wei-u-wei

கர்மவலை(Edit)

நிஷ்காம கர்மம் என்பதும் wei-u-wei என்பதும் சுயநலம் இல்லாமல் சேவை மன‌ப்பான்மையுடன் செயலில் ஈடுபடுவது. யாருக்குச் சேவை செய்கிறோம், நாம் செய்வது சேவைதானா, அவர்களுக்கு அச்சேவை நன்மை பயக்கிறதா என்பதையெல்லாம் தெளிவுறுத்திக் கொண்ட பின்னர் சேவையில் ஈடுபடலாம். நம்மைச் சார்ந்து இருக்கிறவர்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற கற்பனையில் அளவற்ற பொருட்தேடல் நல்லதல்ல. மாயை என்பது எளிதாய் மய‌க்கத்தில் ஆழ்த்தக் கூடியது. பல நேரங்களில் அதன் இனிப்புக்கு நாம் மய‌ங்காவிடில், அது மருந்து போல் வந்து நம்மை மயக்கிவிடும்.

'வேலைகள் வேடத்து இயைவ வெளியிற்' செய்கிறேன் என்று என்னை நானே ஏய்த்துக் கொள்ளலாம். ஆனால் உண்மையில், 'உலகில் விளையாட' வேண்டிய தேவை எனக்குப் பல வாசனை ரூபங்களில் எஞ்சியிருப்பதால் அதற்கு என் குடும்பத்தை,வேலையை, தாளாண்மையை, சேவையை எல்லாம் காரணம் காட்டி என்னை ஏய்த்துக் கொள்கிறேன். நிஷ்காம கர்மம் என்பது பெயரளவில் உள்ளவரை, கர்மம் என்பது வலைதான். என்னால் அமைதியாய் என்னுடன் இருக்க இயலாததால், என் சித்தத்தைத் தெளிவிக்க இயலாததால், என் அடிப்படைத் தேவைகளுடன் நிறுத்திக் கொள்ள இயலாததால், சாக்கடை நீருக்கு அளவ‌ற்ற தாகம் கொண்டதால் நான் கர்மத்திலும், காமத்திலும், புலன் நுகர்ச்சியிலும் சதா உழல்கிறேன். இதுவே உண்மை - இதற்கு வேறு காரணங்கள் கற்பிப்பது ஏமாற்று வேலையே.

என்னுடையது என்று நான் யாரையெல்லாம், எதையெல்லாம் அணைத்துக் கொள்கிறேனோ அதெல்லாம் என்னுடன் ஒட்டி ஒரு வட்டம் உருவாகி விடுகிறது. அந்த வட்டத்திற்குள்ளேயே சுற்றிச் சுற்றி என்னை நானே சிறைப்படுத்திக் கொள்கிறேன்; மூச்சு முட்டும் போது பொழுதுபோக்கிற்குச் சினிமாவிற்குப் போவது போல், கோவிலுக்குப் போவது, ஆன்ம தேடலில் ஈடுபடுவது என்று சற்றுச் சுவாசித்து விட்டுப் பின் மீண்டும் நீரில் மூழ்கும் தவளை போல் என் வட்டத்துக்குள் நீந்துகிறேன்.

விடுதலை என்பது செயலில் இல்லை; சிந்தைத் தெளிவில் உள்ளது. மனத் துறவு என்பது 'எனது எனல் பொய், யான் எனல் பொய் எல்லாம் இறந்த இடம் காட்டும்' என்று தெளிவதில் மட்டுமே உள்ளது. நற்செயல் என்பது நற்சிந்தையே; பிறர் துயர் துடைக்க உண்மையான விருப்பம் இருந்தால் நான் என் சிந்தையைச் சதா மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அழுக்கு மனத்துடன் செயலில் இறங்கினால் கர்மம் ஒரு மீளா வலை ஆகிவிடும்.

14/03/2016


Powered by LionWiki. Last changed: 2016/03/13 23:11 Erase cookies Edit History