிகச் சரியான ஒரு எதிர்பார்ப்பே. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக தாராளமயமாக்கல், உலக மயமாக்கல் என்ற பெயரில் நம் நாட்டுச் சந்தையை அந்நிய முதலீடுகளுக்குத் திறந்து விட்டுள்ளோம் ; ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ந்துள்ளது - ஆனால் வறுமை ஒழியவே இல்லையே. அதிகமாக அல்லவோ ஆகி விட்டது? எங்கோ இடிக்கிறதே? இதில் எங்கே கோட்டை விட்டோம்?

முதலில் ஜி.டி.பி (GDP) என்பதே ஒரு மிகத் தவறான குறியீடு. உதாரணமாக, சுனாமி, பூகம்பம் போன்ற பெரும் அழிவுகள் ஏற்பட்டுப் பாதிக்கப் பட்டவர்களுக்கு செய்யப் படும் மருத்துவச் செலவு ஜி.டி.பியில் சேர்க்கப் படுகிறது. ஒரு போர் நிகழ்ந்து நாம் பல்லயிரம் கோடி ரூபாய்க்கு ராணுவ தளவாடங்கள் வாங்கினால் அதுவும் ஜி.டி.பியில் சேர்க்கப் படுகிறது. நாட்டில் சாதாரண மக்கள் கடன் வாங்கினால் அதுவும் ஜி.டி.பி வளர்ச்சி. அரசியல்வாதிகள் மேடை ஏறிப் புளுகுவதற்கு ஹெலிகாப்டர்களில் பறந்தால் அதுவும் ஜி.டி.பி வளர்ச்சி. சாராய வியாபாரமும் ஜி.டி.பி வளர்ச்சி! இப்படி நல்ல செலவு, கெட்ட செலவு என்ற தெளிவு இன்றி எல்லாச் செலவும் (வேறு ஒரு தொழிலுக்கு வருமானம் என்பதால்) ஜி.டி.பி எனப்படும் ஒட்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சியாகிறது. இது இப்படியிருக்க வளர்ச்சி என்பது என்ன என்று நாம் பின்னர் ஆராய்வோம். தற்போதைக்கு ஜி.டி.பி என்னும் மாயக் கணக்குத்தான் வளர்ச்சி என்று கொள்வோம். அதன் நிலைமை எப்படி இருக்கிறது?

திட்டக் குழு தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி 1999-2000 முதல் 2013-14 ஆகிய 15 ஆண்டுகளில் ஜி.டி.பி ஆகப்பட்டது, இரண்டு ம‌டங்கு ஆகி உள்ளது (2.05). சராசரியாக வருடா வருடம் 5.25% வளர்ந்துள்ளது. இதில் ஏற்றுமதியானது 37.5 பில்லியன் அமெரிக்க டாலர்களில் (1999-00) இருந்து 323.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (2013-14) 8.5 மடங்கு உய‌ர்ந்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒரு வளர்ச்சி. பன்னாட்டுச் சந்தையில் இந்தியா ஒரு வலுவான சக்தியாக வளர்கிறது. ஆனால் இதன் எதிர்மறையான இறக்குமதியின் நிலை என்ன? 1999ல் 55.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இறக்குமதி, 2014ல் 472.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாகி அதுவும் 8.5 மடங்கு வளர்ந்துள்ள‌து! வாணிபப் பற்றாக்குறை (trade deficit) 17.8 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 148.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக விசுவரூபம் எடுக்கிறது. 101 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த கடன் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாகி விட்டது. இதனால் 45.9 ரூபாயாக இருந்த டாலர் 61.5 ரூபாய் ஆகி விட்டது. ஏற்றுமதி செய்வோருக்கு மட்டுமே சாதகமான சூழல் இது. கடன் இல்லாதவன் செல்வந்தன் என்னும் பழமொழியை நாம் மறந்து விடக் கூடாது. உற்பத்தி வளர்வதை விடக் கடன் அதி வேகமாக வளர்கிறது.

மன்மோகன் சிங் உள்ளடிக்கிய வளர்ச்சி (inclusive growth) என்று ஒரு சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார் (பத்தாண்டு கால ஆட்சியில் அதைச் செயல் படுத்தவே இல்லை என்பது வேறு விஷயம்). அனைவரும் சேர்ந்து வளர்வது, ஏழைகளையும் செல்வந்தர்கள் ஆக்குவது என்று நாம் புரிந்துகொள்ளலாம். இது ஒரு மிக உயர்ந்த நோக்கம். இதை நடைமுறைப்படுத்துமாறு நம் பொருளாதாரக் கொள்கை இருக்கவேண்டும்.ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் ஏழ்மையை நாம் வெல்லவில்லை என்பது இப்போது கிராமப் புறங்களுக்குச் சென்றால் தெளிவாய்த் தெரிந்து விடும். இன்னும் சொல்லப்போனால், தாராள மய‌மாக்கல் ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி விட்டது.எளியோரைப் பாதிக்கும் விலைவாசியின் நிலை என்ன? நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index) எனப்படும் CPI 1999ல் 100க்கும் குறைவாக இருந்தது; இப்போது 240ஐத் தாண்டி விட்டது (அதாவது அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் 1999ஐ விட 2014ல் 2.5 ம‌டங்கு வேகமாக உயர்கிறது!). 1999ல் வருடம் 3.6% ஏறிய அத்தியாவசியப் பொருட்களின் விலை இப்போது வருடம் 10%-11% உயர்கிறது. இதற்கு நேரடிக் காரணம் அரசும், திட்டமிடுவோரும் வரையும் பொருளாதாரக் கொள்கைதான். இயந்திர மயமாக்கலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி ஒரு முக்கியக் காரணம்.

இயந்திர மய‌மாக்கலின் அடிப்படைத் தத்துவம், உற்பத்தியை பெரும் இயந்திரங்களைக் கொண்டு செய்து விட்டு, மக்கள் மென்வேலைகள் (white collar jobs) எனப்படும் உடலுழைப்பு இல்லாத வேலைகளில் ஈடுபடுவதே. நடைமுறைப் படுத்த முடிந்தால் இது ஒரு மிகக் கவர்ச்சியான சமூகத்தை உருவாக்குகிறது. எல்லோரும் உல்லாசமாக இருப்பது ஒரு மிக இனிமையான கனவு. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா போன்ற நாடுகள் இதற்கு ஒரு எடுத்துக் காட்டு. யாரும் உடல்வருத்தத் தேவை இல்லை - எல்லாம் இயந்திரங்களும் , அவற்றை இயக்கும் 2-5% மனிதர்களும் பார்த்துக் கொள்வார்கள். மற்ற 95 விழுக்காடு மக்கள் விநியோகம், சில்லறை விற்பனை, விளம்பரம், ஊடகம், சேவைப்பிரிவுகள் என்று எல்லாவற்றிலும் வேலை செய்யலாம். வேலை இல்லாதவர்களுக்கு அரசாங்கம் dole எனப்படும் இலவச சம்பளம் அளிக்கும். உணவு எளிதாய்க் கிடைக்கும். மொத்த மாதச் செலவில் உணவுக்கென 10-15 % தான் ஆகும். ஆகா, என்ன இனிமையான வாழ்க்கை! வளர்ந்த நாடுகள் என்றால் சும்மாவா? நாமும் இதுபோல் வளர வேண்டாமா?

நியாயமான ஆசைதான். ஆனால் நம் நாடும், நம்போன்ற நாடுகளும், மிகவும் மாறுபட்டவை. அதனால்தான் காந்தி “அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் சரியாய் இருப்பது இந்தியாவிற்குச் சரியாய் இருக்காது” என்று இத்திட்ட வரைவை ஒதுக்கினார். இத் திட்டமானது ஒரு சில சொல்லப்படாத அடிப்படை அனுமானங்களை (tacit assumptions) உள்ளடக்கியது. எடுத்துக்காட்டாகச் சில:

இயந்திரங்களால் உற்பத்தியைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க முடியும்

எல்லோராலும் மென்வேலைகள் செய்ய இயலும்

வளரும் மக்கள் தொகைக்கு, இருக்கும் நிலப்பரப்பிலேயே இயந்திர விவசாயம், வேளாண் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் உணவு உற்பத்தி செய்ய முடியும்

மையப் பொருளாதாரம் ஒன்றே உற்பத்தி வளர்ச்சிக்கு வழி. மனித சமுதாயத்தால் வளர்ந்து கொண்டே போக முடியும்

ஒரு திட்ட வரைவு இருந்தால் அதை அனைத்து மக்களும் பின்பற்றுவார்கள்

இயந்திர உற்பத்தியால் அனைவருக்கும் வேலைகள் உருவாக்க முடியும்

எல்லாவற்றிற்கும் மேலாக,

எல்லோருக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைத்து விட்டால் நிறைவான சமுதாயம் உருவாகிவிடும் .

இவற்றை ஒவ்வொன்றாக ஆரோய்வோம்.

1.இயந்திரங்களால் உற்பத்தியைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க முடியும்

இயந்திர உற்பத்திக்கு மூலப் பொருட்கள், ஆற்றல், இயற்கை வளங்கள் அனைத்தும் தேவை. இதில் ஆற்றலின் நிலைமை ஏற்கனவே மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. பெட்ரோலியப் பொருட்கள், மின்சாரம் ஆகிய இரண்டுமே தற்போது ஆற்றலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மின்னுற்பத்தியில் அணைகள் மற்றும் நிலக்கரி மிக அதிகமாகத் தேவைப் படுகின்றன. வெறும் 1000 மெகாவாட் உற்பத்தி செய்வதற்குக் கூட‌ங்குளம் போன்ற ராட்சத அணுமின் நிலையங்கள் தேவைப்படுகின்றன. நாம் இயந்திர உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தால் 120 கோடிப் பேரின் அடிப்படைத் தேவைகளை உற்பத்திசெய்வதற்கான ஆற்றல் கூட நம்மிடம் இல்லை என்பதே உண்மை. நம் நாட்டில், இன்றும், பெரும் பகுதி உணவு எளிய மக்களின் உடல் உழைப்பால் உற்பத்தி செய்யப் படுகிறது. அதை இயந்திரங்களால் மாற்றினால் நம் நாட்டில் உள்ள எல்லா ஆற்றலும் உணவு உற்பத்திக்கே செலவாகி விடும்.எனவே இயந்திர உற்பத்தி என்பது ஒரு பெரும் மலையைக் குடைந்து கொண்டே இருப்பது போல - விரைவில் மலை தரை மட்டமாகி விடும் - உற்பத்தி முற்றிலும் நின்று விடும்.

2. எல்லோராலும் மென்வேலைகள் செய்ய இயலும்

எல்லாம் இயந்திரங்கள் உற்பத்தி செய்தால், மக்களுக்கு எப்படி வேலை அளிப்பது? சேவைப் பிரிவில் வேலைசெய்யும் அளவு 60 கோடிப் பேரை எப்படித் தயார் செய்வது? பெரும்பாலான இந்திய மக்கள் அடிப்படைக் கல்விக்கு மேல் பெறாதவர்கள். மென்வேலைகள் செய்யத் தேவையான தொழில்நுட்ப அறிவோ, கணினி போன்றவற்றைப் பயன்படுத்தும் அறிவோ அவர்களிடம் இல்லையே. 60 கோடிப் பேருக்குப் பயிற்சி அளித்து அவர்களை மென்வேலைகளுக்கு மாற்றத் தேவையான நிதி, மனித ஆற்றல் , காலம் போன்றவை அரசிடம் உள்ளதா?

3. வளரும் மக்கள் தொகைக்கு, இருக்கும் நிலப்பரப்பிலேயே இயந்திர விவசாயம், வேளாண் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் உணவு உற்பத்தி செய்ய முடியும்

இப்போது 600 கோடியாக இருக்கும் மக்கள் தொகை வளர்ந்து 2050ல் 900 கோடியில் நிலை பெறும் என்று பல கணிப்புக்கள் கூறுகின்றன. இருக்கும் நிலப்பரப்பில் 900 கோடிப் பேருக்கு எளிதாக உணவு உற்பத்தி செய்ய முடியும் - ஆனால் அது இயந்திர வேளாண்மையால் இயலாது. ஓரினப் பயிர் செய்து வேதி உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் உற்பத்தி செய்யச்செய்ய மேல்மண்ணின் வளம் கெட்டு இருக்கும் விளை நிலப் பரப்பு குறைந்து கொண்டே வரும். நிலத்தடி நீர் மிகவும் கீழே போய் உவர், அமிலத் தன்மை கொண்டதாய் மாறிவிடும். உணவுப் பஞ்சம் என்பது இயந்திர வேளாண்மையின் நேரடி விளைவாகும்.

4. மையப் பொருளாதாரம் ஒன்றே உற்பத்தி வளர்ச்சிக்கு வழி. மனித சமுதாயத்தால் வளர்ந்து கொண்டே போக முடியும்

புவி என்பது வரையறுக்கப் பட்ட வளங்களைக் கொண்ட ஒரு உயிர்ச்சூழல். நம்மால் வேறு கிரகங்களுக்குப் போய் வாழ‌ முடியாது. இருக்கும் வளங்களைப் பாதுகாத்து சிக்கனமாகச் செலவழிப்பதே அறிவுள்ள வழி. வளர்ச்சி என்று நாம் கூறுவது இயற்கை வளங்களை ஆளுமை கொண்டு , அழித்து அவற்றைப் பணமாய் மாற்றுவதைத்தான். மனித இனம் வளர்கிறேன் என்று தன்னைத் தானே அழித்துக் கொள்கிறது; பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடும் என்பது போல் இதைப் பற்றிப் பேசாமல் இருந்தால் இது தானாகச் சரி ஆகி விடும் என்ற கொள்கையை அனைத்துத் திட்டமிடுவோரும் கடைப்பிடிக்கின்றனர். அண்மைப் பொருளாதார வடிவமைப்பால் உற்பத்தி செய்ய இயலாது என்று நாம் ஏன் பரிசோதிக்காமலே முடிவு கட்ட வேண்டும்?

5. ஒரு திட்ட வரைவு இருந்தால் அதை அனைத்து மக்களும் பின்பற்றுவார்கள்

“நாம் எல்லோரும் மிக நல்ல திட்டங்களைக் கனவு காண்கிறோம்; அதில் உள்ள யாருமே நல்லவர்களாய் இருக்கத் தேவை இல்லை என்பது போல்!” என்று காந்தி நம் திட்டமிடலை நையாடுவார் (We dream of systems so good that no one in it needs to be good). சாலை விதிகளைக் கூடச் சரியாக மதிக்க விருப்பமில்லாத நம் நாட்டில் மிகப் பெரும் மையப் படுத்தப்பட்ட திட்டங்களைத் தீட்டி அவற்றை 120 கோடி மக்கள் பின்பற்றுவார்கள், அத்திட்டச் செயல் பாட்டில் எந்த ஊழலும் இருக்காது என்று எண்ணுவது என்ன மூடத்தனம்!

6. இயந்திர உற்பத்தியால் அனைவருக்கும் வேலைகள் உருவாக்க முடியும்

நவீனத் தொழிற்சாலைகளில் ஒரு வேலை உருவாக்க 10 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீடு தேவைப்படுகிறது. இவ்வளவு பேருக்கும் வேலைகள் உருவாக்க எவ்வளவு லட்சம் கோடி தேவை! யார் முதலீடு செய்வார்கள்? மேலும் முதலீடு செய்யும் அந்நிய வியாபாரிகள் தங்கள் சுயலாபத்திற்குத் தானே முதலீடு செய்கிறார்கள் - தேச சேவைக்கா?

7. எல்லோருக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைத்து விட்டால் நிறைவான சமுதாயம் உருவாகிவிடும்

இதைப் போன்ற ஒரு வெகுளித்தனமான அனுமானம் எதுவுமே இல்லை! உடல் வருத்தாமலே அனைத்து அடிப்படைத் தேவைகளையும் அனுபவித்து வரும் மேலை நாடுகளில் , பொழுது போகாமல் பற்பல போதைப் பொருட்களின் புழக்கமும், நெறியற்ற உறவு முறைகளும், பாலியல் குற்றங்களும், துப்பாக்கிக் கலாச்சாரங்களும், கொலை, களவு போன்ற குற்றங்களும், மனநல மருத்துவர்களும் பெருகி வரும் அவல நிலைமை எல்லாரும் அறிந்ததே. மனிதனிடத்து உள்ள மிருக வெறியை நெறிப்படுத்த உடலுழைப்பு மிக வசியம் என்று குமரப்பா அன்றே எழுதியுள்ளார்.

எல்லாம் சரி, ஆனால் எதையும் குறை சொல்வது எளிது; தீர்வுகள் காண்பது கடினம் என்று நீங்கள் சொல்வது தெளிவாய்க் கேட்கிறது. எனவே குறைகளை மட்டும் பட்டியிலிடாமல், தீர்வுகளையும் முன்வைத்து, அவை எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியம் என்பதையும் எடுத்துக் காட்டுக்களின் மூலம் ஆராய்வோம். அனைவரையும் உள்ளடக்கிய, இயற்கை வளங்களைச் சிக்கனமாகச் செலவழிக்கும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய ஒரு பொருளாதாரக் கொள்கை சாத்தியமா? அதை எப்படி வரைவது, எப்படிச் செயல் படுத்துவது என்று அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.

8

சென்ற கட்டுரையில் நவீன பொருளாதாரக் கொள்கைகளில் உள்ள தவறுகளைப் பார்த்தோம். மையப் பொருளாதாரம், மெய்வருத்தாக் கூலி, இயந்திர உற்பத்தி, பெரு நிறுவனங்கள் வலுப்படுதல், ஆற்றல் பற்றாக்குறை, ஊடக வலு ஆகியவை இத்திட்ட வரைவின் அடையாளங்கள். தனி மனித அந்நியத் தன்மை, உடல் , மன நலக்கேடுகள், உறவுகள் சிதறல் , குற்றங்கள் பெருகுதல், இயற்கை வளங்கள் அழிதல், கடன் பெருகுதல், எங்கும் எதிலும் ஒரு வியாபார நோக்கு ஆகியவை இதன் விளைவுகள். இப்போது நம் நாட்டு மக்களைப் பார்த்தால், ஐ.நா சபையின் அங்கமான UNDP வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 29.8% மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அடிப்படைத் தேவைகளுக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அதே நேரம், கடைநிலைச் சம்பளத்திற்கும் (கீழ் 10%), மேல்நிலைச் சம்பளத்திற்கும் (மேல் 10%) உள்ள வருமான வேற்றுமை கடந்த 20 ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆகி விட்டது. (6 லிருந்து 12 மடங்கு ஆகி விட்டது). எனவே இந்த தாராள மயமாக்கல் உற்பத்தியைப் பெருக்குவதை விட, ஏழைகளின் உற்பத்தியைத்தான் அதிகமாகப் பெருக்கிக் கொண்டிருக்கிறது.

இவற்றைச் சரி செய்து, ஒரு தெளிவான, நிலைத்தன்மை உடைய பொருளாதாரக் கொள்கை வரைவது எப்படி, அதற்குத் தடையாய் உள்ளவை என்ன‌ என்று இக்கட்டுரையில் காண்போம். அதற்கு முன், நாம் கேட்க வேண்டிய கேள்வி: ” இப் புதிய பொருளாதாரக் கொள்கையின் இலக்குகள் என்ன? எதை அடைந்தால் இது வெற்றி என்று கூறுவோம்?” . இது சற்றுக் கடினமான கேள்வி. முதலில் எல்லோருக்கும் அடிப்படைத் தேவைகள் கிட்ட வேண்டும். “வயிற்றுக்குச் சோறிட வேண்டும் , இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்” என்று நம் முண்டாசுக் கவிஞன் சொன்னது போல் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். இது ஒரு சோசலிச/பொதுவுடைமை நோக்கு. ஆனால் பொதுவுடைமை என்பது உலகெங்கிலும் தோற்றுக் கொண்டிருக்கிறது. தனியுடைமைதான் வென்று கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டில், தனியுடைமை கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. எனவே அடிப்படைத் தேவைகள் பெற ஒரு சாரார் போராடிக் கொண்டிருக்கையில், கீழ் நடுத்தர‌ மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் , மேல் மக்களாகவும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் இப் பொருளாதாரக் கொள்கை வாய்ப்பு அளிக்க வேண்டும். சைக்கிள் வைத்திருப்போன், பைக் வாங்கவும், அது உள்ளவர் கார் வாங்கவும் ஆசைப்படக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

உள்ளடக்கிய வளர்ச்சியை (inclusive growth) விரும்பும் நம் திட்ட வரைவு, முதலில் எளியோர்களுக்கு உதவுவதாகவும், பின்னர் நடுத்தர‌ மக்களுக்கு உதவுவதாகவும் அதன் பின்னரே பணக்காரர்களுக்குச் சாதகமாகவும் இருக்க வேண்டும். எனவே அடிப்படைத் தேவைகளான உணவு, குடிநீர், உடை, இருப்பிடம் ஆகிய அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும்படிச் செய்தல் வேண்டும். அதன் பின்னர் மின்சாரம், சாலை வசதி, கல்வி, மருத்துவம்; அதன் பின்னரே மோட்டார் வாகனங்கள், அலைபேசி போன்ற வசதிகள். இவற்றை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம். ஏழைகள் கிராமங்களிலேயே அதிகம் இருப்பதால், நம் பொருளாதாரக் கொள்கை கிராமங்களை வலிமையானதாய் மாற்றுமாறு அமையெ வேண்டும். கிராமங்களில் சிறுதொழில்கள் பெருகி வேலை வாய்ப்பு உருவானால், கிராமத்து இளைஞர்களை கிராமத்திலேயே இருத்துவது மட்டுமன்றி, நகரத்து இளைஞர்களும் கிராமத்தில் வேலை வாய்ப்புத் தேடி வரும்படி செய்யலாம். இதனால் வீங்கும் நகரங்கள் சற்றுக் குறைந்து, வசிப்பிடம், சுகாதாரம், குடிநீர், காற்று போன்ற நகரத்துப் பிரச்சினைகள் குறையும். இதைக்கருத்தில் கொண்டு நம் பொருளாதாரக் கொள்கை இருக்க வேண்டும்.

அடிப்படைத் தேவைகள்

உணவு

உணவு மிக அடிப்படையான தேவை. இன்று வளர்ந்த நாடுகளில், உணவு என்பது பெருநிறுவனங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப் படுகிறது. பையில் அடைக்கப்பட்டு வீட்டின் குளிர்பதனப் பெட்டியை எட்டும் வரை ஒவ்வொரு உணவும் பயணிக்கும் தூரம் மலைக்க வைக்கக் கூடியது. நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்காய் அதில் செலுத்தப்படும் நஞ்சுகளும் மிகக் கொடியவையே. எனவே, உணவில் நாம் மிகவும் முக்கியமான‌ மாற்றம் ஒன்றைப் பரிந்துரை செய்கிறோம். உணவு புதியதாகவும், அண்மையில் உற்பத்தி ஆவதாகவும், அதிகம் பயணிக்காததாகவும், பாதுகாப்பான‌தாகவும் இருப்பது முக்கியம். இதற்கு வழியாக‌, உணவுப் பயண‌ வரி என்ற ஒன்றை அரசாங்கம் இட வேண்டும். 100 கிலோ மீட்டருக்குள் பயணம் செய்த உணவுக்கு ஏதும் வரி இல்லை. அதற்கு மேல் உணவு பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் மின்சாரக் கட்டணம் போல் வரி கூடிக் கொண்டே போக வேண்டும். உதாரணமாக - 1 முதல் 100 கி.மீ = 0%. 100 முதல் 200 கி.மீ = 5%. 200 முதல் 500 கி.மீ = 10%. 500 கி.மீக்கு மேல் = 25%. வெளிநாட்டு இறக்குமதி உணவு = 100% !

இவ்வாறு செய்தால், பெரும் உணவுத் தொழிற்சாலைகள் கட்டுப்படி ஆகாமல், சிறு , அண்மைத் தொழிற்சாலைகளாக மாறி விடும். உணவு இறக்குமதி என்பது மிகுந்த விலையுள்ளதாய் மாறி உள்ளூர் உணவு கைக்கெட்டியதாய் மாறும். உதாரணமாக, உள்ளூரில் அரிசி ஆலை இருந்தால், 15 ரூபாய்க்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 25 ரூபாய்க்குத் தரமான அரிசி கிடைக்கும். இப்போது 12 ரூபாய்க்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 40 ரூபாய்க்கு மேல் அரிசி விற்கிறது.

வேளாண்மை

இயற்கை வேளாண்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப் பட வேண்டும். எல்லா மானியங்களையும் முற்றிலும் ஒழித்து விட வேண்டும். இன்று நாட்டில் வீணாக்கப்படும் 1 லட்சம் கோடி ரூபாய் உர மானியமானது, இறுதியில் 12 பெரும் செல்வந்தர்களை மட்டுமே சென்று சேர்கிறது என்று ஒரு ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது. எனவே மானியம் என்பது கொழுத்தவர்களை மேலும் கொழுக்க வைக்கும் கண்கட்டு வித்தையே. விதை என்பது பொதுச் சொத்தாக வேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உழவர் சேவை மையங்கள் அவ்வக் கிராம இளைஞர்களைக் கொண்டு உருவாக்கப் பட வேண்டும். அவற்றில், இயற்கை உரங்கள், தொழில்நுட்பம், மூலிகைப் பூச்சி விரட்டிகள், விதைகள் அனைத்தும் இருக்க வேண்டும்.

உணவுப் பொருட்கள் விளைப்பதற்கு மட்டுமே இலவச மின்சாரம் தரப்பட வேண்டும். வாழை, கரும்பு, மஞ்சள் போன்ற பணப் பயிர்கள் விளைப்பவர்களுக்கு (மீன் குட்டைக்கு விதிப்பது போலவே) மின்கட்டணம் விதிக்கப் பட வேண்டும். ஒவ்வொரு கிராமமும் தன் நில அளவில் 30 விழுக்காடு பரப்பை, மரங்கள் மற்றும் ஏரி போன்ற நீர் சேகரிப்பு அமைப்புக்களுக்காய் ஒதுக்க வேண்டும். 10 விழுக்காடு கால்நடை மேய்ச்சலுக்காய் ஒதுக்க வேண்டும்.

உடை

இது இப்போது நம்நாட்டில் பெரிய பிரச்சினை என்று சொல்லும் அளவில் இல்லை. ஒரு ஆண்-பெண் இருவரும் சேர்ந்து தினக் கூலியில் ரூ.600 ஈட்டலாம். 6-10 உடைகள் வாங்க 10 நாள் வேலை செய்தால் போதுமானது. எனினும், கைத்தறி, கதர் போன்ற கிராமப் புறத் தொழில்கள் வளரும் அளவு நாம் பிற உடைகளுக்கு வரி விதிக்க வேண்டும். இங்கும் இறக்குமதி செய்யும் உடைகள் கடுமையான வரிக்கு உட்படுத்தப் பட வேண்டும்.

குடிநீர்

இப்போது பெரும்பாலான கிராமங்களில் இது பெரும் பிரச்சினையே. இதற்கு அரசு நிலத்தடி நீரைப் பெரும் தொட்டிகளுக்கு ஏற்றி அங்கிருந்து குழாய் மூலம் விநியோகம் செய்கிறது. ஆஸ்திரேலியாவில் செய்வது போல், மழைநீரைப் பெரும் அணைகளில் சேகரித்து அவற்றை விநியோகம் செய்தால் பெருமளவு குடிநீர்த் தேவையை நிறைவு செய்யலாம். சராசரி வருட மழைநீர் 1000 மி.மீக்கு மேல் பெற்றிருக்கும் நாம் நீர் நிர்வாகம் செய்வதில்தான் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். இது பற்றிச் சரியான ஆய்வும் அதற்கு நேர்மையான , சேவை உள்ளம் கொண்ட நிபுணர் குழுவும் தேவை. நிலத்தடி நீரை மாசுபடுத்தும், வீணாக்கும் பெரும் தொழிற்சாலைகளை அறவே ஒதுக்க வேண்டும்.

இருப்பிடம்

இது ஒரு மிக முக்கியமான தேவை. ஆனால் கிராமங்களில் பெரும்பாலான மக்கள் அழகிய மண்வீடுகளில் மிகச் சுத்தமாக வசித்து வருகிறார்கள். திறந்த வெளியில் மலம் கழிப்பதைக் கண்டு நகரத்துள்ளோர் முகம் சுழித்தாலும், ஒவ்வொரு கிராமத்திலும் அக்கழிவிடங்கள் ஊரின் வெளியில் உள்ளன. அர‌சு, குடிசை மாற்று வாரியம் என்பதைக் கை விட்டுவிட்டு அனைத்து வீடுகளையும் “குடிசைகளாக மாற்றும் வாரியம்” ஒன்றை அமைத்தால் நம் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற, ஆற்றல் தேவை குறைந்த வீடுகள் உருவாக்கலாம். ஊடகங்கள் மூலம் சிமென்ட் வீடுகளே சிறந்தது என்று மக்களை மூளைச் சலவை செய்யாமல், மண், கீற்று, ஓடு போன்ற தொழில்நுட்பங்களில் ஆழ்ந்த ஆராய்ச்சிகள் செய்து, கச்சா வீடுகளுக்கும், கான்கிரீட் வீடுகளுக்கும் இடைப்பட்ட தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்து நடைமுறைப் படுத்த‌ வேண்டும். கழிப்பிடங்களுக்கு காந்தி ஆய்வு செய்தது போல் வார்தா முறை மக்குக் கழிப்பிடங்கள் (composting toilets) பற்றி ஆராய வேண்டும் .

நகரத்து ஏழைகள்

சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏராளமான மக்கள் குடிசைகளிலும், பிளாட்பாரங்களிலும் வசிக்கிறார்கள். கிராமங்களை விட நகரங்களில் ஏழ்மை அதிகமாக உள்ளது. இதை ஒரு திட்ட வரைவால் சரி செய்ய இயலாது. நகர‌த்தில் உள்ளவர்களுக்கு கிராமங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதே ஒரு நல்ல , நீண்டகாலத் திட்டமாகும். 'கெடு முன் கிராமம் சேர்' என்பது தாளாண்மையின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. காந்திஜியின் கிராம சுயராச்சியம் நோக்கியே நம் திட்ட வரைவு இருக்க வேண்டும். தன்னிறைவான கிராமங்கள் உள்ள நாட்டில், நகரங்களுக்கு அதிகம் வேலையில்லை என்பதே கசப்பான உண்மை!

இரண்டாம் கட்டத் தேவைகள்

அடிப்படைத் தேவைகள் நிறைவடைந்தபின் நம் அடுத்த கட்டத் தேவைகள் கவனிக்கப் பட வேண்டும். இதில் சாலை வசதிகள், போக்குவரத்து, மின்சாரம் ஆகியவை அடங்கும். அதன் பின்னர் கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் வரும். அதன் பின்னர் பொழுதுபோக்கு. எல்லாவற்றிற்கும் மேலாக வேலைவாய்ப்பு இன்றியமையாதது. இதைக் கடைசியில் பார்ப்போம்.

சாலை மற்றும் போக்குவரத்து

இதில் தமிழகம் பல மாநிலங்களைக் காட்டிலும் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாகப் பேருந்து சேவையில் தமிழ்நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இதில் புதிதாய்ச்செய்வதற்கு ஒன்றுமில்லை. சாலைக் கட்டுமானப் பணிகளில் உள்ள ஊழலைக் குறைத்தால் மட்டும் போதும். பேருந்துக்களை அதிகரித்தும், நவீனமாக்கியும் பொதுப் போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும். பேருந்து நிலையங்களைச் சுத்தம்செய்து அங்குள்ள கட்டணக் கழிப்பிடங்களை சீராய் நிர்வகிக்க வேண்டும்.

மின்சாரம்

ஆற்றல் என்பது தற்போது அடிப்படைத் தேவை ஆகி விட்டது. முன்னர் நம் தாளாண்மையில் அரசு அவர்கள் “அணு உலைக்கு மாற்று நம்மிடம் உள்ளது” என்றொரு சிறப்புக் கட்டுரை எழுதினார். மிருக மற்றும் தாவரக் கழிவுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதையும், காற்றாலைகள் மற்றும் சூரியக்கதிர் மூலம் மின்சாரம் தயாரிப்பதையும் நாம் தீவிரமாய் ஆராயந்து செயல் படுத்த வேண்டும். அணு மற்றும் அனல் மின்நிலையங்களைப் படிப்படியாகக் குறைத்து விட வேண்டும். ஆற்றல் தேவை குறைவாய் உள்ள சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கல்வி

இது ஒரு ஆழ்ந்த தேவை. சரியான கல்வி முறை என்பது எல்லோரையும் வேலைகளுக்குத் தயார் செய்யும். ஆனால் இப்போது யாருமே வேலைக் கல்வி கற்பதில்லை. ஐ.டி.ஐ, தச்சு, தையல் போன்ற வேலைக் கல்விகளுக்கு வாய்ப்பும் இப்போது சரியாக இல்லை. எல்லோருமே பொறியியல் படித்து எல்லோருமே மென்பொறியாளர் ஆகி எல்லோருமே அமெரிக்கா சென்று விடுவதாகத்தான் நாம், ஆட்டு மந்தை போல் கனவு கண்டு கொண்டிருக்கிறோம். வருடம் 1.5 முதல் 2 லட்சம் பொறியியலாளர்களைத் தமிழகம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது . ஆனால் அதில் 10% பேருக்குக் கூட வேலை கிடைப்பதில்லை. நம் கல்வி முறை அடியோடு சீர்திருத்தப் பட வேண்டியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதைச் சீர் திருத்துவது எப்படி என்பதில்தான் எல்லோருக்கும் குழப்பம். குமரப்பா சொன்னது போல் இப்போது கிராம மலர்ச்சிக்கு உடனடித் தேவை கிராமத்தில் சிறுதொழில் முனைவோர்தான். சிறுதொழிலுக்கான இடைப்பட்ட தொழில்நுட்பங்களும் (intermediate technology), நடைமுறைப்படுத்தப் படக் கூடிய மேலாண்மைக் (management) கல்விகளும் இப்போது அவசரத் தேவை.

இவை வாயில் நுழையாத ஆங்கிலப் பெயர்களுடன் பயில்வதை விட, எளிய தமிழில் (அவ்வம் மாவட்டத் தாய்மொழியில்), கலைச் சொற்கள் அகராதிகளுடன் கிராமங்களிலேயே சொல்லித் தரப் பட வேண்டும். நிதி நிர்வாகம், இடர் நிர்வாகம், கணக்கு எழுதுதல், சந்தைப்படுத்துதல், பொருளியல், வாணிபம் போன்ற அங்கங்களில் நடைமுறைக்குத் தேவைப்படும் அறிவை ஒரு நடைமுறைக் கல்வியாக நடத்த வேண்டும். மிகவும் சூட்டிகையாக இருக்கும் மாணவர்களுக்குத் தேவையான நிதி உதவியை அரசின் வங்கிகள் கடனாக அளிக்க வேண்டும். அரசில் உள்ள திறமையான அதிகாரிகள் இவ்விளைஞர்களை வழி நடத்தும் பொறுப்பைப் பகுதி நேரப் பணியாக‌ ஏற்க வேண்டும். ஒரு திறமையான இளைஞனை உருவாக்கினால், அவன் ஒரு சிறு தொழில் அதிபர் ஆனால், கிராமத்தில் 100 வேலைகளை அவன் உருவாக்குவான். அடுத்த ஐந்தாண்டில் 30 கோடி வேலைகளை உருவாக்கும் பொறுப்புள்ள அரசாங்கம் அந்நிய முதலீட்டுக் காத்திருந்தால் அதோகதிதான். இன்று இந்தியாவில் உள்ள 4 லட்சம் கிராமங்களிலும் கிராமத்திற்கு ஒன்றிரண்டு இளைஞர்கள் வீதம் அடையாளம் கண்டு அவர்களைத் தொழில்முனைவோராக்குவதுதான் மிக எளிமையான , சாத்தியமான திட்டம்.

9

சென்ற இரு கட்டுரைகளில், புதிய பாரதத்தின் புதிய பொருளாதாரக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று மேலோட்டமாக ஆராய்ந்தோம். ஒவ்வொரு துறையிலும் ஒரு வரைபடம் போல, திட்டம் செல்ல வேண்டிய‌ திசையைச் சுட்டிக் காட்டினோம். வாசகர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்; தாளாண்மை குறைகளை மட்டும் சொல்லவில்லை - விடைகளைத் தெளிவாக முன்வைக்கிறது. நவீன பொருளாதாரத்தின் நிலை என்ன: '69% மக்கள் நிலம் சார்ந்த தொழில்களில் உள்ளனர்; கிராமப் புறங்களில் உள்ளனர் - அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கும், வாழ்வாதாரத்திற்கும் என்ன வழி?' என்று கேட்டால் ,தற்போதைய பொருளாதார மேதைகள் கூறும் வழி 'அவர்கள் அனைவரையும் நகர‌த்தில் வேலை செய்ய அனுப்புங்கள்' என்பதே. 'அய்யா ஒரு வேலை உருவாக்க 10 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீடு தேவைப் படுகிறதே, 30 கோடி இளைஞர்களை எப்படி என்ன வேலைகளில் செலுத்துவீர்கள், அதற்கான முதலீட்டுக்கு எங்கே போவது' என்றால் அதற்கு ஏதும் பதில் இல்லை. 'ஒவ்வொரு தொழிற்சாலையும் ஏகப்பட்ட மெகாவாட் மின்சாரத்தைக் குடிக்கிறதே, இப்போது வீட்டு உபயோகத்திற்கே மின்பற்றாக் குறை உள்ள போது எப்படி இவ்வளவு தொழிற்சாலைகள் நிறுவுவது அதற்கான ஆற்றல் எங்கே? ' என்றால் அதற்கும் பதில் இல்லை. 'மேம்படுத்துதல் என்ற பெயரில் இருக்கும் விளைநிலங்களைத் தொழிற்சாலைகளுக்குத் தாரை வார்த்து விட்டால் உணவு உற்பத்திக்கு என்ன செய்வது?' என்றால் 'புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் தேவை' என்று பிரச்சினையை திசை திருப்பி வேறு ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வாணிபத்திற்கு வழிவகுக்கிறோம்.

'திசை தெரியாமல் வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறோம்; அடிமட்டம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. விழாமல் இருக்க ஒரே வழி இன்னும் வேகமாகப் போவதுதான் ' என்ற குருட்டுக் கொள்கையுடன் உலகம் முழுவதும் அமெரிக்காவைப் போல் ஆக , ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கிறது. விஞ்ஞானிகள் விடைகளைக் கண்டு விடுவார்கள், எல்லா இடர்களையும் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் களைந்து விடலாம். இப்போதைக்கு வேறு வழி இல்லை, வளர்ச்சி ஒன்றே வழி என்று நாமே நம்மை ஏய்த்துக் கொள்கிறோம். ஆனால் அமெரிக்கர்களைப் போல நாம் எல்லோரும் ஆனால் என்ன ஆகும்? இந்தியா வெடித்துச் சிதறி விடும். ஒரே ஒரு சிறிய உதாரணம் கூறுகிறேன்: ஒரு சராசரி இந்தியன் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு மணிக்கு 90 வாட்; ஒரு சராசரி அமெரிக்கனோ, ஒரு மணிக்கு 1402 வாட் பயன்படுத்துகிறான். நாம் எல்லாம் வளர்ச்சி வளர்ச்சி என்று அமெரிக்கர்களானால், நம் ஆற்றல் தேவை இப்போதையதை விட 15 மடங்கு ஆகி விடும்! இப்போது 90 வாட் கூடத் தடையற்றுத் தர இயலாத நிர்வாகம் 120 கோடிப் பேருக்கு நபர் ஒன்றுக்கு மணிக்கு 1400 வாட் மின்சாரம் தர இயலுமா?

எனவே நாம் வெள்ளையர்களைப் பார்த்து ஆடும் வான்கோழிகள் ஆகாமல் நம் நாட்டிற்குத் தேவையான, பொருத்தமான கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு நாட்டைப் பற்றிக் கூறுகையில்,

உறு பசியும், ஓவாப் பிணியும், செறு பகையும்

சேராது இயல்வது நாடு

என்று வள்ளுவர் கூறியுள்ளார். எனவே ஏழ்மையும், நோயும், எதிரிகளும் இல்லாத நாட்டை உருவாக்குவதற்கென‌ நம் பொருளாதாரத் திட்டம் இருக்க வேண்டும். ஏழைகளுக்கு அடிப்படைத் தேவைகளும், அவற்றை நிறைவு செய்யும் தற்சார்பான கிராமங்களும் உருவாக்கும் வண்ணம் சில பொருளாதார சிந்தனைகளை முன்வைத்தோம் (உணவுப் பயண வரி, இயற்கை வேளாண்மை, விதைகள் பொதுச்சொத்து ஆகுதல், மரங்கள், நீர்நிலைகள், கால்நடைகளுக்கென நில ஒதுக்கீடு போன்றவை). நிலம், நீர், கனிமங்கள், உயிரிப் பன்மையம் ஆகியவை மிக இன்றியமையாத சொத்துக்கள். நிலைத்தன்மையுடைய, நீடித்த மேம்படுத்துதலுக்கு இவை அனைத்தும் பாதுகாக்கப் பட வேண்டும். சூழல் இல்லையேல், எதுவுமே இல்லை - பின்னர் பார்த்துக் கொள்ளலாம், இப்போதைக்கு இருக்கும் வளங்களைச் சுரண்டிக் காசாக்கலாம் என்று எண்ணுவது மிக, மிகப் பித்துக்குளித் தன‌மான கொள்கை. அதை விட மன்னிக்க முடியாத குற்றம் - பன்னாட்டு நிறுவனங்களுக்கு நம் வளங்களைச் சுரண்ட அனுமதி அளித்து விட்டு அவர்களிடம் நம் நாட்டு மக்கள் அடிமை வேலை செய்ய அரசே கைக்கூலிகள் ஆவதுதான்.

வேலைகளை உருவாக்குகிறேன் என்று பல சலுகைகள் பெற்று, வளங்களைச் சுரண்டிப் பின் எல்லாம் கறந்த பின் வேறு ஒரு நாட்டைத் தேடிப் போவது அந்நிய முதலீட்டின் இயல்பு. இதைப் பற்றி வழிப்போக்கன் கென்யா நாட்டுப் பால் பண்ணைகள் பற்றிய கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தார். எனவே ஒரு நிலைத்தன்மை கொண்ட , தற்சார்பை விரும்பும் பொருளாதாரக் கொள்கை அந்நிய முதலீட்டுக்கு எதிராகவே அமைய வேண்டும். தொழில் தொடங்க நிறைய முதலீடு வேண்டும் என்பது மிகத் தவறான ஒரு சிந்தனை. வெளிநாட்டவருக்கு நம் சந்தையைத் திறந்து விடுவதும், நாம் ஏற்றுமதி மூலம் பொருள் ஈட்ட முனைவதும் நீண்ட காலத்திட்டம் ஆகாது. 2014ம் வருடம், இந்தியா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த மூன்றாவது பெரும் சந்தையாக வளர்ந்துள்ளது. ஜப்பான் நாட்டைத் தாண்டி இந்தியா பெரிதாகி விட்டது. உலகின் அனைத்து நாடுகளும் நம்மிடம் பொருட்களை விற்கப் போட்டி போடுகின்றன. நாம் ஏன் இந்த சந்தையை நாமே பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சி அடையக் கூடாது? பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்து விட்டு ஏன் ஆஸ்திரேலியக் கோதுமையையும், ஓட்ஸையும் வாங்க வேண்டும்?

நம் தற்போதைய பொருளாதாரக் கொள்கை இன்னொரு விஷயத்திலும் மிகக் குருட்டுப் பார்வை கொண்டதாக இருக்கிறது. அறிஞர் குமரப்பா சொன்னது போல், நாம் கச்சாப் பொருட்களை (raw materials) ஏற்றுமதி செய்து, அவற்றால் ஆன இறுதிப் பொருட்களை (finished goods) இறக்குமதி செய்கிறோம். உதாரணமாக இரும்பு, எஃகு, தாமிரம்,பருத்தி போன்றவற்றை எல்லாம் ஏற்றுமதி செய்து விட்டு, ஜெர்மானிய இயந்திரங்கள், ஜப்பானிய மின்பொருட்கள், கொரிய உடைகள் ஆகியவற்றை இறக்குமதி செய்கிறோம். இதனால் மிகப் பெரிய பொருள் இழப்பு ஏற்படுகிறது. உற்பத்தியில் உள்ள வேலைகள் வெளிநாட்டுக்குப் போகின்றன.பொருள் ஈட்டும் வாய்ப்புக்களும் குறைகின்றன. உற்பத்தி என்பது பொருளாதாரத்தின் அடிப்படை. ஒரு தெளிவான உற்பத்திக் கொள்கை மிக இன்றியமையாதது. தற்போது உணவில் இருந்து, எல்லா அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் விரும்பும் பொருட்கள் எதற்குமே ஒரு தெளிவான உற்பத்தி வரைபடம் இல்லை என்பதே கசப்பான உண்மை. இந்தப் பூசணியைச் சோற்றில் மறைக்கவே, மெத்தப் படித்த முட்டாள்கள் புள்ளிவிவரங்களை மாற்றி, மாற்றிக் கணக்கிட்டுக் குழப்புகிறார்கள். ஆட்சி மாற்றம் ஒரு அடிப்படை மாற்றமல்ல; வண்டியின் ஓட்டுனரை மாற்றி விட்டால் அதள பாதாளத்தை நோக்கிச் செல்லும் வண்டி பிழைத்திடுமா? திசையை அல்லவோ மாற்ற வேண்டும்?

பொருளாதாரத்தை எவ்வாறு திசை மாற்றுவது? முதலில் மையப்படுத்தப் பட்ட சேய்மைப் பொருளாதாரத்தைக் குறைத்து (centralized, global economy), ஆங்காங்கே பற்பல அண்மைப் பொருளாதாரங்களாக (decentralized local economies) மாற்ற வேண்டும். தற்சார்பை அடிப்படை நோக்கமாய் வைத்துத் திட்ட வரைவு இருக்க வேண்டும். தேவைகளில் தற்சார்படைந்த ஒரு நாட்டில், உறுபசியோ, ஒவாப் பிணியோ இருக்காது. நாம் நம் இயற்கை வளங்களைச் சுரண்டாமல் இருந்தால் பகைவர்களும் இருக்க மாட்டார்கள்.

தற்சார்பு என்பது பொருளாதாரத்திற்கு இன்றியமையாதது. தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யலாம் (உள்ளூர் தொழில்நுட்பம் இல்லாத போது) ஆனால் தொழிலையே எதற்கு அந்நியருக்குக் கொடுக்க வேண்டும் ? இதில் என்ன தற்சார்பு உள்ளது? சிரீபெரும்புதூரில், 1000 கோடி ரூபாய் முதலீட்டுடன் ஆரம்பிக்கப் பட்ட நோக்கியாவின் அலைபேசித் தொழிற்சாலை 6000 பேருக்கு வேலை கொடுத்துப் பிரம்மாண்டமாகத்தான் தொடங்கியது. ஆனால் 6-7 வருடங்களுக்குள்ளாகவே 2000 கோடி ரூபாய் வரி ஏய்ப்புச் செய்து , தொழிற்சாலையை இழுத்து மூடி விட்டது. தன் நிறுவனத்தையும் அமெரிக்க மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்திடம் விற்று விட்டது! இதில் யாருக்கு நட்டம்? அந்நிய முதலீடு எப்படி நிரந்தரமாய் வேலைகளை உருவாக்க இயலும்? வானவில்லைத் துரத்திய சிறுவர்களைப் போல் நம் பொருளாதார மேதைகள் இந்த வளர்ச்சி என்னும் மாய மானைத் துரத்துகிறார்கள்.

உலகின் மூன்றாவது பெரிய சந்தையான‌ இந்தியாவிற்குத் தேவையானவற்றை நாமே அண்மைத் தொழில்களால் உற்பத்தி செய்து, விநியோகம் செய்தால் 30 கோடி வேலைகளை மிக எளிதாக உருவாக்கலாம். இதற்குத் தேவை இரண்டே விஷயங்கள்தான்: 1. அறிவு 2. உறுதி . பாரதி சொன்னது போல், அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம் - இதைக் கொண்டுதான் அரசு ஆள வேண்டும்.

நாம் இதுவரை ஆய்ந்ததை எல்லாம் தொகுத்தால் புதிய பொருளாதாரக் கொள்கையின் வடிவம் ஓரளவு வெளியாகும்.

சிறுதொழில்களுக்கும், அண்மைப் பொருளாதாரங்களுக்கும் முன்னுரிமை

அந்நிய முதலீட்டுக்குத் தடை

உள்நாட்டுச் சந்தையை உள்நாட்டு உற்பத்தியால், குறிப்பாக சிறுதொழில்களால் நிறைவு செய்தல்

இறக்குமதிப் பொருட்களுக்கு வரிச்சுமை அதிகரித்தல்

உற்பத்தியில் இடைப்பட்ட-தொழில்நுட்பத்தை ஊக்குவித்து வேலை வாய்ப்புக்களை அதிகரித்தல் மற்றும் ஆற்றல் தேவையைக் குறைத்தல்

வேளாண்மைக்கு, அதிலும் தற்சார்பான இயற்கை வேளண்மைக்கு மிக அதிக முக்கியத்துவம் அளித்தல்.

இயற்கை வளங்களைப் பெரும் அக்கறையுடன்,பாதுகாத்தல்; தொழில் என்ற பெயரில் சூழல் வளங்களைப் பாதிக்கும் தொழில்களைத் த‌டை செய்தல்/ கடுமையான வரி விதிப்பின் மூலம் பின்னடைவு ஏபடுத்துதல்

கச்சாப் பொருள் ஏற்றுமதிக்குத் த‌டை

தொழிற் கல்விக்கு முக்கியத்துவம்; கிராமம் மற்றும் சிறூர்களில், தாய்மொழியில் மேலாண்மை மற்றும் தொழில்முனையும் கல்விக்குத் திட்டமிடல்

கிராமங்களில் தொழில் முனைவோரையும், துறைசார் விற்பன்னர்களையும் ஊக்குவித்தல்

இயற்கையைக் காவு வாங்காத மாற்று ஆற்றல் வழிகளை ஆராய்ந்து செயல் படுத்துதல்

சூழலுக்கு உவந்த கட்டிடக் கலை; கட்டிடம் கட்டும் தொழிலில் சிமென்ட் , கம்பி போன்ற இயந்திர உற்பத்திப் பொருட்களைத் தவிர்க்கும் நுட்பங்கள்.

நாட்டின் மிக அதிகம் பேருக்கு வேலை அளிக்கும் மிக‌ப் பெரிய முதலாளியான வேளாண்மை, இயந்திர மயமாவதைத் தடுத்தல்.

ஊடக வலுவால் ஏய்க்கும் விளம்பரங்களில் இருந்து திசை மாற்றி, ஊடகங்களால் இயற்கை வாழ்வை மக்கள் ஏற்குமாறு பரப்புரைமை செய்தல்.

இதையெல்லாம் செய்வதற்கு எந்தப் பணவலுவோ, ஆயுத வலுவோ தேவை இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். நாம் போகும் திசையை மட்டும் மாற்றி - ஆளுமை என்ற இலக்கில் இருந்து, நிறைவு, பகிர்ந்துண்ணல் போன்ற இலக்குகளை நோக்கித் திரும்ப வேண்டும். இதனால் விரைவில் ஏழ்மை என்பதே இல்லாமல் போய்விடும்; சோம்பேறிகள் மட்டுமே ஏழைகளாக இருப்பர். இதை ஏன் அரசு கைக்கொள்வதில்லை? இதற்குத் த‌டையாய் உள்ளவை என்ன? அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.

10 தொழில்நுட்பம் என்னும் போர்வாள்

நாம் , அரசு எத்தகைய பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து வருகிறோம். 'கடை விரித்தேன் கொள்வாரில்லை' என்றாலும், கேட்க ஆளில்லையாயினும், 'என‌க்குண்மை தெரிந்தது சொல்வேன்' என்று தர்மக் கூச்சல் போடுவது நம் கடமையாகிறது. இந்தப் பொருளாதாரக் கொள்கையில் புதுமை எதுவுமே இல்லை; கட்டுரையின் தலைப்பே தவறு! காந்தி, குமரப்பா சொல்லியவற்றைத்தான் நாம் மீண்டும் வேறு வார்த்தைகளில், வேறு உதாரணங்களுடன் சொல்கிறோம். அக்கருத்துக்கள் அன்றை விடவும் இன்று அதிகப் பொருத்தமாக இருப்பது அவர்களின் தீர்க்க தரிசனத்தையும், நம் குருட்டுக் கொள்கைகளின் பலவீனங்களையும் காட்டுகிறது. மெத்தப் படித்த பொருளாதார மேதைகளால் வடிவமைக்கப் பெற்ற திட்டங்களையும், கொள்கைகளையும் குருட்டுக் கொள்கை என்று கூற நான் யார் என்று கேட்கலாம். ஆனால் கண்ணெதிரே ஒரு அதள பாதாளம் இருப்பதைக் கண்டும், சூழல் அழிவு என்ற பெரும் பூதம் நம்மை நோக்கிப் பெரும் வேகத்துடன் வருவதைக் கண்டும் “அவ்வாறு எதுவுமே இல்லை” என்ற கூறும் அறிஞர்களைக் குருடர்கள் என்று கூறாமல் வேறு என்ன சொல்வது?பூனை கண்ணை மூடி விட்டால் உலகம் இருண்டு விடுமா?

காந்தி தன்னுடைய இந்திய சுயராச்சியம் நூலில் பிரிட்டனின் பாராளுமன்றம் ஒரு மலட்டுப் பெண் என்றும் , விலைமாது என்றும் வர்ணித்தார் (The British parliament is a sterile woman and a prostitute). இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பல ஆண்டுகள் கழித்து அவரிடம் கேட்ட போது அதைப் படித்து விட்டு , ” நான் கூறியது அனைத்துமே சரியானதுதான்; இந்நூலில் ஒரு எழுத்தைக் கூட நான் மாற்ற விரும்பவில்லை” என்று கூறி விட்டார். நான் காந்தியின் செருப்பைத் தொடக் கூடத் தகுதியற்றவன்தான் ; எனினும் வலுத்தோரை மட்டுமே வளமாக்கும் நம் நவீனப் பொருளாதாரக் கொள்கைகள் குருட்டுக் கொள்கைகள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை - இதைப் பற்றி எந்த மேடையிலும், எந்த அறிவாளியிடம் விவாதிக்கவும் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. நம்நாடு ஏழைகள் மிகுந்த நாடு. செல்வந்தர்கள் அதிகமாவதனால் வறுமை ஒழிந்து விடாது. நலிந்தோரைக் கருத்தில் கொள்ளாமல், காக்காமல் தீட்டப்படும் அனைத்துத் திட்டங்களும், கொள்கைகளும் குருடரின் உளறல்களே.

இந்த மேம்படுத்துதல் (development) என்னும் வடிவமைப்பில் ஒரு நூதன சூழ்ச்சி உள்ளது. அது என்னவென்றால், விஞ்ஞானத்தையும், தொழில்நுட்பத்தையும் வாணிபம் ஆளுமை செய்வதுதான். நவீன தொழில்நுட்பத்தினால் மட்டுமே மேம்படுத்த இயலும் என்று கண்கட்டு வித்தைக்காரனைப் போல ஒரு ஜாலம் ஏற்படுத்தப் படுகிறது. பின்னர் ஊடக வலுவால் அது மீண்டும், மீண்டும் பறைசாற்றப்பட்டு அது உண்மையோ என்று மக்களைச் சிந்திக்க வைக்கிறது. இதுதான் ஒரே மருந்து என்று பெருவாரியான மக்கள் நம்புவதே இந்தத் திட்ட வரைவின் வெற்றி. நன்கு படித்துப் பலவும் தெரிந்த விவரமானவர்கள் கூட, அறிவுஜீவிகள் என்று மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டவர்கள் கூட இந்தத் 'தொழில்நுட்ப மாதிரி' ஒன்றுதான் நம்மைக் காக்கும் என்று தீவிரமாக நம்புகிறார்கள். நவீன தொழில்நுட்பத்திற்குப் பணம் தேவை; பணம் செல்வந்தர்களிடமும், வியாபாரிகளிடமும் உள்ளது; எனவே வாணிபத்திற்குத் தொழில்நுட்பம் அடிமையாகிறது. மிகவும் மதிக்கப்படும் விஞ்ஞானிகள் எவ்வாறு வாணிப நிறுவனங்களுக்கு விலைமாதுக்கள் ஆகிறார்கள் என்று “புதிய புலவர்கள்” தொடரில் பாபுஜி எழுதி வருகிறார். உயிர் காப்பவை என்று நம்பப்படும் பல மருந்துகள் லாபம் ஈட்டப் பிறந்தவைதான் என்பது அம்மருந்தை விடக் கசப்பான ஒரு உண்மை. தொழில்நுட்பத்தினால் சந்தைகளை ஆளுமை செய்யும் வாணிப நிறுவனங்கள் மீண்டும் அதிகப் பொருள் ஈட்டி, மேலும், மேலும் புதிய கண்டுபிடிப்புக்களையும் நுட்பங்களையும் தம்முடையது ஆக்கிக் கொள்கின்றன. ஏழைகள் வெறும் நுகர்வோராகிக் கடன் படுகின்றனர்.

இதில் மிகப் பெரிய வேடிக்கை (வேதனையும் கூட) என்னவென்றால், எல்லாவற்றிற்கும் விடை கூறக் கிளம்பும் நவீனப் பொருளியல் மேதைகள் எவருமே, பொருளாதார மேம்பாடு (economic development) என்பதற்கு இதுவரை ஒருமித்த, தெளிவான‌ ஒரு வரைவைத் தரவில்லை ! உலகமே காப்பியடிக்கத் துடிக்கும் அமெரிக்காவின் தலை சிறந்த பல்கலைக் கழகமான ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் பொருளியல் பேராசிரியர் மைக்கேல் போர்ட்டர் என்பவர் “பல்வேறு விதமான போட்டிச் சூழல்களை உருவாக்கும் ஒரு நாட்பட்ட முறைமை” தான் பொருளாதார மேம்படுத்துதல் என்கிறார். இவர் “நாடுகளின் போட்டியிடும் திறன் உயர்வு” (The Competitive Advantage of Nations) என்ற நூலை எழுதியவர்! இவரைப் பொருத்தவரை போட்டியே பொருளாதார மேம்பாடு. தத்தம் நாட்டு வாணிபர்கள் முன்னே நிற்குமாறு பார்த்துக் கொள்வது அவ்வ‌ந்நாட்டு அரசின் கடமை என்று இவர் கூறுகிறார். நெப்போலியன் முன்பு இங்கிலாந்தைக் “கடை விரிப்போரின் நாடு” என்று கேலிசெய்தது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும்.

சர்வதேசப் பொருளாதார மேம்பாட்டு ஆய‌ம் (International Economic Development Council) என்ன கூறுகிறது? “பொருளாதார மேம்படுத்துதல் என்பது இன்னதென்று வரையறுத்துக் கூற இயலாது. ஆனால் அதன் நோக்கங்களையும், குறிக்கோள்களையும் வைத்து அதை விவரிக்கலாம். பொதுவாக அவை வேலைகளையும், செல்வத்தையும் உருவாக்குவதும் , வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் என்று கொள்ளலாம் ” என்றொரு வழுக்குப்பாறையில் இறங்குகிறது. மேலும் அவ்வாயம் கூறுவது:

பொருளாதார முன்னேற்றம் என்பது மூன்று கூறுகளை உள்ளடக்கியது: அவை

- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், மேலதிகமான வேலை வாய்ப்பு மற்றும் நிலைத்தன்மையுடைய வளர்ச்சி ஆகியவற்றை வளர்க்கும் அரசுக் கொள்கைகள்

- நெடுஞ்சாலைகள், பூங்காக்கள், நலிந்தோர்களுக்கான மருத்துவ வசதிகள், பள்ளிகள் போன்றவற்றை உருவாக்கும் அரசின் திட்டங்கள்

- வாணிபத்தையும், மக்கள் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் அரசுத் திட்டங்கள்

இதெல்லாம் கேட்க நன்றாய் இருப்பினும் இதில் எதுவுமே செயல்திட்டங்களை விளக்காத வார்த்தைப் பசப்புக்கள் என்று உற்றுப் பார்த்தால் புரியும்.

ஆனால் எந்த ஒரு பொருளியல் வல்லுனரும், “வலுத்தவன், இளைத்தவனைச் சுரண்டுவ‌துதான் மேம்படுத்துதல்” என்று இதுவரை கூறியதாக நான் அறியேன். திருடனைத் தேள் கொட்டியது போல, இதுதான் மேம்படுத்துதல் என்று அறுதியிட்டுக் கூற இயலாமைக்கு அதனுள் ஒளிந்திருக்கும் உண்மையும், அதை அப்பட்டமாக்க இயலாமையுமே காரணம்.

வாழ்க்கைத் தரம் என்றால் என்ன? அதிக நுகர்ச்சியா? அதிகச் செலவிடும் வலுவா? ஆற்றலை அளவின்றிப் பயன் படுத்துவதா? எது வாழ்க்கைத் தரம் ? இதற்கும் சரியான வரைவு எதுவும் யாரும் கூறவில்லை.

தொழில்நுட்பம் உருவாக்கும் பொறிகள் மிகுந்த கவர்ச்சியானவை - இதை மறுப்பதற்கில்லை. ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கும் ஆச்சி, மின் கல்லில் எளிதாக‌ மெய் வருத்தாமல் அரைக்கும் பொழுது நாம் தொழில்நுட்பம் கூடாது என்று சொல்வதற்கில்லை. ஆனால், நெல் அரைக்கிறேன் என்று பெரும் ராட்சத மில் அதில் உள்ள சத்து முழுவதையும் கொன்று வெறும் துணிவெளுக்கும் மாவைப்போல் அரிசியைத் தள்ளும்போது, சற்று ஏற்றுக்கொள்ளக் கடினமாய் இருக்கிறது. தெருவில் விளையாடி வளர வேண்டிய குழந்தைகளைத் தன்முன் கண்விழிக்கும் நேரமெல்லாம் கட்டிப்போடும் தொலைக்காட்சியைக் கண்டால் மிகுந்த சினம் உண்டாகிறது. தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் ஒரு கத்தியைப் போன்றவை; காயையும் ந‌றுக்கலாம், கழுத்தையும் அறுக்கலாம். எனவே நாம் தொழில்நுட்பத்தைக் குறை கூறுவதை விட, அதைப் பயன்படுத்தும் வாணிபத்தைச் சீர்திருத்தலாம். அதன் சுகங்களுக்குப் பழகி உடலையும் மூளையையும் மழுக்கிக் கொள்ளும் நம் சோம்பலைக் குறை கூறலாம்.

நவீன வாணிபமும், அதன் கைப்பாவைகளாய் உள்ள அரசியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவையும் மனித‌ மனத்திற்கு எந்த வித முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. உண்மையைச் சொன்னால், வாணிபம் உலகளாவிய தன் ஆளுமையைக் காப்பதற்கும், வளர்ப்பதற்கும் தொழில்நுட்பத்தை ஒரு போர்வாள் போல் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதே உண்மை.

உடல் உழைப்பில் இரண்டு வகை உண்டு - ஒன்று செய்ததையே மீண்டும் மீண்டும் செய்யும் திறனற்ற உடல் உழைப்பு. இன்னொன்று ஆசாரி, கொத்தனார், தையல் கலைஞர், மண்பானை செய்வோர் போன்றோரின் திறமையுள்ள உடல் உழைப்பு. இதை ஆங்கிலத்தில் drudgery என்றும் skill என்றும் வேறுபடுத்திக் கூறுகிறார்கள். நல்ல தொழில்நுட்பம் எப்படி இருக்க வேண்டும் என்றால், திறனற்ற வேலைகளுக்குப் பொறிகள் கண்டு பிடித்து விட்டுத் திறமையை மனிதர்கள் வெளிப்படுத்தும் உடல் உழைப்புக்கு வாய்ப்புக் கொடுப்பதாக இருக்க வேண்டும். சுரண்டலுக்கு ஒவ்வாத தொழில்நுட்பம் சூழலுக்கு உகந்தது; மனித நலத்திற்கு உகந்தது. இதற்கு ஒரு உதாரணம் காந்தியே கூறியிருக்கிறார். அதுதான் தையல் இயந்திரம். அது கையால் தைப்பதை எளிமையாக்கினாலும், தையல் என்னும் கலையை அழிப்பதில்லை. அதைப் பயன்படுத்துவோரின் கைவன்மையைப் புறக்கணிப்பதில்லை. செய்யும் தொழிலில் நம் திறமையை வெளிப்படுத்தினால் வேலையில் கிடைக்கும் நிறைவே தனிதான்.நல்ல தொழில்நுட்பம் என்பது ஒரு நடுப்பாதையில் பயணிக்க வேண்டும்.

இவ்வாறு பழமை முறைகளுக்கும், வெறும் இயந்திரங்களுக்கும் இடைப்பட்ட ஒரு பாதையைக் காட்டியவர்தான் ஈ. எஃப். சூமாக்கர் (E.F.Schumacher) என்னும் மிகச் சிறந்த பொருளியல் நிபுணர் . இவர் இடைப்பட்ட தொழில்நுட்பம் (Intermediate Technology) என்ற சொல்லாடலை உருவாக்கியதோடன்றி அதனை அவ்வச் சூழலுக்கு ஏற்ப பொருத்தமான தொழில்நுட்பம் ( appropriate technology) ஆகவும் மாற்றினார். இடைப்பட்ட தொநில்நுட்பத்தைப் பற்றியும், அதைப் பரப்ப் அவர் துவங்கிய இடைப்பட்ட தொழில்நுட்ப மேம்படுத்துதல் குழுவைப் (Intermediate Technology Development Group) பற்றியும், நம் நாட்டின் தற்போதைய சூழலில் அவை எவ்வாறு பொருத்தமானவை என்பது பற்றியும் வரும் இதழ்களில் பார்ப்போம்.

11 வளம்படுத்தும் கொள்கைகள்

சென்ற இதழில் இடைப்பட்ட தொழில்நுட்பம் பற்றிப் பேசுவதாகப் புறப்பட்டோம். அதற்கு முன் ஏன் பொருளாதாரக் கொள்கை சூழல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று காண்போம். பொருளாதாரத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள முற்படுமுன், பணம் என்பதற்கும் செல்வம் அல்லது வளம் என்பதற்கும் உள்ள வேற்றுமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை

என்றார் வள்ளுவர்.

“பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும் ” என்று மு.வரதராசனார் இக்குறளுக்கு விளக்கம் அளிக்கிறார். ஆகப் பொருளுக்கும் வளத்துக்கும் வேறுபாடு உள்ளது என்று தெளிவாகிறது. வளம் (குறிப்பாக இயற்கை வளம் மற்றும் மனித மன வளம்) என்பது அடிப்படையான செல்வம். வேறு ஒரு குறளில் வள்ளுவர் “நாடென்ப நாடா வளத்தன ”, என்று தேடாமலே இயல்பாக வளம் உள்ள நாடே நல்ல நாடு என்கிறார். அவ்வகையில் பார்த்தால் உலகில் மிகப் பெரிய வளங்களை உடைய நாடுகள் “மூன்றாம் உலகம்” என்று சொல்லப் படும் ஏழை நாடுகளே. அமெரிக்காவைத் தவிரப் பிற வளர்ந்த நாடுகள் அனைத்தும் குறைந்த வளங்களை உடையவையே. பிரிட்டனும், ஸ்பெயின்,பிரான்சு மற்றும் போர்ச்சுகீசிய நாடுகளும் கடல் கடந்து மூன்றாம் உலகைத் தேடிச் சென்ற காரணம் 400 - 500 வருடங்களுக்கு முன் ஐரோப்பாக் கண்டத்தில் வளங்கள் பற்றாக்குறை மிக அதிகமாகி வாழ்வு பெரும் போராட்டம் ஆனதுதான். வட அமெரிக்காவும் செவ்விந்தியர்களிடம் இருந்து கொலை கொள்ளைகளால் பிடுங்கப் பட்டதுதான்.

செவ்விந்தியர்கள் என்று அழைக்கப்பட்ட வட அமெரிக்கக் கண்டத்தின் பழங்குடியினர், 'மண் என்பது நம் தாய், அவளைக் காயப் படுத்துதல் பெரும் தவறு' என்று நிலத்தை உழுவதையே ஒரு பெரும் பாவமாகக் கருதினர். வேட்டையாடி உண்பதும், மீன் பிடித்து உண்பதும் மற்றும் மரங்களில், இயற்கைச் செடிகளில் கிடைக்கும் காய்கனிகளை உண்பதும் அவர்கள் இனம் செழித்து இருக்கப் போதுமானதாய் இருந்தது. மிகப்புதுமைகள் கண்டு விட்ட, இன்றைய கால கட்டத்திலும் மங்கோலியாவில் உள்ள கால்நடை வளர்க்கும் நாடோடிகள், கடும் குளிரில், திறந்த வெளிகளில் தங்கள் கூடாரங்களை அமைக்கக் கூட குழி வெட்டுவதில்லை. மண்ணைக் காயப் படுத்துதல் மன்னிக்க முடியாத குற்றம் என்று நம்மைத் தாங்கும் நிலத்தைப் புனிதமாகப் பேணுகின்றனர். நம் நாட்டில் நியம்கிரி போன்ற மலைகளை வசிப்பிடமாகக் கொண்ட ஆதிவாசிகளும், மலையை ஒரு கடவுளாகவும், அதைக் குடைவதை தெய்வ குற்றம் என்றும் தீவிர நம்பிக்கை கொண்டு, மலையைக் குடையக் கிளம்பியுள்ள பன்னாட்டுக் கும்பணிகளுக்கு எதிராய்ப் போர்க்கொடி உயர்த்துகின்றனர். நதிகளைத் தாயாகவும், கடவுளாகவும் பாராட்டும் மரபுகள் எல்லாக் கலாச்சாரங்களிலும் தொன்றுதொட்டு இருந்து வருகின்றன‌. நம் நாட்டில், ஒவ்வொரு மரத்திற்கும், ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒரு கடவுளைத் தொடர்பு படுத்தி உயிர்ப்பன்மையத்தைக் காத்த நம் மூதாதையர்களின் கூர்ந்த அறிவு தெளிந்த ஞானத்தினால் பிறந்தது. தொழில்நுட்பம் இல்லாததனாலோ, அல்லது இயலாமையினாலோ பழங்குடியினர் இயற்கை வளங்களைச் சுரண்டாமல் இருக்கவில்லை. அதைச் சுரண்டும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தாலும், காசாக்கத் தெரிந்திருந்தாலும், பணத்தை விட செல்வம் உயர்ந்தது - நிலைத்தன்மை உடையது என்ற விவேகமே வளங்களைப் பாதுகாக்கக் காரணம்.

வள்ளுவர் சொன்னது போல், செல்வம் வரும் வழிகள் வளங்களைப் பெருக்குவதாகவும், பாதுகாப்பதாகவும் இருத்தல் வேண்டும். வளங்களைச் சுரண்டிப் பணம் பண்ணுவது பொன்முட்டை இடும் வாத்தை அறுத்த கதைதான். பெரிய தென்னந் தோப்பு உடைய ஒருவன், தேங்காய்களையும் , மட்டைகளையும் விற்று வாழ்ந்தால் அது நிலைத்தன்மை உடையது. மாதம் சில‌ தென்னை மரங்களை வெட்டி விற்றுக் குடும்பம் நடத்தினால் அது எவ்வளவு மூடத்தனமோ அவ்வளவு மூடத்தனமானது கனிம வளங்களைச் சுரண்டித் தொழிற்சாலைகளை உருவாக்குவது. அதிலும், அத் தொழிற்சாலைகளை நிறுவவும், அதன் லாபத்தை அனுபவிக்கவும் வேற்று நாட்டவருக்கு அனுமதி அளித்து, 'அதனால் வேலைகளை உருவாக்குகிறோம் அதுவே வளர்ச்சி' என்று மார் தட்டிக் கொள்வது என்ன பெருமை? இது தென்னை மரங்களை வேறு ஒருவர் வெட்டிக் கொள்ள அனுமதித்து விட்டு, அவரிடம் தோப்புக்காரன் விறகு வெட்டியாய்க் கூலி வேலை செய்வதற்கு ஒப்பாகும். சொல்லவே அபத்தக் களஞ்சியமாய், முழு மூடத் தனமாய் இருக்கும் இப்பொருளாதாரக் கொள்கையை எப்படி அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொள்வது?

ஆங்கிலப் பொருளியல் அறிஞரும், மிக நுட்பமான கலைவிமர்சகரும் , சிறந்த சிந்தனையாளரும் ஆன ஜான் ரஸ்கின் என்பவர் தன்னுடைய “அன் டு திஸ் லாஸ்ட்” (Unto This Last) என்ற நூலில் பணத்திற்கும் செல்வத்திற்கும் உள்ள வேறுபாட்டை மிக அழகாக விவரித்துள்ளார். பணம் என்பது சந்தையைச் சார்ந்தது. தேவை- இருப்பு என்ற இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினால் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும் ஒரு மாற்றிக் கொள்ளும் கருவி. எந்த வளத்தையும் தன்னுள் அடக்காத ஒரு வெறும் சின்னம். செல்வம் என்பது அப்படி அல்ல - தனக்கென்று ஒரு மதிப்பை உள்ளடக்கியது.

உதாரணமாக 50 ரூபாய் என்பது 50 வருடங்களுக்கும் முன் மிகப் பெரும் பணம். தற்போது ஒரு விவசாயத் தொழிலாளியின் ஒரு மணிநேர சம்பளம். இன்னும் சில ஆண்டுகள் போனால் ஒரு கோப்பைத் தேனீர் வாங்கும் காசாகி விடும். அதற்கென்று எந்த உள்ளடங்கிய மதிப்பும் இல்லாதது. ஆனால் ஒரு படி நெல் என்பது 10,000 ஆண்டுகளுக்கு முன்னும் , இன்னும் பத்தாயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒரே மதிப்பு உடையது - ஏனெனில் அது ஒன்றிரண்டு பேரின் ஒரு வேளைப் பசியைத் தீர்க்க வல்லது. அதற்கென்று ஒரு உள்ளடங்கிய செல்வம் உள்ளது. இதனால்தான் சோழநாட்டில் பெரும்பாலான வேலைகளுக்கு ஊதியம் நெல்லில் கொடுக்கப் பட்டு வந்தது. கோவில் நிர்வாகம் தொடங்கி, கோவில் குருக்கள், நீர் மணியகாரர், ஆசாரி, முடிவெட்டுபவர், துணி துவைப்பவர், விவசாயத் தொழிலாளி என்று அனவருக்கும் இத்தனை மூட்டை நெல் என்று கூலி நிர்ணயிக்கப்பட்டு, பணமே தேவைப்படாத ஒரு அண்மைப் பொருளாதாரம் நிலவி வந்தது. இப் பொருளாதாரத் திட்டவரைவு விலைவாசி ஏற்றத்தாலோ, தேவை-இருப்பு என்ற சிக்கலாலோ பாதிக்கப் படாதது. இன்று முதலீட்டு நிறுவனங்கள் என்று பொது மக்களின் பணத்தை வாங்கிச் சூதாடும் பெருநிறுவனங்கள் பணவீக்கத்தை எப்படிவெல்வது என்று மிகவும் தலைப் பிய்த்துக் கொண்டிருக்கையில் பண்டைய பண்ட மாற்று முறையும், செல்வம் சார்ந்த (பணம் சாராத) வாணிபமும் கண்ட முன்னோர்களின் பொருளாதார அறிவைப் புறக்கணிப்பது என்ன மேதாவித்தனம்?

இன்று உலகச் சந்தையில் பெரும் ஆளுமை செலுத்தும் அமெரிக்க நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் பலவும் வளரும் நாடுகளில், ('மூன்றாம் உலகத்தில்') விளைநிலங்களை வாங்கிச் சேர்க்கப் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றன. 1950 முதல் 2008 வரை அமெரிக்காவின் Standard & Poor's Index என்ற முதலீட்டுக் குறியீடு சராசரியாக 11.8% வருட லாபத்தை ஈட்டியுள்ளது. இந்தச் சமயத்தில்தான் அமெரிக்க மிக வேகமாக வளர்ந்து உலகின் முதல்பெரும் சந்தையாக உருவாகியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இதே காலத்தில் விளைநிலங்கள் 11.6% சராசரி வருட லாபத்தை ஈட்டியுள்ளன! 4% முதல் 6 % வரை பணவீக்கம் கொண்ட அமெரிக்காவில் வருடம் 11.8% என்பது மிகச் சிறந்த ஒரு லாபம். இதில் ஒளிந்துள்ள உண்மை என்னவெனில், 11.8% ஈட்டிய பல தொழில்கள் இன்று நலிவடைந்து விட்டன - கடனில் உள்ளன. வேளாண்மையோ, நிலைத்தன்மையுடன் , வளத்தை அழிக்காத‌ செல்வமாக இருக்கிறது.

வளம் என்றால் நம் பாரத நாட்டில் என்ன உள்ளது என்று கேட்கலாம். என்ன இல்லை என்று கேட்டால் எளிமையாகப் பதில் கூறிவிடலாம்! நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும், குளிர்பூந் தென்றலும் கொண்ட பாரத நாட்டைப் பாரதி

திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!

தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை;

மருவு செய்களின் நற்பயன் மல்குவை,

வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை

என்று நிலம், நீர் வளம் நிறைந்ததைப் போற்றுகிறார். உலகிலேயே மிக அதிக உயிர்ப்பன்மையம் உள்ள நாடுகளில் ஒன்றாகவும், உலக மக்கள் தொகைக்கு முழுவதும் உணவு அளிக்கக் கூடிய வளம் கொண்டதாகவும் உள்ளது நம்நாடு.

செய்தக்க அல்ல செயக் கெடும்; செய்தக்க

செய்யாமை யானும் கெடும்.

இயற்கை வளங்களைத் தாரை வார்ப்பது செயத்தகாதது. அவற்றைப் பாதுகாக்குமாறு தொழில்கள் தொடங்குவது செய்தக்கது. எனவே நம் புதிய‌ பொருளாதாரக் கொள்கை வளம் பெருக்குவதாக இருக்க வேண்டும். பெருக்காவிடினும், குறைந்த பட்சம் இருப்பதைக் காப்பதாகவாவது இருக்க வேண்டும். அடுத்த கட்டுரையில் இடைப்பட்ட தொழில்நுட்பம் என்பது எவ்வாறு வாரி பெருக்கி வளம் படுத்துகிறது என்று காண்போம்!

12 இடைப்பட்ட தொழில்நுட்பம் - உழவன் பாலா

சென்ற சில கட்டுரைகளில் வளம்பெருக்குபவையாகவும்,வேலை வாய்ப்பளிப்பதாகவும், நாட்டை அடமானம் வைக்காததாகவும் நம் பொருளாதாரக் கொள்கை இருக்க வேண்டியதன் தேவையைப் பார்த்தோம். பொருளியல் என்பதும் வாணிபம் என்பதும் தற்காலத்தில் மனித உணர்வுகளை மதிக்காது லாபம் ஒன்றையே குறியாகச் (வெறியாகச்) செல்வதையும் அதற்குத் தொழில்நுட்பமும் அறிவியலும் போர்வாட்களாய்ச் செலுத்தப்படுவதையும் கண்டோம். அந்நிய முதலீடுதான் நம் நாட்டிற்கு வேலை வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கையில் நம்மை ஆள்பவர்கள் நம் நாட்டைப் பெரு நிறுவனங்களிடம் தாரை வார்த்துக் கொண்டு இருக்கும் அவல நிலை நிலவி வருகிறது. வேலைகள் உருவாக்குவதும் உற்பத்தியை வெல்வதுவும் நாகரீக வாழ்விற்கு இன்றியமையாதது. இதில் மாற்றுக் கருத்திற்கே இடமில்லை. எனினும் நவீன‌ வாழ்வில், இயந்திர உற்பத்தியால் கடந்த 100 ஆண்டுகளில் நாம் அழித்த இயற்கை வளங்கள் அதற்கு முந்தைய வரலாற்றில் 2000 ஆண்டுகளின் அழிவிற்குச் சமம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் எவ்வாறு “அகலாது, அணுகாது தீக்காய்வது ” போலக் கையாள்வது என்பதே நம் புதிய பொருளாதாரக் கொள்கையின் முக்கியக் கேள்வி.

இக்கேள்விக்குப் பலர் பலவிதமான விடைகளைப் பரிந்துரைத்திருக்கின்றனர். அறிவியல் மேலும் மேலும் புதிய ஆற்றல் ஊற்றுக்களைக் கண்டறிந்து விடும், எனவே நாம் கவலையின்றி இருக்கும் வளங்களை அழிப்போம் என்பதே தற்போது நமக்கு மிகவும் வசதியாய் இருக்கும் ஒரு கொள்கை. உலகில் 100க்கு 98பேர் இதைத்தான் நம்புகின்றனர். வாணிப வலுவும் அதற்குச் சாமரம் வீசும் ஊடக வலுவும் நம்மை நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் மேலைநாடுகளில் இருந்து இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மிகச் சிலரே. அவர்களும் விடைகளைக் கூறாது குறைகளை மட்டுமே கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர். தொழில்நுட்பத்தின் கவர்ச்சியை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களில், தோரோ, டால்ஸ்டாய், காந்தி ஆகியோர் மிக முக்கியமானவர்கள். மேலை நாட்டார் மிகவும் மதித்து நோபல் பரிசுகளை அளித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், “காந்தியின் கருத்துக்களே நம் காலத்து அரசியல்வாதிகளில் மிகுந்த ஞானம் உடையவையாக நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

காந்திக்குப் பின்னர் காந்தியின் சீடர்களான குமரப்பா, வங்கத்தைச் சேர்ந்த சதீஷ் சந்திர தாஸ்குப்தா,கிருபளானி, ஜெயப் பிரகாஷ் நாராயணன் ஆகியோர் நம் இந்திய நாட்டில் காந்தியக் கொள்கைகளைப் பரப்பியும், மேற்கத்திய தொழில்நுட்பத்தை எதிர்த்து மாற்றுக் கொள்கைகளைக் கூறியும் வந்தனர். இதே கால கட்டத்தில் ஜெர்மனியில் பிறந்து, உலகப் போரின் காரணமாக இங்கிலாந்தில் வளர்ந்த ஒரு தலைசிறந்த மாமேதை ஈ.எஃப்.ஷூமாக்கர் ஆவார். மேற்கத்திய நவீனமயமாக்குதலையும், இயந்திர மயமாக்குதலையும் அதன் உள்ளிருந்தே எதிர்த்துத் தற்காலத்தில் மிகப் ப‌ரவலாகப் பேசப்படும் பல மாற்றுப் பொருளியல் கொள்கைகளை முன்மொழிந்தவர் ஷூமாக்கர்.

இன்று உலகெங்கிலும் எல்லா நாடுகளும் பரவலாய் விரும்பும் முதலாளித்துவக் கொள்கைகளுக்கு ஒரு உருவகம் கொடுத்தவர் ஜான் கெய்ன்ஸ் என்னும் ஆங்கிலப் பொருளியல் அறிஞர். நவீனப் பொருளியலில் கெய்னீஸியப் பொருளியல் என்று ஒரு பிரிவே உண்டு. ஷூமாக்கர் இவரிடம், புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், பொருளியல் பயின்றார். அரசு முதலாளித்துவத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கொள்கைத் திசையைக் காட்டியவர் கெய்ன்ஸே. 1930ல் இரண்டாம் உலகப் போருக்குமுன் முதலாளியத்தை ஆதரித்து கெய்ன்ஸ் எழுதிய கட்டுரையில் “பேராசையும், தட்டிப் பறித்தலும், முன்னெச்சரிக்கையும் இன்னும் சில காலங்களுக்கு நாம் நம் கடவுள்களாக ஏற்றுக் கொண்டாக‌ வேண்டும். தர்மத்தை அளவுக்கு அதிகமாகப் பாராட்டிக் கொண்டிருந்தால் முன்னேற இயலாது” என்று எழுதினார். தன் ஆசிரியர் ஆயினும் அவர் கருத்துக்கள் ஏற்க இயலாதவை என்று வாதாடியவர் ஷூமாக்கர்.

1950 முதல் 1970 வரை பிரிட்டானிய‌ அரசின் , தேசிய‌ நிலக்கரி ஆயத்தின் (National Coal Board), தலைமைப் பொருளியல் ஆலோசகராகப் (chief economic advisor) பணியாற்றினார். 1955ல் அன்றைய பர்மா அர‌சுக்குப் பொருளியல் ஆலோசகராகப் பணியாற்றச் சென்றார். அப்போது அவர் எழுதுகிறார்: “நான் மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும்:

- ஏழ்மையையும் அதன் இயலாமைகளையும், எல்லைகளையும் நான் ஆராய வேண்டும் - நான் ஏழ்மையுடன் என்னை இணைத்துக் கொள்ளவேண்டும் - அதன் பின்னர் நான் ஏழைகள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள என்னால் என்ன உதவிகள் செய்ய இயலும் என்று கண்டறிய வேண்டும்”.

(இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வந்து மண்வீடு கட்டும் தொழில்நுட்பங்களை ஆராய்ந்த லாரி பேக்கர் நினைவு வருகிறதல்லவா! - பேக்கர் இந்தியா வந்து எழுதியது: “நான் பெற்ற இப் புதிய‌ கல்வியின் மிகுந்த வியப்பளிப்பதும், நம்ப இயலாததுமான அங்கம் என்னவென்றால், இவ்விநோதமான கட்டுமுறைகள் நன்கு வேலை செய்பவையாக இருந்தன. நான் விடை காண முடியாதவை என்று எண்ணிய இடர்களின் விடைகள் என்னைச் சுற்றி, நான் எங்கு சென்றாலும் காணப்பட்டன. நான் கண்ட பாரம்பரியத் தொழில்நுட்பங்கள், அண்மையில், எளிதில், கிடைக்கும் இயற்கைப் பொருட்களை வைத்து கட்டிடம் கட்டும் நுட்பங்கள், பல்லாயிரக்கணக்கான வருட‌ ஆராய்ச்சியையும், அனுபவத்தையும் உள்ளடக்கியவை என்று உணரவே எனக்குப் பல வருடங்கள் பிடித்தன. இம்மாதிரிக் கட்டிய கட்டிடங்கள் அவ்வச்சூழலின் புவியியல், நிலவியல், தட்பவெட்ப மாற்றங்கள், இயற்கை இடர்கள் (தாது, தாவர, பூச்சியின, பறவையின, மிருகங்கள் எதுவாயினும்) அனைத்தையும் சமாளித்து. அங்குள்ள மத, சமூக, கலச்சார முறைகளுக்கும் ஈடு கொடுப்பவையாக இருந்தன. எந்த நவீன இருபதாம் நூற்றாண்டுக் கட்டிடக் கலை வல்லுனருமே சாதிக்காத ஒரு பிரமிப்பான, வியத்தகு சாதனையாக இதை நான் கருதுகிறேன்.” )

மக்களை மதிக்கும் ஒரு பொருளியல் ஆய்வு (a study of economics as if people mattered) என்ற உபதலைப்பில் 1973ல் இவர் எழுதிய சிறியதே அழகு (Small is Beautiful) என்ற நூல், ராசேல் கார்சனின் மௌன வசந்தத்தைப் போல், உலகளாவிய‌ ஒரு பெரும் பொருளியல் மாற்றுச் சிந்தனைக்கு வித்திட்டது. 1968ல் இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் சிலர் கூடி இந்தியா வளர்ச்சிக் குழுமம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினர். இதில் இந்தியராய்ப் பிறந்து இங்கிலாந்தில் கல்வி பெற்றுப் பணி புரிந்து வந்த தொழில்நுட்ப வல்லுனரான மன்சூர் ஹோதாவும் அவரது சகோதரர் சுரூர் ஹோதாவும் முதன்மையானவர்கள். இதற்கு முன்னர் 1966லேயே மன்சூர் ஹோதாவும், ஷூமாக்கரும் இணைந்து “இடைப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக் குழுமம்” (Intermediate Technology Development Group) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினர். தற்போது இவ்வமைப்பு “நடைமுறைச் செயல்” (Practical Action) என்ற பெயரில் இயங்கி வருகிறது.

எல்லாத் தீர்க்க தரிசிகளைப் போலவே, இந்த மேம்படுத்துதலின் போதாமைகளை ஷூமாக்கர் அன்றே உணர்ந்திருந்தார்.1964ல் ஊரகத் தொழில்மயமாக்கல் (rural industrialization) என்ற கேம்பிரிட்ஜ் கூட்டத்தில் அவர் கூறியது -

முதலில், ஏழ்மை என்பது உலகின் மூன்றாம் நாடுகளின் உட்கிராம‌ங்களில் உற்பத்தியாகி மையம் கொண்டுள்ளது. வளர்ந்த நாடுகளின் உதவியோ, மேம்படுத்துதலோ இவ்விடங்களைச் சென்று அடைவதே இல்லை.

இரண்டாவது, இவ்வுட் கிராமங்கள் புறக்கணிக்கப் பட்டே இருக்கும்; அவற்றில் வேலையின்மையும், வறுமையும் பெருகிக் கொண்டேதான் இருக்கும் - நாம் அக்கிராமங்கள் தற்சார்பு அடைவதற்கான இடைப்பட்ட தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து அவற்றின் பயன்பாட்டை அவர்களுக்கு கிடைக்குமாறு செய்யாத வரை.

மூன்றாவது, உதவி செய்கிறேன் என்று வரும் பணக்காரக் கொடை நாடுகளுக்கு இக்கிராமங்கள் பற்றிய புரிதலோ அவற்றில் எளிதாய்ச் செயல்படுத்தக் கூடிய பொருத்தமான‌(எளிமையான) தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவோ இல்லை

குறைந்த செலவு உடைய, எளிமையான, இடைப்பட்ட தொழில்நுட்பத்தை மூன்று விதங்களில் செயல் படுத்தலாம் என்று ஷூமாக்கர் எழுதுகிறார்.

அவ்வவ்விடங்களில் இருக்கும் நுட்பங்களையும், செயல்களையும் மேம்படுத்துவது

மேலை நாடுகளில் உள்ள பொறிகளை எளிமைப்படுத்துவது

புதிய கண்டு பிடிப்புக்களை உருவாக்குவது

இதில் ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்றவற்றைக் கண்டறிவதுதான் இக் குழுமத்தின் நோக்கம்.

இடைப்பட்ட தொழில்நுட்பம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஷூமாக்கர் சில குறியீடுகளை முன்வைக்கிறார்.

முதன்மையாக தொழிநுட்பக் கண்டுபிடிப்புக்கள் அவ்வச் சூழலில் இயல்பாய்க் கிடைக்கக் கூடிய இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் பயன்படுத்தி பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும்

இரண்டாவதாக பெருமளவு மக்கள் பங்கு பெறுவதாகவும், பயன்பாட்டைப் பகிர்ந்து கொள்வதாகவும் தொழில்நுட்பம் இருக்க வேண்டும். இதனால் சமூக மேம்பாடு இயல்பாக நடைபெறும்.

மூன்றாவதாக ஏழைக் கிராமங்களில்/நாடுகளில் தற்போதுள்ள தொழில்நுட்பங்களைப் பெரிதும் மேம்படுத்துபவையாக அவை இருக்க வேண்டும். மேற்கு நாடுகளில் இருந்து காப்பியடிக்கப் படும் தொழில்நுட்பங்கள் பெரும்பாலும் பயனற்றவையாகவே இருக்கும்.

நான்காவதாக, நாட்பட நாட்பட இத்தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவோரின் வாங்கும் திறனுக்கும், பயன்படுத்தும் நுட்பத்திற்கும் ஏற்றவாறு வளர்பவையாக இருக்க வேண்டும்.

ஏழ்மைக்கு மூன்று காரணிகளை ஷூமாக்கர் பட்டியலிட்டார். “நம்மைச் சுற்றிப் பார்த்தால் ஏழைநாடுகளில் வளம் என்பது சற்றும் குறைவாயில்லை. கல்வியின்மை, அமைப்பின்மை மற்றும் ஒழுக்கமின்மை (lack of education, organization and discipline) ஆகிய மூன்று காரணங்களே வறுமைக்குக் காரணம்” என்றார். இவ்விடைப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக் குழும‌த்தின் செயல்முறைகளையும், உதாரணங்களையும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

13

நல்வாழ்வுக் குறியீடு

ஒரு அரசையும், அது ஆளப் போகும் மக்களையும், அவர்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது என்றும் திட்டமிடும் போது பற்பல கேள்விகள் நம்முன் நிற்கின்றன. உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சியான இந்தியாவில் எண்ணற்ற பிரிவினைகளும், எதிரும், புதிருமான தேவைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தை ஒரு குறிப்பிட்ட கொள்கையால் நிர்வாகம் செய்து விடலாம் என்பது இயலாத எதிர்பார்ப்பே. எனினும், உலகெங்கிலும், எல்லாப் பிரிவினைகளையும் தாண்டி, இன, மத,நிற, மொழி வேறுபாடுகளைக் கடந்து, நாகரிக மனிதர்கள் என்று சொல்லக்கூடிய அனைவருக்கும், நாடுகள் என்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பூகோளப் பகுதிகளுக்கும் ஒரே ஒரு அடிப்படைக் கொள்கை இழையூடி நிற்கிறது. அதுதான் பணம். உண்மையில் புத்தர், ஏசு, அல்லா, ராமர் என்பது எல்லாம் வெளிமயக்கே; நவீன மனிதனின் முழுமுதற் கடவுளும், மதமும் பணம் மட்டுமே. பொருளாதார முன்னேற்றமே எல்லா அரசுகளின் முக்கியக் கொள்கையாக இருக்கிறது. எனவே பொருளாதாரக் கொள்கையும், அதன் விளைவாகத் தீட்டப் படும் செயற்திட்டங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. பொருளாதார முன்னேற்றம் என்று நாகரிகமாகச் சொல்வது முடிவில் பணத்தையும், தங்கத்தையும் அதிக அளவில் பதுக்குவதும், திரை கடலோடித் திரவியம் தேடுவதுமாக முடிகிறது.

“ஆசைக்கு ஓர் அளவில்லை, அகில‌ம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர். அளகேசன் (குபேரன்) நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்” என்று தாயுமானவர் பாடியது போல் உலகம் முழுவதும் ஒரு குடைக்கீழ்க் கொண்டு வந்து பொருள் ஈட்ட வேண்டும் என்று அலையும் வல்லரசுகள்தான் இன்று பிற நாடுகளுக்குக் கொள்கைகளையும், திசையையும் காட்டுகின்றன. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி போல், இருக்கும் இடத்தில் நிறைவாய் வாழ்ந்த வளரும் நாடுகள், இப்போது தாங்களும் வளர்ச்சி, நவீன மயமாக்கல் என்று குருட்டுக் கொள்கைகளுடன் புலியைக் கண்ட பூனையைப் போல் தங்களைத் தாங்களே சுட்டுக் கொள்ளுகின்றன.

தற்காலச் சூழலில், பசி, கடன், நோய் போன்றவை இல்லாமல், நல்ல நிறைவான வாழ்க்கை வாழ்வதற்குப் பணம் ஒரு அடிப்படைத் தேவை என்பதை மறுக்க இயலாது. ஆனால் பொருள் ஈட்டுதல் என்பது நல்வாழ்விற்கு வழியாக ஆரம்பித்துப் பின்னர் அதுவே ஒரு முடிவு ஆகி விட்டது. இதே போலவே, பொருள் ஈட்டுவதற்கு நல்ல வேலை ஒரு வழியாகத் தொடங்கிப் பின் அதிக வருவாய் தரும் வேலை தேடுவதே ஒரு முடிவாகி விடுகிறது. இப்படியே நாம் ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு வழியைத் தொடங்கி அவ்வழியே முடிவு ஆகி விடுகிறது. ஊருக்குப் போகக் கிளம்பிய ஒருவன், வரும் வழியில் ஒரு திருவிழாவைக் கண்டு அதில் புகுந்து, அங்குள்ள எண்ணற்ற கேளிக்கைகளில் தன்னை மறந்து பின் ஊருக்குப் போவதையே கைவிடுவதுபோல, நாம் நலவாழ்விற்கு வழி எனத் தொடங்கிய பொருள் ஈட்டல், போதும் என்ற மனம் இன்மையால் அதுவே வாழ்வின் முழுநேரப் பணி ஆகி விடுகிறது. மக்களாட்சியில் அரசு என்பது தனிமனிதர்களின் ஒட்டு மொத்த இச்சைகளைப் பிரதிபலிப்பதாக இருப்பதால், அரசின் கொள்கையும் ஒட்டுமொத்தப் பொருள் ஈட்டல், ஒட்டுமொத்த உற்பத்தி என்று உருமாறி வெறும் எண்களே கொள்கைகள் ஆகி விடுகின்றன.

பண்ட மாற்று முறைகளில் பொருட்களைக் காபந்து செய்வது கடினம் என்பதால் பணம் என்பது மாற்றுக் கருவியாகக் கண்டு பிடிக்கப்பட்டது. சந்தையை எளிமைப் படுத்த வழியாக உருவக்கப் பட்ட காசு பின்னர் அதுவே ஒரு முடிவாகி விட்டது. இப்போது பற்பல நாட்டு நாணயங்களை வாங்கி விற்பதே தொழிலாகப் பல லட்சம் பேர் வேலை செய்கின்றனர். ஊக வணிகம், பங்குச் சந்தை, காப்பீடு, அந்நியச்செலாவணி வாணிபம் போன்று எத்தனை எத்தனை பொருளற்ற வேலைகள் உருவாகி விட்டன !

நல்வாழ்விற்குப் பல்வகைச் சுவையுடன் நுகர்ச்சி என்பது விரும்ப‌ப்பட்டதால், சமூக ஏணியில், அதிகம் நுகர்வோர் அதிகம் மதிக்கப் படுகின்ற‌னர். நம் உடல், மன நலத்தைவிடப் பிறர் நம்மைக் கண்டு பொறாமைப் பட வேண்டும் என்ற உந்துதலினால், நுகர்ச்சி என்பது முடிவாகவும், அதற்குப் பல்வகையான சந்தைப் பொருட்கள் வழியாகவும் தொடங்கின. வரலாற்றில் மார்கோ போலோ சீனாவிலிருந்து பட்டுத் துணியைக் கொண்டு அரசருக்குப் பரிசளித்தது போல், கிட்டாப் பொருட்களை நுகர்வது மிகவும் சமுக மரியாதையைப் பெற்றுத் தந்தது (தருகிறது). செல்வந்தர்களுக்குச் சேவகம் செய்து செல்வந்தராகத் துவங்கிய வணிகர்கள் பின் ஏழைகளுக்கும் வாணிபம் செய்து செல்வந்தர்களாயினர். ஆக சந்தை என்பது எல்லாருக்கும் அடிப்படைத் தேவையான ஒன்றாக மாறியது. வழியே முடிவாகிய இச்சந்தைகள், இன்று சமூகத்தை மாற்றும் அளவு வலுப்பெற்று விட்டன. சந்தை இல்லையேல் சமூகமே இல்லை என்ற அளவில் நம் மனித வாழ்வுடன் இவை புரையோடி விட்டன.

சந்தை என்பது ஆழ்ந்த வன்முறையை உள்ளடக்கியது என்று நாம் கூறியிருந்தோம். இது சற்றுப் புரிவதற்குக் கடினம். “நான் ஒரு பொருளை விற்கிறேன், வேறொருவன் வாங்குகிறான்; இதில் என்ன வன்முறை” என்று தோன்றலாம். வாணிபம் என்பது வெளிவன்முறையற்றது. தன் செயற்பாட்டிற்கு மிகுந்த அமைதியான சூழலை எதிர்பார்க்கிறது. ஆனால் வாணிபத்தை இயக்கும் பணத்தாசையோ வேறு எல்லாவற்றையும் அழித்துக் கிளம்பி நம் மனத்தை முழுமையாய் ஆக்கிரமிக்கிறது. இதற்கு இரண்டு உதாரணங்களைக் கூற விரும்புகிறேன்.

ஒரு முறை நான், ஜெய்சங்கர், அனந்து ஆகிய மூவரும் திருமங்கலத்தில் பாமயனின் பண்ணைக்குச் சென்று கொண்டிருந்தோம். அப்போது வழியில் அங்கு 3 பேர் ஒரு ஆட்டுக்கிடாவிற்கு வாயில் டியூப் மூலம் தண்ணீர் செலுத்திக் கொண்டிருந்தனர். நாங்கள் சில பண்ணைகளைப் பார்வையிட்டு சுமார் 2 மணிநேரம் கழித்து வந்தபோது இன்னும் தண்ணீர் ஊட்டிக் கொண்டிருந்தனர். 'ஆட்டிற்கு என்னவாயிற்று' என்ற கேட்டதற்கு, 'ஒன்றுமில்லை அது எடை கூடுவதற்காக நாங்கள் வயிற்றில் நீர் நிரப்புகிறோம்' என்றனர்! 'சில சமயங்களில் ஆடு நீர் அதிகமானால் இறந்து விடும் அபாயம் உள்ளது' என்றார் பாமயன். அப்போது நாங்கள் சந்தையின், சந்தையால் சாத்தியமாகும் லாபவெறியின் ஆளுமையை உணர்ந்தோம். இந்த லாப வெறி என்பது நம் எல்லா நுண்ணுணர்வுகளையும் மழுக்கடித்துக் கொலைகாரகள் கூட ஆக்கி விடும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனி நாட்டில் பான் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆர்மின் ஃபாக் என்னும் பொருளியல் முனைவரும், பாம்பெர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நோரா செக் என்னும் பொருளியல் முனைவரும் சந்தையின் தாக்கத்தப் பற்றி ஒரு பரிசோதனை நடத்தினர். இதில் சாதாரண மனிதர்கள் சந்தை விளையாட்டு ஒன்றில் பங்கு கொண்டனர். இதன்படி பங்கு கொள்வோருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்கப் பட்டு அவர்களிடம் வெள்ளெலிகளைக் காட்டுவார்கள். அந்தப் பணத்தைக் கொண்டு அவர்கள் அவ்வெலிகளை வாங்கினால் அவை உயிருடன் விட்டு விடப் படும். அவர்கள் வாங்கவில்லையென்றால் அவை கொல்லப்பட்டு விடும்.

முதலில் தனிமனிதர்களாக இப்பரிசோதனையை மேற்கொண்ட பலரும், 'பாவம் எலிகள்' என்று இருந்த காசுக்கு எலிகளை வாங்கி உயிர் காப்பாற்றினர். பின்னர் இதே பரிசோதனையில் இருமுனைச் சந்தை (வாங்குபவர் ~ விற்பவர்) மற்றும் பன்முனைச் சந்தை (விற்பவர் ~ வாங்குபவர் பலர்; ஏலம் மூலம் வியாபாரம்) போன்ற அமைப்புக்களில் அதே நபர்கள் கலந்து கொண்ட போது பலரும் லாபம் வேண்டும் என்று எலிகளைக் கொல்லத் துணிந்தனர். 'தார்மிக உணர்வுகளைச் சந்தை அரித்து விடும்' என்ற மிக முக்கியமான கண்டறிதல் செய்யப்பட்டது. “சந்தை என்ற சூழலில் பொறுப்பேற்பதையும், குற்ற உணர்வு கொள்வதையும் குறைப்பதற்குப் பல கருவிகள் உள்ளன. மக்கள் போட்டியையும், வெற்றியையும் முன்னிறுத்தி அறச் சிந்தனைகளை எளிதாக இழக்கிறார்கள். எல்லாரும் தவறு செய்யும்போது நாமும் தவறு செய்யலாம் என்ற உணர்வு மேலோங்கி விடுகிறது” என்று அவ்வாய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். “நான் வாங்கவோ, விற்கவோ இல்லையெனில், வேறு ஒருவர் வாங்கப் போகிறார்” என்று அலட்சியமாகக் கூறினராம்!

தனிமனிதர்களின் தொகையே ஒரு ஊராக, நாடாக மாறுவதால், ஒரு நாட்டில் பொருளாதாரக் கொள்கை என்பது அதன் அறநெறிகளைப் பாதுகாப்பதாய் இருக்க வேண்டும். இன்று உலகிலேயே மிகப் பெரிய சந்தையான ஐக்கிய அமெரிக்க நாட்டில்தான் உலகிலேயே மிக அதிகமான குற்றங்கள் நிகழ்கின்றன. கல்யாணம் ஆகாத பெண் கருச்சிதைவு செய்து கொள்ளலாமா வேண்டாமா என்பது அமெரிக்காவில் ஒரு பெரும் சர்ச்சை. தேர்தல் வாக்குறுதிகளில் நாங்கள் கருச்சிதைவை ஆதரிப்போம் என்று ஒரு கட்சியும், கருச்சிதைவை எதிர்ப்போம் என்று இன்னொரு கட்சியும் கூறுவார்கள். குற்றங்கள் நிகழ்வதில் மிகக் குறைவாக இருந்த இந்தியா இப்போது தாராளமயமாக்கலுக்குப் பின் “வளர்ந்து, ஒளிர்ந்து” உலகில் பத்தாம் இடத்தை எட்டி விட்டது. (சமீபத்திய நிகழ்வுகளைப் பார்த்தால் விரைவில் முதல் மூன்று இடங்களுக்கு 'வளர்ந்து விடும்' போலிருக்கிறது!). ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது வெறும் எண்ணே. அதை வளர்ப்பது மட்டுமே நம் குறிக்கோளாய் இருந்தால் நாம் அழிவை மட்டுமே நோக்கிச் செல்கிறோம் என்று பொருள்.

ஒரு நாட்டின் வளர்ச்சியை எப்படிச் சரியாகக் கணிப்பது? நாம் முன்னரே எழுதியது போல் வளர்ச்சி என்பது உடல் நலம், மன நலம், புவி நலம் என்ற மூன்றையும் ஒருமித்து உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதை எப்படிக் கணிப்பது? சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்கலாம்.

எத்தனை சதவிகிதம் மக்கள் மூன்று வேளை உணவின்றிப் பசியுடன் இருக்கிறார்கள்?

ஏழ்மை ஒழிக்க என்ன திட்டங்கள் உள்ளன? ஏற்கனவே தீட்டிய திட்டங்களில் எவ்வளவு எட்டப்பட்டன?

உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றின் அடிப்படை உற்பத்தியில் இருப்பவர்களின் தனி நபர் வருட வருமானம் எவ்வளவு?

அத்தியாவசியப் பொருட்களின் விலை வருடா வருடம் எவ்வளவு வளர்கிறது?

கடந்த ஐந்தாண்டுகளில் காடுகளின் நிலப் பரப்பு எவ்வளவு மாறியுள்ளது?

எவ்வளவு நதிகளில் மாசுக்கட்டுப்பாடு தீவிர‌மாகக் கண்காணித்து நெறிப்படுத்தப் படுகிறது?

கனிம வளங்களில் எவ்வளவு விழுக்காடு பாதுகாக்கப் படுகிறது?

நாட்டின் விளைநிலங்களில் உணவுப் பயிர்களின் விழுக்காடு எவ்வளவு?

வருமான வரி கட்டுபவர்களில் எவ்வளவு பேர் அரசின் பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றனர்?

வருமான வரி கட்டுபவர்களில் எவ்வளவு பேர் அரசின் மருத்துவமனைகளைப் பயன்படுத்துகிறார்கள்?

இது போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு அளிக்கப்படும் விடைகளை வைத்து நல்வாழ்வுக் குறியீடு என்று ஒன்றை உருவாக்கலாம். (இவை இன்னும் ஆழ்ந்தும், பரந்தும் இருக்க வேண்டும்).

நம் நல்வாழ்வுக் குறியீட்டை உயர்த்துவதாக அரசியல் கொள்கைகளும், பொருளாதாரக் கொள்கைகளும் இருக்க வேண்டும். அன்றி மேற்கு நாடுகளைக் காப்பியடிப்பதாக அல்ல.

14 நம்மைப் பிடித்த பிசாசுகள்

நம் பாரத நாடு மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது நாடு. 120 கோடிப் பேரைக் கொண்டது. உலகின் மொத்த மக்கள் தொகையில் 17.5% மக்கள் நம்நாட்டில் இருக்கின்றனர். இதில் 60 கோடிப் பேர் 25 வயதிற்கு உட்பட்டவர்கள். சுமார் 2000க்கும் மேற்பட்ட இனங்களையும், 29 மொழிகளையும், உலகின் எல்லா மதங்களையும் உள்ளடக்கிய தேசம் பாரத தேசம். நம்மைவிட அதிகமாய் மனித இன மற்றும் கலாசாரப் பிரிவினையைக் கொண்ட ஒரே பகுதி ஒட்டு மொத்த ஆப்பிரிக்கக் கண்டமே! இந்தப் பரந்த பாரத பூமியில், நடுத்தர வருவாய் அனுபவிப்பவர்கள் என்று பார்த்தால் சுமார் 7 கோடிக் குடும்பங்கள் உள்ளன (ஏறத்தாழ 28 கோடி மக்கள்). இது உலகின் மிகப்பெரிய சந்தையான ஐக்கிய அமெரிக்க நாட்டின் மக்கள்தொகையை விடச் சற்றுக் குறைவு. எனவே இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தையாக இருப்பதில் ஏதும் வியப்பில்லை. இந்தச் சந்தையை எப்படி அடைவது, வெற்றி கொள்வது, சுரண்டுவது? இதுவே தற்போது உலகின் எல்லா நாடுகளுக்கும் ஒரு முக்கிய கேள்வியாய் இருக்கிறது.

ஒரு நாட்டில் போய் நம் பொருளை எப்படி விற்பது? அதற்கு அந்நாட்டின் சட்டம் மற்றும் அரசியல் அமைப்புக்கள் ஒத்துழைக்க வேண்டுமே? சுரண்டுபவனுக்குப் பாதுகாப்பு வேண்டுமே? அந்நாட்டுப் பொருட்களை விட நாம் கடைவிரிக்கும் பொருட்கள் உயர்ந்தது என்று மக்கள் விரும்ப வேண்டுமே? அந்நாட்டு மக்கள் இதுவரை பயன்படுத்தியே இராத பொருட்களை அவர்களிடம் எப்படி நுழைப்பது? இது போன்ற கேள்விகளுக்குப் பலப்பல உருவங்களில் யாரும் இனங்கண்டறியாத சூழ்ச்சிகளும், உத்திகளும் கொண்டு விடை காண்பதுதான் சந்தைப்படுத்துல் என்னும் மிகப்பெரிய ஒரு இயல். தற்காலத்தில் எல்லாத் துறைகளை விடவும் அதிகப் பொருள் ஈட்டும் துறையாக இது இருப்பதும் இதனால்தான்.

சந்தை என்பது எப்போது வெல்லும்? சற்றே சிந்தித்தோமானால் சில அடிப்படை விடயங்கள் தேவை. முதலாவது அமைதியான சூழல் இருக்க வேண்டும்; போர், புரட்சி, இன, மதக் கலவரங்கள், இயற்கைச் சீற்றங்கள், பேரிடர்கள் போன்ற சூழ்நிலைகளில் மக்களின் நுகர்ச்சி அடிப்படைத் தேவைகளுடன் நின்று விடும். எனவே நாடு அமைதிப்பூங்காவாக வெளித் தோற்றமளிப்பது மிக இன்றியமையாதது.

இரண்டாவது தேவை நுகர்வோருக்கு 'நாம் சுதந்திரமாக இருக்கிறோம்; நினைத்ததைச் செயலாற்றும் ஆற்றல் நம் கையில் இருக்கிறது' என்ற உணர்வு முக்கியம். இது இருந்தால்தான் நுகர்ச்சி தொடர்ந்து வளரும். நுகர்ச்சியில் நிறையத் தெரிவுகள் (choices) இருப்பது போன்ற ஒரு பிரமை இன்றியமையாதது. மூன்றாவது பலகோடி நுகர்வோரை ஒரே நேரத்தில் சென்றடையுமாறு தகவல்-தொடர்பு வளர்ச்சி தேவை. நான்காவது தேவை விற்பவனுக்குப் பாதுகாப்பான சூழல். ஒரு பொருளையோ, செவையையோ உற்பத்தி செய்யும்போதோ, வினியோகம் செய்யும்போதோ ஏதேனும் உயிரிழப்பு, சுழல்கேடு போன்றவை ஏற்பட்டால் நட்ட ஈடு மிகக்குறைந்த (அல்லது முற்றிலும் இல்லாத) அளவு இருக்கவேண்டும். ஐந்தாவது தேவை இல்லாத காசைச் செலவழிக்கும் வகையில் நுகர்வோருக்குக் கடன் அட்டை, தனியார் கடன், தவணை முறை போன்ற வசதிகள். இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, நுகர்வோருக்கு வாங்க வேண்டும் என்ற அரிப்பை உண்டு பண்ணுவது. எனவே ஒரு நாட்டைச் சந்தையாக மாற்றித் தன் ஆளுமைக்குள் கொண்டுவர வேண்டுமெனில் அதை முதலில் இச்சூழல்களுக்குத் தயார் செய்ய வேண்டும். இதையெல்லாம் எவ்வாறு சந்தைச் சக்திகள் ஆழ்ந்த சூழ்ச்சியின் மூலம் செயல்படுத்துகின்றன என்று பார்ப்போம்.

வளம் சுரண்டல்

உற்பத்தி என்பது இயற்கை வளங்களை நுகர்ச்சிக்கு ஏற்ற பொருட்களாக மாற்றுவது. வாணிபம் என்பது உற்பத்திப் பொருட்களைக் காசாக மாற்றுவது. எனவே சந்தையாக இல்லாத நாடுகள் வளம் மிக்கவையாக இருக்கலாம் (எடுத்துக்காட்டாக வைரச் சுரங்கங்கள் நிறைந்த போட்சுவானா நாட்டைக் கூறலாம்). மலிவு விலை உற்பத்தி என்பது சந்தைக்கு மிகவும் பிடித்த ஒரு கொள்கையாதலால், வளம் நிறைந்த நாடுகளைச் சுரண்டுவது மிக முக்கிய திட்டமாகிறது. பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் வளம், சந்தை இரண்டும் நிறைந்தவை. ]

மக்களாட்சி

முதல் தேவையான அமைதியான சூழலுக்கும், இரண்டாவது தேவையான மக்கள் தாங்களே முடிவெடுக்கிறோம் என்று எண்ணுவதற்கும் ஏற்ற அரசியல் அமைப்பு மக்களாட்சி. இதனாலேயே அமெரிக்கா உலகெங்கிலும் மக்களாட்சியைப் பறைசாற்றவும், நிலைநிறுத்தவும் துடிக்கிறது. உலகின் பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு குறைவானவர்கள். மக்களாட்சியில் பண வலுவின் மூலம் பொய்களை உண்மைபோல் விற்பனை செய்து எளிய மக்களை ஏய்த்து விடலாம். பண வலுவின் மூலம் அரசியலில் நேர்மையற்றவர்கள் மட்டுமே பங்குபெறும் சூழலை உருவாக்கி விடலாம். இதனால் எந்தக் கட்சியாயினும் கயவர்களும், குண்டர்களும், ஊழலுக்குப் பாய்விரிக்கத் தயாராய் இருக்கும் அரசியல்வாதிகளும் மட்டுமே ஆட்சியில் இருப்பது சாத்தியம் என்றாக்கி விடலாம். இன்று இந்தியா மட்டுமின்றி எல்லாச் சந்தைகளிலும் (நாடுகளிலும்) மக்களாட்சி என்பது கொழுத்த செல்வந்தர்களால் மட்டுமே ஆடக் கூடிய ஒரு விளையாட்டு ஆகி இருப்பது நிதர்சனம். இதன் உண்மைப் பின்னணி மக்களாட்சி சந்தைப்படுத்துதலுக்கு மிக வசதியாக இருப்பதே. மக்களாட்சியில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், தேர்தலில் போட்டியிடலாம் என்ற ஒரு மாயத் தோற்றம் இருப்பினும், உண்மையில் பெரும் பணவலுவும், அதனால் பெறப்பட்ட அடியாள் வலுவுமே இன்று வெல்கின்றன. தெரிவுகள் என்று மக்கள் முன் வைக்கப்படுபவை எதுவும் மக்களால் விரும்பித் தேர்ந்தெடுக்க இயலாதபடி உள்ளன. இதற்கு ஒரு எளிமையான‌ உதாரணம் சொல்வதென்றால், குடிக்க நீர் வேண்டுமென்றால் பெப்சி அல்லது கோகோ கோலாக்களில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க இயலும். ஏனெனில் வேறு எதையும் விற்கும் கடை அடித்து நொறுக்கப்படும் அல்லது அந்நிறுவனங்கள் தங்கள் பொருள் வேண்டுமென்றால் வேறு பொருட்களை விற்கலாகாது என்று மிரட்டிப் பணியவைக்கப்படும்.

ஊடக ஊடுருவல்

சந்தை வெற்றிபெற மிக முக்கியமான இன்னொரு தேவை மக்களை வசியப் படுத்தும் விளம்பர‌ங்கள். இதற்கு இரண்டு கருவிகள் நம்நாட்டில் தீவிரமாக ஊடுருவி உள்ளன. ஒன்று தொலைக்காட்சி; இன்னொன்று இணைய தளம் (தற்போது காட்டுத்தீ போல் பெருகி வரும் அலைபேசியும் இதில் அடக்கம். வலைப்பூ இல்லாத அலைபேசி சாராயம் இல்லாத ஒயினைப் போல் எந்த போதையையும் ஏற்படுத்துவதில்லை. மூலை முடுக்கெல்லாம் WiFi எனப்படும் வலைப்பின்னல் படரவே எல்லா நிறுவனங்களும் துடிக்கின்றன). படித்த முட்டாள்களுக்கு இணைய தளமும், படிக்காத அறிவாளிகளுக்குத் தொலைக்காட்சியும் என்று இரு முனைத் தாக்குதல் நடக்கிறது. இன்று எல்லாத் தரப்பினரையும் கவரும் வண்ணம் பலவகைத் தொலைக்காட்சி அலைகள் உள்ளன - விளையாட்டு, நாடகம், சமையல், பயணம், அரசியல், செய்தி, வாணிபம், சினிமா, நகைச்சுவை, குழந்தைகள் படம், மிருகங்கள், சமயம், ஆன்மிகம் என்று எதைத் தொட்டாலும் அதற்கென‌ சிறப்பு அலைவரிசைகள் 24 மணி நேரம் ஓடிக் கொண்டிருக்கிறன. அவை எல்லாவற்றிலும் 1 மணி நேரத்திற்கு 16 நிமிடம் விளம்பரங்கள் நம் காதில் அறைந்து நம்மை மூளைச்சலவை செய்து கொண்டே இருக்கின்றன. பல சமயங்களில் 33% நேரம் (மணிக்கு 20 நிமிடம்) வரை விளம்பரங்கள் நம்மைத் தாக்குகின்றன. (2012ல் TRAI ஒரு மணிக்கு 12 நிமிடம் மட்டுமே விளம்பரங்கள் ஒலிபரப்பலாம் என்று ஒரு ஒழுங்காற்று விதியைக் கொண்டு வந்தது - ஆனால் தொலைக்காட்சி நிறுவனங்கள் இதை எதிர்த்து TDSATயிடம் ஒரு வழக்குத் தாக்கல் செய்து இவ்விதியைச் சாதாரணமாக அலட்சியம் செய்து விட்டன. பின்னர் சென்ற வருடம் இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு ஏதும் சொல்லாமல் அதை அப்படியே நிறுத்தி வைத்துள்ளது) .

நீதிமன்றங்கள் , சட்டங்கள்

நான்காவது தேவையான விற்பவருக்குப் பாதுகாப்பளிப்பதற்குத் தேவை நீதிமன்றங்கள். சவுதி அரேபியா போன்று உடனடியாகவும் மிகக் கடுமையாகவும் தண்டனை தரும் நாடுகள் சந்தைச் சக்திகளுக்கு முற்றிலும் ஒவ்வாதவை (உலகெங்கும் மனித உரிமைக்கும், மக்களாட்சிக்கும் குரல் கொடுப்பதுபோல் நடிக்கும் ஐக்கிய அமெரிக்க அரசு சவுதி அரேபியாவை எதிர்த்து ஏதும் செயலாற்றாமல் இருப்பது அதன் எண்ணை வளத்திற்கெனவே). எனவே காலம் தாழ்த்தப்படும் நீண்ட வழக்குகள், எண்ணற்ற ஓட்டைகள் கொண்ட சட்டங்கள், விலை கொடுத்தோ, மிரட்டியோ வாங்கக் கூடிய சாட்சிகள் என்று ஒரு வித செயல்படாத நீதித்துறையே சந்தைக்கு மிகவும் பிடித்தமானது! (1984ல் உலகின் மிக மோசமான தொழில்துறைப் பேரிடர் என்று வர்ணிக்கப்பட்ட‌ போபால் விழவாயுக் கசிவு 20,000 பேரைக் காவு வாங்கியது. 6 லட்சம் பேரை நிரந்தர உடற்குறைகளுடன் செய்தது. ஆனால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டெர்சன் எந்தத தண்டனையும் பெறாமல், இறந்தவர்களுக்கு ஆளுக்கு 12,000 ரூபாய் என்ற ரீதியில் 470 மில்லியன் டாலர் மட்டுமே நட்ட ஈடாகக் கொடுத்து இன்றுவரை தப்பித்துக் கொண்டுள்ளார் )

எங்கெல்லாம் இருக்கும் சட்டங்கள் தங்கள் வாணிபத்திற்குத் த‌டங்கலாக உள்ளதோ அங்கு சட்ட மீறல், வரி ஏய்த்தல், லஞ்சம் கொடுத்தல் போன்ற அளவில் தவறிழைப்பது (சிரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. 1300 கோடி அந்நிய முதலீடு என்று மார்தட்டின‌ மத்திய மாநில அரசுகள்; 10 ஆண்டுகளுக்குள் அந்நிறுவனம் 1300 கோடி வரி ஏய்ப்புச் செய்து தன் மொத்த நிறுவனத்தையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் விற்றது). அது போதாதெனில், சட்ட மாற்றங்கள், திருத்தங்கள் கொண்டு வரக் கடுமையாக முயற்சிப்பது (தற்போது சர்ச்சையில் உள்ள நிலப்பறிப்புச் சட்டம், விதைச் சட்டம், சட்ட வரைவு போன்றவற்றைச் சொல்லலாம்). இதற்கும் மக்களாட்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

பன்னாட்டு வங்கிகளும் கடன் வியாபாரிகளும்

ஐந்தாவது தேவையைப் பற்றி நாம் அதிகம் கூற வேண்டியதில்லை. தற்போது கடன் கொடுப்பது என்பது மிகப்பெரிய வாணிபம் ஆகி வருகிறது. ஆய்ந்து, அறிந்து பின் தயங்கித் தயங்கிக் கடன் கொடுத்த அரசு வங்கிகள் எல்லாம் லாபகரமாக இயங்கி வருகின்றன. ஆனால் “5 நிமிடத்தில் கடன் ஒப்புதல்” என்று கடனை வாரி வழங்கும் பன்னாட்டுத் தனியார் வங்கிகள் வாராக்கடன்களை மிக அதிக விழுக்காட்டில் வைத்துக் கொண்டு அல்லலுறுகின்றன. சராசரி நடுத்தர வர்க்கத்து இந்தியக் குடும்பம் மிகுந்த சிக்கனமும் சேமிப்பும் கடைப்பிடிக்கின்றது - இது நம் ரத்தத்தில் ஊறியது. இதை இளைஞர்களாக இருக்கும்போதே கெடுத்து விடப் பெரும் முயற்சிகள் நடக்கின்றன. எளிதாய்க் கடன் அட்டைகளைப் பழக்கப்ப்டுத்தி விட்டால் தம் வருமானத்திற்கும் அதிகமான செலவில் சராசரி மக்கள் சிக்கிக் கொள்வர். பள்ளிக்கூடத்தின் அருகில் சிகரெட், பீடி விற்பதுபோல் வேலைக்குச் சேரும்போதே கடன் வாங்கப் பழக்குகின்றனர். ஐக்கிய அமெரிக்க நாட்டில் ஒரு சராசரிக் குடும்பத்தின் கடன் அட்டைக் கடன் சுமார் 15,609 டாலர்கள். இது சராசரிக் குடும்பத்தின்குமரப்பாவிடம் கேட்போம்.ஆண்டு வருமானத்தில் 30 % - அல்லது 3 மாத சம்பளத்திற்கும் மேல் கடன் அட்டைக் கடன் உள்ளது! இந்த அவல நிலையை நோக்கித்தான் நம் வளர்ச்சியும் சென்று கொண்டிருக்கிறது.

நுகர்ச்சிப் பசி

இதை எல்லாவற்றையும் விட சந்தைப்படுத்துதல் வெற்றியடைய மிக அடிப்படைத் தேவை, எல்லாவற்றையும் வாங்க வேண்டும் என்ற சிந்தனையற்ற நுகர்ச்சியை பாமர மக்களிடையே உருவாக்கி அதை அணையாத் தீ போல் நெய்யூற்றிக் காப்பதுதான். இதுவே சந்தைகள் வெற்றியடைய மிக நூதனமானதும், மிக ஆழமானதும் ஆன சூழ்ச்சி.

முதலில் நிறைவும், தற்சார்பும் கொண்ட வாழ்முறையைப் போல் சந்தைக்கு எதிரி எதுவுமே இல்லை. இந்தியாவில் 4 லட்சம் கிராமங்கள் தற்சார்பு அடைந்துவிட்டால் 70 கோடிப் பேர் சந்தையின் பிடியில் இருந்து விடுபட்டு விடுவார்களே! இது அடுக்குமா? எனவே முதலில் மக்களிடம் தாங்கள் இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்க்கை தவறானது, பிற்பட்டது, காட்டு மிராண்டித்தன‌மானது என்ற கருத்தைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து அவர்களிடம் ஒரு அதிருப்தியை விதைக்க வேண்டும். அரசு, திட்டமிடுவோர், அறிவாளிகள் எனப்படும் நகரத்துச் சிந்தனையாளர்கள், ஊடகங்கள், திரைப்படம், விளையாட்டு போன்றவற்றில் பிரபலங்கள் என்று அனைத்துத் தரப்பினரும் மேல்நாட்டு வாழ்க்கையே உயர்ந்தது என்ற எண்ணத்தைத் தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.

மேலை நாட்டவர்கள் வாழும் வாழ்க்கையை மிட்டாய்க் கடையில் கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கிய வித விதமான தின்பண்டங்கள் போல் தொடர்ந்து தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் ஆகியவற்றில் காட்டி மூளைச் சலவை செய்ய வேண்டும். அதிகம் செலவழிப்போனுக்கு சமுகத்தில் கௌரவம், பெருமை ஆகியவை ஏற்பட வேண்டும் (இது ஏற்கனவே உள்ளதுதான் ; அதை விடாமல் ஊதிப் பெரிதாக்க வேண்டும்). அதிருப்தியும், பொறாமையும் முளைத்து விட்டால் அதன் பின் நுகர்ச்சிப் பசி வேகமாக வளர்ந்து விடும்.

இதற்கு அடுத்ததாக தர்மம், நியாயம் போன்ற - நம் பாட்டிகள் கதை சொல்லி ஊட்டி வளர்த்த - அடிப்படைக் கொள்கைகளை இளைஞர்களிடம் பேர்க்க வேண்டும். நல்ல மனித‌ர்கள் நல்ல சந்தை ஆக மாட்டார்கள். எனவே திருமணத்திற்கு முன் பாலுறவு, மணமுறிவை எளிதாக்குதல், பெண்களும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், ஓரினத் திருமணங்களைச் சட்ட மயமாக்கல், குழந்தைகளைப் பெற்றோரோ, ஆசிரியர்களோ தட்டிக் கேட்பது சட்ட விரோதமாதல் என்பன போன்று எவையெல்லாம் தர்மத்தைத் தாங்கிப் பிடிக்கிறதோ அவையெல்லாவற்றையும் தகர்த்தல் - இதுவும் ஒரு அடிப்படை சூழ்ச்சி. அதற்கேற்றவாறு சட்டங்கள் திருத்தி அமைக்கப்படும்.

இவ்வாறு பன்முனையிலும் வலை விரித்து நம்மைச் சூழ்ந்துள்ள சந்தைச் சக்திகள்தான் இன்று நம்மைப் பிடித்த மிகப் பெரிய பிசாசு - அன்றி சாதி, மதக் கலவரங்களோ, இயற்கைப் பேரிடர்களோ, அறியாமையோ, நோய்களோ, தொழில்நுட்பப் பற்றாக் குறையோ எதுவுமே இல்லை. இப்பிசாசிடம் இருந்து நம்மைக் காக்குமாறு பொருளாதாரக் கொள்கை இருக்க வேண்டும்; வேலியே பயிரை மேய்ந்த கதையாய் நம்மைச் சிக்க வைக்க அல்ல!

15

தேடலின் தெளிவு - சாட்சி

பல மாதங்களுக்கு முன்னர் தற்சார்பு வாழ்வியலைப் பற்றியும், அது எவ்வாறு ஒரு குமுக சேவை என்றும், இவ்வாழ்முறையையே எல்லா மதங்களும் தத்தம் மொழிகளில்/வழிகளில் பரிந்துரை செய்கின்றன என்றும் எழுதியிருந்தோம். இக்கட்டுரையில் இத்தேடல் என்பது எதனால் உருவாகிறது, அதன் உந்துதல் என்ன, அதைப் பின்பற்றுவதால் என்ன விளைவுகள் என்று ஆராய முற்படலாம். இதில் பல வடமொழிச் சொற்களும், சொல்லாடல்களும், சிந்தனைகளும் பயன்படுத்தப் பட்டுள்ளன - இதனால் நாம் ஏதோ மதப் பரப்புரைமை செய்கிறோம் என்று எண்ணிவிடல் ஆகாது. தற்சார்பு வாழ்வியல் என்பது அறிவின் தேடல்; அறிவுக்கு ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே மூட நம்பிக்கைகள்தான். மெய்ப்பொருள் காண்பதே அறிவு - சார்பற்ற, பிரிவினைகளற்ற உண்மையான தேடல் மொழி, மதம் மற்றும் பிற விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. பல்லாயிரம் ஆண்டுகளாக இத்தேடலில் ஈடுபட்ட அறிஞர்கள் வடமொழியில் பல விடயங்களை அழகாகக் கூறியிருப்பதால் அதை அப்படியே கையாள்வது நமக்கு எளிது அவ்வளவே!

யோக வாசிட்டம் என்ற நூலில் ” செயல் என்பது எப்போதுமே மனதால்தான் செய்யப் படுகிறது, உடலால் அல்ல. மகளை அணைக்கும் அதே கைதான் மனைவியையும் அணைக்கிறது” என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே அறம் என்பது சிந்தையைத் தூய்மையாக்குவதுதான் என்று அறியலாம். நம் வள்ளுவர் இதைத்தான் மிக அழகாக

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற‌

என்கிறார்.

மாசுடன் எதைச் செய்தாலும் அது வெற்று ஆராவாரத் தன்மையுடையது. மாசற்று இருந்தாலே அதில் எல்லா அறங்களும் அடங்கும். சரி எவ்வாறு மனத்தைத் தூய்மை செய்வது? அதற்கு முதலில் நம் மனத்தின் தன்மையைச் சற்று அறியவேண்டும். உறக்கம், கனவு, விழிப்பு என்ற மூன்று நிலைகளில் நாம் கருத வேண்டியது விழிப்பு நிலையைப் பற்றி மட்டுமே (மற்றவற்றைப் பற்றி நாம் விழிக்கும்போது அறியோம்!). விழித்திருக்கும் போது consciousness என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சித்தம் ஆட்சி செய்கிறது. இச்சித்தத்தைத் தெளிவாக்குவதே தூய்மைக்கு வழி. இதைத்தான் நம் முண்டாசுக் கவிஞன் பாரதி

எத்தனைக் கோடி படை கொண்டு வந்தாலும் மாயையே நீ

சித்தம் தெளிவெனும் தீயின்முன் நிற்பாயோ மாயையே

என்கிறான்.

இச்சித்தம் என்பது பல்வேறு சமயங்களில் பல்வேறு விதமாக இருக்கிறது. மிகுந்த சுயநலமாகவும், கெடு எண்ணங்களுடனும் இருப்பதும் இதே சித்தம்தான்; மிகவும் பெருந்தன்மையோடு கொடை, வள்ளன்மை, தியாகம் என்று இருப்பதும் இதே சித்தம்தான். இதை வடமொழியிலே பஞ்ச கோச உடல் என்று அழைக்கின்றனர். கோசம் என்றால் உறை என்று பொருள். உடல் என்பது ஐந்து உறைகளைக் கொண்டது: அன்ன மய கோசம், பிராண மய கோசம், மனோ மய கோசம், விஞ்ஞான மய கோசம், ஆனந்த மய கோசம் என்பவை இவை. உண்மையில் இது சித்தத்தின் 5 நிலைகளைக் குறிக்கிறது (levels of consciousness). இவை ஐந்திலும் சித்தம் மாறி மாறி உலவிக்கொண்டே இருக்கும். அவ்வக் கோசத்தில் இருக்கும்போது அதற்கேற்றாற்போல் சிந்தனை, சொல், செயல் இருக்கும். இவற்றைப் பற்றிச் சற்றுத் தெரிந்து கொள்வோம்.

அன்னமயத்தில் இருக்கும்போது உடல் ரீதியான நுகர்ச்சியும், தேடலும் ஓங்கி இருக்கும். உணவு, கலவி, போதைத் தேடல் போன்றவை ஓங்கி இருக்கும். இக்கோசத்தில் இருக்கும் சித்தம் எப்போதும் நிறைவற்றே இருக்கும்; இதன் நுகர்ச்சிப் பசி தாற்காலிகமாகத் தீர்ந்தவுடன் அடுத்தது என்ன என்று தேடத் துடிக்கும். பண்டைய ரோமானிய அரசர்களும் பிரபுக்களும் விருந்து என்று கண்டபடி தின்று விட்டுப் பின்னர் வாந்தி எடுக்க மருந்து சாப்பிட்டு அதன் பின்னர் மீண்டும் உண்பார்களாம்! உலகிலேயே மிக அதிகமாகப் பார்க்கப் படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சமையல் குறிப்புத்தான் என்று விளம்பரத் துறையில் உள்ள ஒரு நண்பர் கூறினார். பிரஞ்சு எழுத்தாளன் ஆல்பர்ட் காமு (Albert Camus) அமெரிக்காவைப் பார்த்து விட்டு, “நீங்கள் எப்போதும் உணவையும் கலவியையும் (food and fornication) மட்டுமே சிந்த்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினானாம். இப்போது உலகம் முழுவதும் எல்லா மக்களும் இக்கோசத்தில் இருக்கவே முயல்கின்றனர். அளவற்ற போதைப் பொருட்களின் விற்பனையும், நுகர்ச்சியும், பரவலான பாலுணர்வைப் பரப்பும் ஊடகங்களும் எல்லாம் இதற்குச் சான்று.

அடுத்த கோசமான பிராணமயம் என்பது விறுவிறுப்பான ஒரு அன்னமயம் என்று ஒருவாறு புரிந்து கொள்ளலாம். உடற்பயிற்சி, விளையாடுதல், பாதுகாப்பான நலமான உணவு, சுறுசுறுப்பாகச் செயல்களில் ஈடுபடுவது போன்றவை இக்கோசத்தின் குறியீடுகள்.இதில் சித்தம் அன்னமயத்தை விடச்சற்று லேசாக இருக்கும். பிராணன் என்றால் உயிர் என்று பொருள்.

மனோ மயம் என்பது சதா சிந்தனைகளில் ஈடுபடுவது. இதில்தான் பெரும்பாலான மானுடம் உழல்கிறது. “சிந்தைத் துயர் என்று ஒரு பாவி சினந்து சினந்து போர் முயங்க ” என்று தாயுமானவர் இந்நிலையை ஒரு போருடன் ஒப்பிடுகிறார். பாரதியும் “என்னைக் கவலைகள் தின்னத் தகாது என்று நின்னைச் சரண் அடைந்தேன்” என்கிறான். மனோமயத்தில் உள்ள சித்தம் பிறரைப் பற்றிப் பேசுவது, வம்பு, நாடகம், சினிமா பார்த்தல், கவலைப் படுவது, அச்சம், ஆணவம், பிறர் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் போன்ற வட்டங்களில் சுழன்று கொண்டு இருக்கும். மானுடத்தில் பெரும்பாலானோரின் சித்த வளர்ச்சி மனோமயத்தைத் தாண்டுவதே இல்லை. இதைத்தான் மாயா ஏஞ்சலோ என்னும் எழுத்தாளர் “பெரும்பாலான மக்கள் வளர்வதே இல்லை, வயது மட்டுமே மூக்கிறார்கள்” என்றார். (Most people do not grow up, they just age). இந்நிலையின் குறியீடுகள் மான, அவமானம், கவுரவம்,பொறாமை, கவலை, சினம், ஆசை, அச்சம், பிரிவினைச் சிந்தைகள் (நம் ஜாதி, நம் மதம், நம் மொழி போன்று) மற்றும் இவை எல்லாவற்றையும் தாண்டி வெகு விரைவில் சலிப்படையும் தன்மை (boredom) ஆகியவை.

நான்காவதான விஞ்ஞான மயகோசம் என்பது சித்தம் புத்திக்கூர்மையில் திளைத்திருப்பது. Intellect என்று இதை ஆங்கிலத்திலே அழைப்பார்கள். இதில் ஆழ்ந்த அறிவியல் தேடலும், பெரும்பாலும் தன்னை மறந்த நிலையும் (அன்னமயம், மனோமயம் போன்ற கோசங்களை அறவே கடந்த சித்தம்), உடல்ரீதியான தேவைகள் மிகவும் குறைந்தும் இருக்கும்.ஆனால் ஆணவத்தோடு கூடிய புத்திக்கூர்மை சித்தத்தைத் தூய்மைப்படுத்தாது. தன்னை மறந்த, உள்நோக்கம‌ற்ற விஞ்ஞான தேடலோ, அறிவுத் தேடலோ சித்தத்தை மிகவும் தூய்மைப் படுத்தி ஒரு உயர்நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஜகதீச சந்திர போஸ் போன்றோர் இதற்கு எடுத்துக் காட்டு. கிராமத்தில் சம்பளத்தைப் பற்றிக் கவலைப்படாத தச்சர்,கொல்லர், கொத்தனார், தையற்கலைஞர் போன்றோர் வேலை செய்யும் போது இந்தக் கோசத்திலேயே இருப்பார்கள்.

ஐந்தாவதான ஆனந்த மயகோசம் என்பது சித்தம் மிகவும் லேசாகி, மிகக் குறைந்த சிந்தனைகளுடன் ஏதோ ஒன்றில் லயித்து இருப்பது - நல்ல இசை, கவிதை, இயற்கை ரசனை, குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற நேரங்களில் நம் மனம் இக்கோசத்தில் இருக்கும். உண்மையான இறை பக்தியிலும் சித்தம் ஆனந்த மயமாக இருக்கும். சுயநலம் அற்ற சேவை, தியாகம், அன்பு, கொடை போன்றவை இக்கோசத்தின் குறியீடுகள். ஒவ்வொரு கோசத்திலும் தனக்கு முற்பட்ட கோசத்தை விட சித்தம் தூய்மையாகவும், லேசாகவும் இருக்கிறது. துயருறும்போது 'மனசு கனத்திருக்கு' என்ற சொல்லாடலில் இருந்து இதை நாம் அறியலாம். உற்றுப் பார்த்தால் நாம் வெற்றி என்று பொதுவாய்த் தேடும் அனைத்துமே முதல் மூன்று நிலைகளுக்கு மட்டுமே உணவ‌ளிக்கக் கூடியவை. நான்காம் மற்றும் ஐந்தாம் நிலைகளின் தேவையை நிறைவு செய்யப் பணத்தாலோ, புகழாலோ, ஆளுமையாலோ, பிற மனிதர்களாலோ இயலாது. இதை நாமே நம் சுயதேடல்கள் மூலமே நிறைவு செய்ய இயலும். எனவேதான் மனோமய கோசத்தைக் கடந்து சித்தம் வளரும் போது உலக விடயங்கள் பொருளற்றுப் போகின்றன. நம் சித்தத்தை உயர்த்துவதுதான் தற்சார்பு வாழ்வியலின் அடிப்படைக் கோட்பாடு. ஒவ்வொரு மனிதனும் உள்வளர்ச்சி அடையும் பொழுது அவன் சித்தம் வளர்ச்சியை விரும்புகிறது. தன் சித்தம் தற்போது உள்ள நிலை அவனுக்கு நிறைவை அளிக்காததால் ஒரு உந்துதலில் தேடுகிறான்.

பெரும் நிறுவனங்களில் லட்சங்களில் வாங்கும் சம்பளத்தைத் துறந்து, பள்ளி ஆசிரியராகவும், சிறு விவசாயி ஆகவும், தன்னார்வலர்களாகவும் ஆகும் பலரும் இந்தச் சித்த மேம்படுத்துதல் என்னும் உந்துதலினால்தான் இயக்கப்படுகிறார்கள். அவர்களைக் கிறுக்கர்கள் என்று புறந்தள்ளாமல், அவர்களின் சித்த வளர்ச்சியில் நாம் பங்கு கொள்ளாவிடினும் புரிந்து கொள்ளவேனும் வேண்டும். பிற மனிதர்களுடன் நாம் அன்றாடம் வரவு, செலவு, பேச்சு, செயல் போன்ற போக்குவரத்துக்களைக் கொண்டிருந்தால் சித்தம் சதா மனோமய கோசத்திலேயே இருக்கும். உட்தேடல் தீவிரமாகும்போது இவை சலிப்பூட்டும் - மனம் தனிமையையும், அமைதியையும், உயர் சிந்தனைகளையும் தேடும். இதனால்தான் மௌனமாய் இருப்பது, ஆளில்லா இடத்துக்குப் பெயர்வது போன்ற செயல்களைத் துறவிகள் தேடுகின்றனர். பிற மனிதர்களைக் கூடிய வரை சாராமல் நம் தேவைகளை நாமே நிறைவு செய்ய முற்படுவது தற்சார்பு வாழ்வியல். உணவு வாழ்வின் அடிப்படைத் தேவையாதலால் பெரும்பாலான தற்சார்பு விரும்பிகள், சிறு/குறு விவசாயிகளாக வடிவெடுக்கிறார்கள். எளிமை செய், எளிமை செய் என்று தோரோ சொன்னதும், செய்ததும் இதனால்தான்.

தற்சார்பு என்பது ஒரு கோட்பாடு மட்டும் அல்ல - அது ஒரு வாழ்முறை. வாழ்வே தவம் என்பதன் பொருள் இதுதான். உடல், மன‌ ரீதியான தேவைகளை எளிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் நாம் நம் வாழ்பளுவைக் குறைத்துக் கொள்கிறோம். “என்னைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்; என் நுகத்தடி எளியது, என் பாரம் லேசானது ” என்று ஏசுநாதர் கூறியது இதுதான். தற்சார்பின் மூலம் நாம் நம் சித்தத்தை லேசாக்கிக் கொள்கிறோம். இதற்குக் கடவுளோ, மதமோ, பெரும் பணமோ, அதிகப் படிப்போ, பிற மனிதர்களின் அங்கீகாரமோ எதுவுமே தேவையில்லை. நம்மை நாமே ஆராய்ந்து கொண்டு நம் சித்தத்தை உயர்த்திக் கொண்டிருந்தால் போதும். தோரோ சொன்னது போல ” மனிதன் தன் முயற்சியால் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள ஐயமற இயலும் என்ற உண்மையை விட எனக்குப் புத்துணர்ச்சி அளிப்பது எதுவுமே இல்லை”.

ஓயாத உள்விழிப்பே உன்னை விடுவிக்கும்

மாயா வினைப்பெருக்கே மற்றெல்லாம் - காயமிது

கொள்நோய் மருந்து கொளப்போமே, கற்பிதமாம்

தன்நோய்க்குத் தானே மருந்து


Powered by LionWiki. Last changed: 2015/12/05 13:41 Erase cookies Edit History