Main page Recent changes | Edit History | |
tmessays | ||
---|---|---|
தற்சார்பு இயக்கம் தோன்றிய கதை!(Edit)
Navigation Back to main page
2011 ஆகஸ்ட் மாதம், திண்டுக்கல் காந்திகிராமில், பல நண்பர்கள் கூடித் தமிழ்நாட்டை முற்றிலுமாக இயற்கை விவசாயத்திற்கு மாற்றி விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு மூன்று நாள் முகாம் ஒன்று அமைத்தனர். அதில் அடியேனையும் ஒரு பெரிய அறிவாளி என்று அழைத்திருந்தனர். 50 பேர் கூடி நடத்திய முகாமின் முடிவில் "தற்சார்பு இயக்கம்" என்று ஒன்று அமைப்பது என்று முடிவுசெய்யப் பட்டது. ஏற்கனவே தாளாண்மை உழவர் இயக்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை பாமயன், இயற்கை வேளாண்மை ஆசான் திரு.சுந்தரராமன், திரு. அரசு ஆகிய மூவரும் நடத்தி வந்தனர். அதில் தாளாண்மை என்ற உழவர் பத்திரிக்கை விட்டு விட்டு வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் புதிய ஒரு இயக்கம் ஆரம்பிக்கப் பட்டு, அதன் செயற்குழு உறுப்பினர்களாக 7 பேர் தெரிந்தெடுக்கப்பட்டு (தெரியாமல் எடுக்கப்பட்டு?) அதன் செயல் திட்டங்களில் ஒன்றாக தாளாண்மை இதழைத் தொடர்ந்து நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. சரியான செயல் திட்டங்களோ, நிதித் திட்டங்களோ இல்லாமல், தன்னார்வலர்கள் யாரும் தங்கள் தற்போதைய இடம், பொருள், செயல் எதையும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லாத சூழலில், நல்ல எண்ணங்களை மட்டுமே கொண்டு ஒரு இயக்கம் ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்பதற்குத் தற்சார்பு இயக்கம் ஒரு நல்ல சான்று! இது இப்படியிருக்க, பல இடறல்களுக்கிடையே ஒருவாறாக தாளாண்மை இதழ் மட்டும் ஒழுங்காக வந்து கொண்டிருக்கிறது (இடையில் சில மாதங்களை விழுங்கி விட்டு!).தாளாண்மை இதழ்களை வலைப்பூவில் படிக்க அதில் நான் முதலில் கட்டுரை ஆசிரியராக சில கட்டுரைகளை எழுதிப் பின் பாமயனுக்கு உதவியாய் உதவி ஆசிரியராய் இருந்து, பின் அவர் மிகவும் நேரமில்லாது இருக்கவே, முழுப் பொறுப்பையும் ஏற்று இப்போது ஆசிரியர் வேலை பார்த்து வருகிறேன்! நண்பர் அனந்து, அச்சிட்டு, வெளியிட்டு, சந்தாக்களை அதிகப்படுத்தி, தபால் ஆபீசில் சேர்ப்பது வரை எல்லாப் பொறுப்புக்களையும் கவனிக்கிறார். பல சமயம் இதழ் அச்சுக்குப் போகும் வரையில் ஒப்புக்கொண்ட கட்டுரைகள் வராத சூழலிலோ, அல்லது பக்கங்கள் பற்றாக் குறையினாலோ வெவ்வேறு புனைப் பெயர்களில் நான் திடீர் விருந்தாளிக்குத் தாளிக்கும் உப்புமா போல உப்புமாக் கட்டுரைகள் எழுதி வந்துள்ளேன், வருகிறேன். அவற்றைக் கீழே காண்க! கெடு முன் கிராமம் சேர் - உழவன் பாலா என்ற பெயரில் தாளாண்மை இதழில் வெளிவந்த தொடர் கட்டுரை. நகர (நரக?) வாழ்விற்கும், மையப் பொருளாதாரத்திற்கும் எதிரான ஒரு கட்டுரைத் தொடர்.
|
||
Powered by LionWiki. Last changed: 2014/01/16 14:31 Erase cookies | Edit History |